உட்பொருள் அறிவோம் 46: ஆன்மாவின் இருண்ட இரவு

By செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

விழித்தெழுதல், உண்மை யுணர்தல், தன்னையறிதல், சுயமுணர்தல், கடவுளை அடைதல், உள்ளுருமாற்றம் என்று பல பெயர்களால் அழைக்கப் பட்டுவரும் செயல்முறை (process), பல கட்டங்களைக் கொண்டது.

ஒவ்வொரு கட்டத்துக்கும் அதற்கேயான இலக்கணமும் சட்டகங்களும் உண்டு. மிகவும் சிக்கலான, பெரும் அயர்ச்சியும் வேதனையும் தரக்கூடியது இது. சொற்களால் இந்தச் செயல்முறையை விளக்க முடியாது. இதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.

மொழி, சமூக-பண்பாட்டுச் சட்டகத்தின் வரையறைக்குள் இயங்கும் உலகத்தைச் சார்ந்தது. அதன் பயன்பாட்டின் விளைவாக, அதன் தேவைகளுக்காக உருவானது. அதன் எல்லைகளுக்குள் இயங்குவது. ஆனால், விழித்தெழும் செயல்முறை பேரளவுக்கு இந்தச் சட்டகத்துக்குள் அடங்காது.

சமூக-பண்பாட்டுச் சட்டகத்தின் எல்லைகளுப்பால் கடந்து செல்வதே இந்தச் செயல்முறையின் முக்கிய அம்சம் ஆகும். இதன் காரணமாக, மொழி இந்தச் செயல்முறையை விளக்குவதற்குப் பயன்படாது. தொடக்கத்தில் இந்தச் செயல்முறையைத் தெளிந்தறிந்த சில ஞானவான்கள் இதன் பல கட்டங்களைக் கதைகளின் வழியாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

புராணங்களில் பல கதைகளில் வரும் சம்பவங்கள் இந்தக் கட்டங்களைப் பற்றியும் இந்தச் செயல்முறையின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. பல புராணக் கதைகள் இதன் வரைபடமாக இருக்கின்றன.

வரலாறு அல்ல

இந்தியப் புராணங்கள் மட்டுமில்லாது, கிரேக்கப் புராணமும், அரேபியக் கதைகளும் இந்த விஷயத்தைப் பற்றித்தான் பேசுகின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டுமே இந்தச் செயல்முறையை மிகவும் விவரமாக விளக்குகின்றன. இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டால் இன்று உலகில் நடக்கும் சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாமல் போகும். ஒன்று இவற்றைக் கதைகளாகப் படிக்கலாம்.

அல்லது இவற்றைக் குறியீடுகளாக (Symbols) வாசிக்கலாம். உருவகக் கதைகளாகவும் (Allegory) இவற்றை வாசிப்பதில் பயன் உண்டு. உண்மையிலேயே நடந்த வரலாற்றுப் பதிவுகளாக இவற்றைப் படிப்பது வெறும் குழப்பத்தையும் வன்முறையையுமே விளைவிக்கும். இவை வரலாறல்ல; உளவியல் உண்மைகள்.

வனவாசம் என்பது ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வருகிறது. பல்வேறு கதைகளிலும் வனவாசம் என்னும் நிகழ்வு வருகிறது. துருவன், வால்மீகி, விசுவாமித்திரர் போன்றோர் வனத்தில் வசித்துத்தான் தவத்தில் ஈடுபடுகிறார்கள். நாடு, காடு என்பவை இடங்கள் மட்டுமில்லை. அவை மனநிலைகளும்கூட. நாடு என்பது மனித முயற்சியால் பண்படுத்தப்பட்ட நிலம். காடு இயற்கையின் இயல்புநிலை. உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது நாடு என்பது நனவுமனம் என்னும் மேல்மனத்தையும், காடு நனவிலி என்னும் ஆழ்மனத்தளங்களையும் குறிக்கும்.

