எப்போதெல்லாம் தர்மம் மிகவும் சீர்கேடுற்று, அதர்மம் வலுத்தாலும் தாம் ஸத்துக்களைக் காப்பாற்றி அஸத்துக்களை அழிப்பதற்காக அவதாரம் என்ற பெயரில் ஜன்மா எடுப்பதாக பகவான் சொன்னார்.
‘பரித்ராணாய ஸாதூநாம்’ — “ஸத்துக்களைக் காப்பாற்றுவதற்காக” — என்று சொன்னதாலேயே, எத்தனைதான் அதர்மம் கையோங்கினாலும் அப்போதும் தர்மம் அடியோடு போய்விடாமல் தர்மத்தை அனுஷ்டிக்கும் ஸத்துக்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்கள் என்று ஆகிறது.
ப்ரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு” — ப்ருக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய — என்று எதற்காகச் சொன்னார்? இன்னோரிடத்தில் இதே கீதையில் சொல்லும்போதும்* இதே அர்த்தத்தில் “ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய” என்கிறார். இங்கே “அதிஷ்டாய” என்று சொன்னதையே அங்கே “அவஷ்டப்ய” என்கிறார். இரண்டிற்கும் “வசப்படுத்திக் கொண்டு” என்றுதான் அர்த்தம். ஆசார்யாள் அப்படித்தான் (இரண்டு இடத்திலும் “வசீக்ருத்ய” என்றே) பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.
இங்கே தாம் ஜன்மாக்கள் எடுப்பதைச் சொன்னவர், அங்கே தாம் மற்றவர்களுக்கு மறுபடி மறுபடி ஜன்மாக்கள் தருவதைப் பற்றிச் சொல்கிறார். (அங்கே,) கல்ப ப்ரளயத்தில் ஒடுங்கிப் போன எல்லா உயிர்களையும் பிரளய கால முடிவில் தாம் ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு மறுபடி வெளியிலே விட்டு மீண்டும் மீண்டும் பிறப்பிப்பதைச் சொல்கிறார் :
“நான் தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காக அவதார ஜன்மாக்கள் எடுக்கிறேன் என்று இந்த இடத்தில் சொல்லி அதோடு விட்டிருக்கலாம். அந்த இடத்திலும் “கல்ப பிரளயத்தில் ஒடுங்கிய உயிர்கள் கர்மாக்களை அனுபவிப்பவதற்காக, மறுபடியும் ஜன்மாக்கள் எடுக்கும்படி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டிருக்கலாம். இரண்டு இடத்திலும், “நான் பிரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு இப்படிச் செய்கிறேன்” என்று ஏன் சொல்ல வேண்டும்?
இங்கேதான் அவதார ரகசியம் வெளியா கிறது. அவதாரத்தைப் பற்றிய சூட்சுமமான உண்மை என்ன என்பது தெரிகிறது. அதைத் தெரியவைப்பதற்காகவே இப்படி ஒரு சொற்றொடரைப் போட்டிருக்கிறார்.
ஏன் ஜன்மம் எடுக்க வேண்டும்
அது என்ன என்று பார்ப்பதற்குப் பூர்வாங்கமாக ஒரு பெரிய கேள்வி: ‘சரி, லோகத்தில் தர்மம் குறைகிறது. பரமாத்மா பரம கருணையோடு, இது இப்படி வீணாகப் போக வேண்டாம். மறுபடி தர்மமாக வாழட்டும்’ என்று நினைக்கிறார். அப்படி அவர் ஸங்கல்பம் பண்ணிவிட்டாலே போதாதோ? தானாக பகவத் சங்கல்பம் நிறைவேறிவிட்டுப் போகிறது! அதை விட்டுவிட்டு ஜன்மா இல்லாத அவர் எதற்காக ஜன்மா எடுத்து, நாம – ரூபமில்லாதவர் அதுகளை வாரிப்போட்டுக்கொண்டு வந்து, ‘அவதாரம்’ என்று ஒன்றைப் பண்ணி, நம் மாதிரியே ரொம்ப யத்தனங்கள் பண்ணி சண்டை கிண்டை எல்லாம் போட்டு சம்ஹாரங்கள் பண்ணி, அதில் தாமும்கூட அடி, உதை வாங்கிக் கொண்டு அவஸ்தைப்படவேண்டும்? அவதாரத்தில் அவரும் நமக்கிருக்கிற எல்லாக் கஷ்டங்களும்தான் படுகிறார்! வெளியிலிருந்து வருகிற கஷ்டம் மட்டுமில்லை.
சச்சிதாநந்த ஸ்வரூபம் எனப்படும் அவருமே (அவதாரங்களில்) நம் மாதிரி கோபப்படுகிறார், அழுகிறார், சிருங்காரம் பண்ணுகிறார். இதெல்லாம் எதற்காக? தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணட்டும். ஆனால் அதை அவருடைய உச்ச ஸ்தானத்திலிருந்து கொண்டே, வைகுண்டமோ கைலாசமோ எதிலோ ஒன்றில் இருந்து கொண்டே, சங்கல்ப மாத்திரத்தில் பண்ணிவிட வேண்டியதுதானே? அவதாரம் என்று ஏன் ஜன்மா எடுக்கவேண்டும்?’ என்று கேள்வி வருகிறது.
