கரு.ஆறுமுகத்தமிழன்
சிவத்தைப் பேசுதல் எப்படி நிகழும்? சிவத்தைப் பேசுதல் என்பது தான் பெற்ற செம்பொருட் பேற்றைப் பேசுதல். அந்தப் பேச்சு புரிகிற மொழியில் நிகழாது. பேச்சில் விழும் சொற்கள் தெரிந்த சொற்கள்தாம்; பொருள்தான் புதிர்.‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தொல்காப்பியம்.
ஆனால், சொற்கள் ஒற்றைப் பொருள்களை மட்டுமே குறித்து நிற்பன அல்ல. காலத்தாலும், கருதுபவரின் நிலையாலும் சொற்கள் பொருள் மாற்றம் பெறுகின்றன. ‘அம்மா’ என்ற சொல்லை மகன் சொல்கையில் அதன் குறிப்பொருள் ஒன்று; யாசகம் எடுப்பவர் சொல்கையில் இன்னொன்று; காயம்பட்டவர் கதறிச் சொல்கையில் வேறொன்று. சொல்லைப் பற்றிப் பேசுகையில் தொல்காப்பியர் சொல்கிறார்:
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.
(தொல். சொல். பெயரியல், 2)
சொல்லினால் ஆவது என்ன? ஒரு சொல் தன்னைக் காட்டி நிற்கும்; தான் குறித்து நிற்கும் பொருளையும் காட்டி நிற்கும். அதன் சொன்மை (சொல்+தன்மை) பார்க்கையில் பொருண்மை (பொருள்+தன்மை) மறைந்து நிற்கும்; அதன் பொருண்மை பார்க்கையில் சொன்மை மறைந்து நிற்கும். ஒவ்வொரு சொல்லும் இவ்வாறு இருநிலை பெறும். தொல்காப்பிய வெளிச்சத்தில் பார்க்க இந்தத் திருமந்திரம்:
மரத்தை மறைத்தது மாமத யானை;
மரத்தில் மறைந்தது மாமத யானை;
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்;
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.
(திருமந்திரம் 2290)
மரத்தில் செய்யப்பட்ட யானைச் சிற்பம்; அதை மரம் என்று பார்க்கையில் யானை மறைந்து நிற்கும்; யானை என்று பார்க்கையில் மரம் மறைந்து நிற்கும். உலகம் தானே உருவாகி இயங்குவதாகப் பார்த்தால் பரம்பொருள் மறைந்து நிற்கும்; பரம்பொருளே அதை உருவாக்கி இயக்குவதாகப் பார்த்தால் உலகம் மறைந்து நிற்கும்.பார்வைக் கோணத்தில் விரிகிறது பொருள். இது நிற்க.
தொல்காப்பிய வழியில் சொல்லையும் பொருளையும் தொடர்வோம்:
திரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இருபாற்று என்ப பொருண்மை நிலையே. (தொல். சொல். பெயரியல், 3)
பொருண்மை என்பது வெளிப்படையாக உணர்த்தும் தன்மை, குறிப்பால் உணர்த்தும் தன்மை என இருவகைப்பட்டது என்பது தொல்காப்பியம். சிவம் என்னும் செம்பொருட் பேற்றைப் பேசுதல் வெளிப்படைப் பொருளில் இயலாது; குறிப்புப் பொருளிலேயே இயலும். ஆகவே பார்வை மாறுபாடுகளுக்கு ஏற்பச் சொற்களின் பொருள்கோளில் மாறுபாடுகள் உருவாவது தவிர்க்க முடியாதது. திருமூலர் சிவச் செம்பொருளைப் பாழ் என்றும் பிற வகைகளிலும் சொல்ல முயல்வது அத்தகையதே. கீழ்வரும் திருமந்திரத்தைக் கருதுக:
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது;
நாரை படுகின்றாற் போல்அல்ல, நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.
(திருமந்திரம் 2911)
குளம் ஒன்று இருக்கிறது. கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்த குளம்; கோரை படர்ந்தது போதாது என்று ஆரைக் கொடியும் படர்ந்து கிடந்தது. எல்லாமாகச் சேர்ந்து குளத்தையே மூடி மறைத்துவிட்டன. புல்லும் கொடியும் படர்ந்து வெளிச்சம் புகாமல் மறைத்துவிட்ட இருட்டுக் குளத்துக்குள் நாரை பாய்வதுபோல் அல்ல நாதனார் பாய்வது; அவர் பாய்ச்சல் செதுக்குப்பாரை (புல் திருத்தும் கருவி) பாய்வதுபோல.
குளம் என்பது அறிவு; கோரைப் புல்லும் ஆரைக் கொடியும் ஆசையும் பாசங்களும்; ஆசைப் புல்லும் பாசக் கொடியும் அறிவுக் குளத்தை மூடி மறைத்து அதனை இருட்டாக்கிவிட்டன. அந்த இருட்டுக் குளத்துக்குள் நாரையும் பாய்கிறது; நாதனாரும் பாய்கிறார்.
நாரையின் பாய்ச்சல் குளத்தின் மேற்பரப்பில் தட்டுப்பட்ட மீனைக் கொத்திக்கொண்டு போவதற்கு. நாதனார் பாய்ச்சலோ தன்னையே செதுக்குப் பாரையாக்கிக் குளத்தை மூடிவிட்ட புல்லையும் கொடியையும் செதுக்கிச் சீர்திருத்துவதற்கு. சிவத்தைப் பேச வந்தவர்கள் இப்படித்தான் பேச முடியும். பேச்சில் சிவத்தைப் பார்த்தார்க்குச் சிவம்; அவத்தைப் பார்த்தார்க்கு அவம்.
(தொடர்வோம்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago