உயிர் வளர்க்கும் திருமந்திரம் 109: பேரானந்தத்தின் பெருவெளி

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

இறைக்குச் சொல்லப்படுகிற எட்டுக் குணங்களில் ஒன்று வரம்பில் இன்பம் உடைமை. நாம் பட்டுக்கொள்கிற இன்பங்கள் எவையும் வரம்புக்கு உட்பட்டவை; ஆகவே சிற்றின்பங்கள். இறையின் இன்பமோ வரம்புக்கு அப்பாற்பட்டது; ஆகவே வரம்பில்லாத பேரின்பம். எங்கேயும் எப்போதும் இன்பத்தில் இருப்பதால், இறை நித்தல் இன்பம் (நித்தியானந்தம்) ஆகிறது.

நித்தியானந்தம் எனப்படும் நித்தல் இன்பமாகிய சிவத்துக்கு எது வீடு என்றால் மாற்று எண்ணமின்றிக் கைலாசம் என்பார்கள். வரம்பில்லாத பேரின்பத்தில் திளைக்க விரும்புகிற சைவர்கள் அடைய விரும்புகிற பதவி கைலாச பதவி என்பது ஒரு புறமிருக்க, பதவி பதவி என்று பதறித் தவிக்கும் சிற்றின்ப விரும்பிகள் ‘வேண்டாம்’ ‘வேண்டாம்’ என்று மறுதலிக்கும் ஒரே பதவியும் கைலாச பதவிதான் என்பது நகைமுரண்.

என்னைப் பேணும் அம்மை

அதிருக்கட்டும். ‘போராடும் வேலை இல்லை; யாரோடும் பேதம் இல்லை; ஊரோடும் சேர்ந்துண்ணலாம்’ என்பதால் பேரின்ப நாட்டம் உள்ளவர்கள் கைலாசத்துக்குப் போக விரும்புகிறார்கள்; முயற்சியும் செய்திருக்கிறார்கள். நாயன்மார்களில் அம்மை, அப்பன் என்று சிறப்பிக்கப்பட்டவர்கள் காரைக்கால் அம்மையும் திருநாவுக்கரசு அப்பரும். இருவருமே கைலாசம் போக முயன்றிருக்கிறார்கள். காரைக்கால் அம்மை கைலாசத்தில் கால் பதிக்கலாகாது என்று தலையால் நடந்து போயிருக்கிறாள். ‘இது யார் இந்தப் பேய்?’ என்று இமயவல்லியாகிய இறைவி கேட்க, இறைவன் சொன்னான்:

வரும்இவள் நம்மைப் பேணும்

அம்மை காண்! உமையே! மற்றுஇப்

பெருமைசேர் வடிவம் வேண்டிப்

பெற்றனள் என்று பின்றை

அருகுவந்து அணைய நோக்கி,

‘அம்மையே!’ என்னும் செம்மை

ஒருமொழி உலகம் எல்லாம்

உய்யவே அருளிச் செய்தார்.

(பெரிய புராணம், காரைக்கால் அம்மையார் புராணம், 58)

‘இவள் என்னைப் பேணும் என் அம்மா. எனக்குத் தாயாக இருக்கவென்றே பேயாகிப் பெருமை கொண்டாள்’ என்று சொன்ன இறைவன் காரைக்கால் பேயின் அருகில் வந்து பார்வையால் அணைத்து ‘அம்மா’ என்றான். உலகனைத்தையும் உய்விக்கும் ஒரு சொல்.

‘என்னம்மா வேண்டும்?’ என்றது கடவுட்பிள்ளை; ‘நீ ஆடும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்’ என்றாள் அம்மை; தன்கூடவே கைலாசத்தில் இருத்திக்கொள்ளாமல் ‘திருவாலங்காட்டிலிருந்து பார்த்துக்கொள்’ என்று அனுப்பிவைத்தது கடவுட்பிள்ளை.

அம்மைக்கு நிகழ்ந்ததே அப்பருக்கும் நிகழ்ந்தது. கால் தேயக் கைலாசம் போனார் அப்பர். ‘அங்கம் குறைய இங்கு ஏன் வந்தாய் அப்பா? பார்க்க விரும்புவதைத் திருவையாற்றிலிருந்து பார்த்துக்கொள்’ என்று அனுப்பிவைத்தார் இறையர்.

வென்றவர் எவரும் இல்லை

கைலாசத்தைச் சைவம் மட்டுமே சிறப்பிக்கிறது என்று கருதவேண்டாம். பெருமாளின் பத்தாவது அவதாரமாகிய கல்கி, கைலாசத்தில் ஷம்பலா என்னுமிடத்தில் பிறந்து கலியுகத்தைக் கணக்கு முடித்துப் புதுயுகம் பிறப்பிப்பார் என்று விஷ்ணு புராணம் பேசுகிறது. திபெத்தியப் பவுத்தர்களின் காலச்சக்கரத் தந்திரமும் கைலாசத்தின் ஷம்பலாவைப் போற்றுகிறது. ஷம்பலா என்றால் பேரானந்தப் பெருவெளி.

ஷம்பலாப் பழங்கதைகளைப் பின்பற்றிச் சிலர் கைலாசத்தின் மேலேறவும் அளக்கவும் முயன்றிருக்கிறார்கள். வென்றார் யாரும் இல்லை. கைலாசத்தை ராவணன் தூக்க முயன்று தோற்ற பழங்கதையும் உண்டு. நித்தியானந்தமாகிய நித்தல்இன்பனாரின் வீடாகக் கருதப்படும் பேரின்பப் பெருவெளியாகிய கைலாசத்தை அடைய முயல்வார்க்குத் திருமூலர் ஒன்று சொல்கிறார்:

இவன்இல்லம் அல்லது அவனுக்குஅங்கு இல்லை;

அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா? அறியின்,

அவனுக்கு இவன்இல்லம் என்றுஎன்று அறிந்தும்

அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

(திருமந்திரம் 2650)

இவன் வீட்டை விட்டால் அவன் வேறு எங்கே இருப்பான்? அவனுக்கென்ன வேறு வீடா இருக்கிறது? அவனுக்கு வீடாக இருப்பது இவன்தான் என்று அறிந்திருந்தும் அவனைப் புறத்தே தேடித் திரியலாமா? பிடி கிட்டவில்லை என்று புலம்பலாமா?

அவன், இவன், வீடு என்ற மூன்றில் அவன் என்றது இறையை; இவன் என்றது உயிரை; வீடு என்றது உள்ளத்தை. சிவனுக்கு இவன் வீடு (வாழிடம்); இவனுக்குச் சிவன் வீடு (விடுதலை). தேடுகின்றவர்கள் வீடு பெறுவார்கள்.

(வீடு பெறுவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்