உட்பொருள் அறிவோம் 39: சொர்க்கத்தில் இடம் உண்டு

By செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

இகம் - பரம், இவ்வுலகம் - அவ்வுலகம், இம்மை-மறுமை என்றெல்லாம் சொல்கிறார்கள். இறந்த பின்னர் மறு உலகத்துக்குச் செல்வோம் என்ற கருத்து இருக்கிறது.

அந்த மறு உலகம் பற்றி ஒவ்வொரு கலாச்சாரமும் பல்வேறு விளக்கங்களைச் சொல்லியிருக்கின்றன. ஆனால் ஒன்று விடாமல் அனைத்துக் கலாச்சாரங்களும் வேறொரு உலகம் இருக்கிறது என்ற கருத்தில் மாறுபடவில்லை.

மரணத்துக்குப் பின்னர்

மரணத்துக்குப் பின்னால்தான் அந்த உலகத்தை அறிய முடியுமா? மரணம் தான் அந்த உலகத்துக்கு ஒரே வாசலா? மரணம் என்றால் உடல் சாவது மட்டும்தானா? அல்லது மரணம் என்பதற்கு வேறு பொருள் இருக்கிறதா? மரணத்துக்குப் பிறகு நாம் செல்லும் இடம் இப்போதே இருக்கிறதா? அப்படியென்றால் இப்போது உயிருடன் இருக்கும்போதே அந்த இடத்துக்குப் போக முடியுமா? அங்கே என்ன இருக்கும்?

அந்த இடம் இப்போதே இருக்கிறது. நாம் தினமும் அந்த இடத்துக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறோம்! தினமும் ஆழ்ந்து கனவற்றுத் தூங்கும்போது அங்கேதான் போகிறோம். அங்கே, நாம் அறிந்த உலகம் இல்லை. `நான்` என்று தன்னைக் கருதிகொள்ளும் ஆள் அங்கே இல்லை.

என்ன இருக்கிறது? அமைதி இருக்கிறது. எல்லையற்ற விரிவு இருக்கிறது. சக்தியின் நுண்ணிய கூத்து, உடலிலும் மற்ற பரிமாணங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காலம்-இடம், காரணம்-விளைவு, இவையேதுமற்ற எல்லையில்லாத அகவெளியில் நம் உயிருணர்வு அப்போது நிலைகொண்டிருக்கிறது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்கிறார் திருவள்ளுவர். விழித்துக் கொள்வார்கள் தூக்கமும் விழிப்பும் தானாக நிகழ்கிறது. நம் மேல்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை அந்த இயக்கம். அப்படியானால் விழித்திருக்கும்போது அங்கே போக முடியுமா? முடியும்.

விழிப்பு நிலை என்று நாம் சொல்வது முழுமையான விழிப்பு இல்லை. மனம் மட்டும்தான் அப்போது விழித்திருக்கிறது. நம் ஆன்மா உறக்கத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது. இதைத்தான் `மக்கள் அனைவரும் தூக்கத்தில் இருக்கிறார்கள். மரணத்தின்போது அவர்கள் விழித்துக்கொள்வார்கள்` என்கிறார் நபிகள் நாயகம்.

மரணத்துக்கும் உறக்கத்துக்கும் என்ன தொடர்பு? இரண்டு நிலைகளிலும் உலக அனுபவம் இல்லை. மனத்தின் இயக்கமும் இல்லை. `நான் ஒரு ஆள்` என்னும் நினைவு இல்லை. மரணத்தின்போது என்ன நடக்கிறது? என்ன நடக்க முடியும்? உடல் இல்லாமல் போவதால் புலனுணர்வு இருக்காது.

அதனால் உலகம் என்பது இருக்க முடியாது. மூளையின் செயல்பாடு இல்லாத காரணத்தால் நினைவுகள் கிடையாது. அதனால் நினைவுப்பதிவுகள் சார்ந்த மனம் கிடையாது. ஆனால் பருப்பொருள் சார்ந்திராத ஆன்மா அழிவற்று நிலைத்திருக்கும். அடிப்படை ‘நான்’ உணர்வு இருக்கும்; ஆனால் அது ஒரு ஆள் இல்லை. எல்லைகளோ உள்ளீடோ எதுவுமற்ற வெறும் உணர்வுவெளி அது.