சங்கல்பத்தினாலேயே சுவாமி என்னவும் செய்யமுடியும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் நன்றாக ஆலோசித்துப் பார்த்தால், இப்படி அவர் சங்கல்ப மாத்திரத்தில் எதுவும் செய்வதென்றால், முடிவாக என்ன பண்ண வேண்டிவரும் தெரியுமா? ‘சிருஷ்டியே வேண்டாம்’ என்று ஒரேயடியாக ‘குளோஸ்’ பண்ணத்தான் சங்கல்பிக்க வேண்டிவரும்! ‘சிருஷ்டி இல்லாமல் போகக் கடவது’ என்று ஒரே சங்கல்பமாகப் பண்ணிவிட்டு அவர் பாட்டுக்கு நிம்மதியாக இருந்துவிட வேண்டியே வரும்!
அவர் மனம், அவர் சித்தம் நமக்குத் தெரியவே தெரியாது. எத்தனை யோசித்தாலும் புரியவே புரியாது. தான்பாட்டுக்கு ‘ஏகமேவாத் விதீயம்’ (இரண்டற்ற ஒன்று) என்று இருந்துகொண்டிருக்காமல் சிருஷ்டி என்று எதற்காகப் பண்ணணும் என்று நமக்குத் தோன்றினாலும், எதற்காகவோ பண்ணித்தானே இருக்கிறார்?
தர்மப்படி நடக்கட்டும்
தர்மம், அதர்மத்தை அழித்து விடும்படியான ஒரு நிலை வரும்போது ஸ்வாமி, ‘தர்ம ஸம்ஸ்தாபனம் நடக்கட்டும்’ என்று சங்கல்பம் பண்ணுவதாக வைத்துக் கொள்வோம். இந்த தர்ம ஸம்ஸ்தாபனம் சாசுவதமாக நிலைத்து இருக்கட்டுமென்று அவர் சங்கல்பிக்க முடியுமா? முடியாது.
ஏனென்றால் இப்படி லோகம் பூரா ஒரே தர்மமயமாகி அப்படியே இருந்து கொண்டிருந்தால் எந்த ரச பேதங்களுக்காக அவர் இப்படி விசித்ர விசித்ரமாக ஜீவ ஸ்ருஷ்டியை உண்டாக்கியிருக்கிறாரோ அதுவே இல்லாமல் போய்விடும்! லீலை, விளையாட்டு என்றால் எதிரெதிர்க் கட்சிகள் tug-of-war இழுத்துக்கொண்டு, எதிரெதிராக இரண்டு கட்சிகள் பந்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் உதைத்துக் கொண்டு, விழுந்து வாரிக்கொண்டு, வெற்றி-தோல்வி, ஏமாற்றம்-எதிர்பார்க்காத அதிருஷ்டம், கோபம்-சந்தோஷம், அழுகை-குஷி என்று பலவித உணர்ச்சிகளில் மாட்டிக்கொண்டால்தானே விறுவிறுப்பா யிருக்கும்? ‘லீலா நாடகம்’ என்றால் நாடகத்தில் நவரசமும் இருக்கணுமோ இல்லியோ? சர்வ ஜனங்களும் தர்மானுஷ் டானம் பண்ணிக்கொண்டு சாந்தர்களாகி அப்படியே சாச்வதமாயிருந்து விட்டால் அதில் லீலா விசித்ரம் ஏது? நாடகரஸம் ஏது?
சிருஷ்டியின் லீலை
சிருஷ்டி லீலை அவருக்கு வேண்டியிருப்பதால், சாசுவதமாக தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ண வேண்டுமென்று நினைக்கமாட்டார். இதனால்தான் லோகம் சாசுவதமாக தர்மத்திலேயே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்று சங்கல்பிப்பதற்குப் பதில், அவர் சிருஷ்டியையே குளோஸ் பண்ணிவிட நினைப்பார் என்று சொன்னது.
எல்லாம் அவர் சங்கல்பம்
எல்லாமே அவர் சங்கல்பந்தான். ஆனால் காரிய ரூபத்தில் ஒவ்வொரு கருவி பண்ணினதாகக் காட்டுகிறார். ஓரொரு சந்தர்ப்பத்தில் அதர்மம் ஓங்குகிறதென்றால் அதுவும் அவர் சங்கல்பந்தான்.
தர்மம் குறையும்போது அதை அபிவிருத்தி செய்வதற்காகத் தன் தூதர்கள் மாதிரியான மகான்களைக் கருவியாக அனுப்புவான். அதுவும் பலிக்காது என்கிற கட்டத்தில் தானே தன் கருவியாகி அவதாரம் எடுப்பான்!
(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago