தெய்வத்தின் குரல்: வியாசர் அளித்த கொடை

By செய்திப்பிரிவு

கிருஷ்ண பரமாத்மா லோகத்தைவிட்டுப் போனவுடன் லோகம் முழுவதிலும் கலியின் இருட்டு வீரியத்துடன் பரவக்கூடிய நிலைமை ஏற்பட்டது. வரப்போகிற அதர்ம இருட்டில் வேதம் என்கிற தீபம் சில இடங்களிலாவது அணையாமல் இருக்கச் செய்ய வேண்டுமே என்று ஒரு மகா பெரியவர் விசாரப்பட்டு அதற்கான காரியங்களில் இறங்கினார்.

கலிகால மனுஷ்யர்களுக்கு வேதம் முழுவதையும் படிக்கிற சக்தி இருக்காது என்று அவருக்குத் தெரியும். கலிகாலத்திலும்கூட தர்ம மார்க்கப்படி இப்படிச் சிறிது க்ஷேமம் எல்லா ஜீவராசிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் தனது அபாரக் கருணையினால் நினைத்தார். இதற்காகக் கலிகாலத்தில் வரப்போகிற அற்ப சக்தர்களுக்கு ஏற்றபடி, அதுவரை கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்களை நாலாகப் பிரித்தார். தம் சிஷ்யர்களில் பைலர் என்கிறவருக்கு ரிக்வேதத்தையும் வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்கு ஸாம வேதத்தையும், ஸுமந்துவுக்கு அதர்வண வேதத்தையும் உபதேசித்தார். “உங்களிடம் இந்த பெரிய சொத்தை ஒப்படைத்தேன். வேதத்தின் இந்த ஒவ்வொரு சாகை (கிளை) யையும் சிஷ்யப் பரம்பரை மூலம் ரக்ஷித்து வர ஏற்பாடு பண்ணுங்கள்” என்று அந்த நாலு சிஷ்யர்களை ரோந்து சுற்றுகிற மாதிரி அனுப்பிவைத்தார்.

கலியுக ஆரம்பத்தில் லோக ரக்ஷணத்துக்காக வேதத்தை இப்படிக் காத்துத் தந்த அந்த மகா பெரியவரைத்தான் ‘வேத வியாசர்’ என்கிறோம். ‘வியாஸ’ என்றால் ‘பகுத்து வைப்பது’ என்று அர்த்தம். வேதத்தை நாலாகப் பகுத்தவர் வேத வியாசர்.

கிருஷ்ணரும் வியாசரும் வேறல்ல
அவருடைய இன்னொரு பெயர் பாதராயணர். தீவில் (த்வீபம்) பிறந்ததால் அவருக்கு ‘த்வைபாயனர்’ என்றும் ஒரு காரணப் பெயர் உண்டு. அவர் சியாமள வர்ணமாதலால் ‘கிருஷ்ணர்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘கிருஷ்ணத்வைபாயனர்’ என்று சேர்த்தே சொல்வார்கள் – கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து வித்தியாசம் தெரிவதற்காக.

வாஸ்தவத்தில் அவரும் கிருஷ்ண பரமாத்மாவும் வேறல்ல. வேத வியாசர் மகாவிஷ்ணுவின் அம்சாவதாரம்தான். பிற்காலத்தில் நம் ஆதி சங்கர பகவத்பாதாளுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டாக அவரிடம் கோபித்து அவரோடு விவாதச் சண்டை போடுவதற்காகக் கிழப்பிராமணராக வியாஸர் வந்தார்.

இருவரும் உக்கிரமாக வாதப் பிரதிவாதம் செய்தபோது, ஆசாரியாளின் சிஷ்யர் பத்மபாதருக்கு இரண்டு பேரும் உண்மையில் யார் என்று ஞானதிருஷ்டியில் தெரிந்து, ‘சங்கர சங்கர ஸாஷாத்; வ்யாஸோ நாராயண ஸ்வயம்’ என்று அவர் சொன்னதாகச் சுலோகம் இருக்கிறது. ‘முனிவர்களில் நான் வியாஸர்’ என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார்.

தக்ஷிணாமூர்த்தி ஆதி குரு என்றாலும் அவர் பேசாத குரு. பேசி உபதேசிக்கிற குரு என்று வருகிறபோது, நம் அத்வைத வேதாந்த ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் முதல் குரு, சாக்ஷாத் நாராயணன்தான். அப்புறம் அவரது பிள்ளையான பிரம்மா. அப்புறம் பிரம்மாவின் பிள்ளையான வசிஷ்டர்.

வசிஷ்டருக்குப்பின் அவருடைய புத்திரரான சக்தி. சக்திக்குப் பிறகு, அவரது புத்திரரான பராசரர். பராசரர்தான் விஷ்ணு புராணம் எழுதி உபகரித்தவர். இவருடைய புத்திரர்தான் வியாஸர். வியாஸருக்குப் பின் நம் சம்பிரதாயத்தின் குரு அவருடைய புத்திரரான சுகர்.

இப்படி வியாஸர் குரு பரம்பரையில் முக்கியமாக இருக்கிறார். அவரை விஷ்ணு என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? ‘குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:’ என்று திரிமூர்த்தியாகவும் அல்லவா குருவைச் சொல்கிறோம்?

இப்படியே வியாசரை மும்மூர்த்தியாகவும் வர்ணிக்கிற ஒரு சுலோகம் இருக்கிறது. அது ‘நெற்றியில் கண்ணில்லாவிட்டாலும் இவர் சிவன்தான். நாலு முகமில்லாவிட்டாலும் இவர் பிரம்மாதான். நாலு கையில்லாமல் இரண்டே கையுடன் இருந்தாலும் இவர் மஹாவிஷ்ணுதான்’ என்று சொல்கிறது.

வியாசரைவிட நமக்குப் பரம உபகாரம் செய்த இன்னொருவர் இல்லை. அவர் வேதங்களை விபாகம் செய்ததோடு நிற்கவில்லை. வேதங்களைச் சில பேர்தான் ரொம்பவும் நியம ஆசாரங்களோடு ரக்ஷிக்க முடியும். ஆனால் வேதத்தின் தாத்பரியமான அகிம்ஸை, சத்தியம், தர்மம் முதலியவை சகல ஜனங்களுக்கும் தெரிந்து, அவர்கள் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்று மிகுந்த கருணை கொண்டார் வியாசர். நுண்ணிய வஸ்துவை பூதக்கண்ணாடியால் காட்டுகிறது போல் – பதினெட்டுப் புராணங்களையும், ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தையும் எழுதி அநுக்கிரகம் செய்தார் ஸ்ரீ வியாச பகவான்.

பாரதமும் புராணங்களும்
ஈசுவரன், விஷ்ணு, அம்பாள், சுப்பிரமணியர் என்று ஒவ்வொரு தேவதையைப் பற்றியும் ஒவ்வொரு புராணமாகக் கொடுத்தார். சமீப காலம் வரையில் நம் தேசத்தில் எழுதப் படிக்கத் தெரியாத கிராம ஜனங்கள்கூடப் பொய், புனைசுருட்டு, திருட்டு, லஞ்சம் இவற்றுக்குப் பயந்து, கூடியவரையில் ஒழுக்கத்தோடு, தெய்வ பக்தியோடு, திருப்தியோடு இருந்து வந்தார்கள் என்றால், அதற்கு முக்கியமான காரணம் வியாச பகவானின் பிரசாதமான பாரதமும் புராணங்களும்தான்.

இவ்வளவு செய்ததோடு பரம சத்தியமான பிரம்ம தத்துவத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிற பிரம்ம சூத்திரத்தையும் தந்தார் ஸ்ரீ வியாஸர். பிரம்ம வித்தையில் அவருக்கு சிஷ்யர் அவரது புத்திரரான சுகப் பிரம்மம்.
புராணங்களையும் மகாபாரதத்தையும் அவரிடமிருந்து உபதேசம் பெற்று லோகத்தில் பிரசாரம் பண்ணினவன் சூதர் – தேரோட்டி வகுப்பில் பிறந்தவர். மகா பக்திமான். புத்திமான்.

பிரம்மசூத்திரத்துக்குச் சங்கரர் (அத்வைதம்) , ராமாநுஜர் (விசிஷ்டாத்வைதம்) , மத்வர் (த்வைதம்) ,  கண்டாசாரியர் (சைவ சித்தாந்தம்) வல்லபாசாரியார் (கிருஷ்ண பக்தி மார்க்கம்) எல்லோரும் தத்தம் சித்தாந்தப்படி பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள்.

வியாசர் இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக இருக்கிறவர். ஆஞ்சநேயர், அசுவத்தாமா, மகாபலி இவர்கள் மாதிரி இப்போதும் சிரஞ்ஜீவியாக அநுக்கிரகம் பண்ணி வருகிறார்.

(தெய்வத்தின் குரல் முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்