சரி, இதற்கும் விழித்தெழுதல் என்னும் செயல்முறைக்கும் என்ன தொடர்பு? நாம் மேல்மனத்தை மட்டும் நாம் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆழ்மனத்தளங்களை நமக்குப் பிறிதான ஒன்றாகப் பாவிக்கிறோம். அதனால், உள்ளிருந்து வரும் விஷயங்களை நமக்கு வெளியில் இருந்து வருபவையாகவே கருதுகிறோம். ஆழ்மன அசைவுகளை நம் செயல்பாடாகப் பார்க்காமல் நமக்கு நடக்கும் நிகழ்வுகளென்று காண்கிறோம்.

அரைக்கனவு நிலையில் வாழ்கிறோம்

நம்மில் பெரும்பாலானோர் அரைக்கனவு நிலையில்தான் வாழ்கிறோம். நனவுக்கும் கனவுக்கும் இடையில் உள்ள வேறுபாடு அறியாமல்தான் நமது வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நமக்குள் இன்னும் தெளிவான ‘நான்’ என்னும் சுயம் நிலைகொள்ளவில்லை.

ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு எண்ணம் தன்னை ‘நான்’ என்று உரிமை கொண்டாடுகிறது. அடுத்த கணம் வேறு ஏதோ ஒரு எண்ணம் அல்லது உணர்ச்சி தன்னை ‘நான்’ என்று நிலைநாட்டிக்கொள்கிறது. இது பெரும் குழப்பமான நிலை. இப்படித்தான் மனித வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

பலர் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டுச் சில சொற்களையோ கருத்துகளையோ பிடித்துக்கொண்டு அதில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று உணர்ந்தவர்களே மிகக் குறைவு. அப்படி அறிந்துகொண்டபின், ‘இங்கே அடிப்படையாகவே ஏதோ சரியில்லை,’ என்னும் உணர்வு தோன்றுகிறது.

இவ்வளவு காலம் மனம் பிடித்துவைத்துக்கொண்டிருந்த கருத்துகள், நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் எல்லாம் வெறும் மனப்பிம்பங்கள் என்னும் உண்மை உறைக்கிறது. அவற்றின் மீது வைத்திருந்த பற்று பட்டென்று விட்டுப்போய்விடுகிறது.

ஆனால், இப்போது காலடியில் தரை காணாமல் போய்விட்ட நிலை மனத்தில் ஏற்படுகிறது. ஆதாரமில்லாமல் இருப்பதான உணர்வு நெஞ்சில் எழுகிறது. அச்சம் மனத்தைப் பிடித்து ஆட்டுகிறது. ஆழமான துன்பம் விளைகிறது. இதுதான் வனவாசம்.

இது விழித்தெழும் செயல்முறையின் முக்கியமான கட்டம். இந்தக் கட்டத்தைக் கடந்து வராமல் மேலே அகவளர்ச்சி ஏற்பட வழியில்லை. இதை மேலைநாட்டு ஆன்மிக இலக்கியங்களில் ‘ஆன்மாவின் இருண்ட இரவு’ (Dark Night of The Soul) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தக் கட்டத்தில் வாழ்க்கையும் உறவுகளும் சொத்து சுகங்களும் சொந்த பந்தங்களும் பொருளிழந்து போய்விட்ட உணர்வு மனத்தை ஆட்கொள்ளும். பெரும் ஞானிகள் கூட இதை அனுபவித்திருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியோ பேரிழப்போ ஏற்படும்போது சிலருக்கு இந்த நிலை தோன்றும். பெண்ணாசை யில் உழன்று அவலத்தில் மூழ்கியிருந்த அருணகிரிநாதர், ஒரு கட்டத்தில் இந்தத் துன்பநிலையை உணர்ந்துள்ளார். இது பற்றி நிறையப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இருளாய துன்ப மருள்மாயை வந்து எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ என்கிறார் அருணகிரிநாதர்.

இதை இன்னும் விவரமாக அடுத்த வாரம் பரிசீலிக்கலாம்.
(பயணம் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்