உடல் இருக்கும்போதே அந்த நிலையை நாம் உணர்ந்துகொள்வது சாத்தியமா? ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுவாசத்தின் கதியில் கவனத்தைப் பதித்து, உடலைத் தளரவிட்டால் மனம் மெல்ல நிலைப்படும்.

அங்கே, நினைவுகள் அடங்கிப் போகின்றன. தொடர்ந்து எண்ணங்களை உண்டாக்கி நம்மைச் செயல்படச் செய்யும் மனச்சட்டகங்கள் அடங்கிப் போகின்றன. கவனம் தனக்குள் உள்வாங்கிப் போவதால் புலன்களின் வழியாகச் செயல்படுவதில்லை. அதனால் உலகப் பிரக்ஞை உருக்கொள்வதில்லை. உணர்வுவெளி காலியாக இருக்கிறது.

ஆனால், உள்ளே அமைதிவெளியில் அடிப்படையான ‘நான்’ என்னும் உணர்வு மட்டும் உருவமற்ற ஒரு படலமாக விரிந்திருக்கிறது. தூக்கத்தின்போது இங்கேதான் போகிறோம். விழித்திருக்கும்போதே இந்த நிலையை நாம் அடைந்து உணர முடியும்.

மரணத்தின்போதும் உடலும் மனமும் இல்லாமல் போகும்போது இதுதானே நிகழ முடியும்? உலக உணர்வு இல்லாமல் போகும்போது ‘இகம்’ இல்லாமல் போகிறது. அப்போது அதுதானே பரவெளி? ஆழ்நிலைத் தியானத்தின்போது நாம் அந்த இடத்தைத்தான் அடைந்து நிலைக்கிறோம். தொடர்ந்த பழக்கத்தில் இயல்பாக அந்த நிலை நிரந்தரமானதாக நிலைக்க முடியும்.

அனுபவத்தின் உருமாற்றம்

இகமும் பரமும் வெவ்வேறு இடங்கள் இல்லை. அவை ஒன்றுதான். இரண்டும் இங்கேயேதான் இருக்கின்றன. நாம் எங்கிருந்து பார்க்கிறோமோ அந்த இடம்தான் மாறுகிறது. பார்க்கும் கோணம் மாறுகிறது; பார்வையின் தன்மை மாறுகிறது. அதனால் அனுபவம் அடியோடு மாறிப் போகிறது. ‘உருவம் வெறுமையே; வெறுமை உருவமே’ என்பது புத்தர் வாக்கு.

புலன்களும் மனமும் உருவம் சார்ந்தவை. உருவமற்ற எதையும் மனத்தால் கிரகிக்க முடியாது. அதனால் உடலுணர்வும் மன இயக்கமும் இல்லாமல் போன அகநிலையில் இகம் என்று நாம் சொல்லும் அனுபவம் இல்லாமல் போகிறது. பிரபஞ்சத்தின் அடிப்படைத்தன்மையான உணர்வுவெளி மட்டும் திசைகளேதுமற்று விரிந்திருக்கிறது.

உலக அனுபவத்தின் அடிப்படையான இருப்புணர்வு காலமும் இடமும் உள்ளீடுமற்று நிறைந்து நிலைகொண்டிருக்கிறது. உலகம் இந்த உணர்வுவெளியில் மறைந்துபோகிறது. இதைத்தான் திருமூலர் மிக எளிமையான எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கிறார்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற்பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதற்பூதமே

என்கிறார் அவர்.

இந்த அடிப்படை உண்மை புரியாமல் போகும்போது, மரணத்தைப் பற்றிப் பல்வேறு கற்பனைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். மரணம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நம் மனங்களில் நிறைந்திருக்கின்றன. மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய மரணமும் நம்மைச் சேர்ந்தவர்களின் மரணமும் நம் மனங்களில் பெரும் கலக்கத்தை உண்டாக்குகின்றன. மரணம் ஒரு பெருவிழா என்றுதான் ஞானிகள் சொல்லியிருக்கிறர்கள்.

நம் பிரக்ஞையில் நான் காணும் உலகம் சுயத்தன்மையில்லாதது. நம் இருப்புணர்வைப் புலன்களும் மனமும் சேர்ந்து உருவாக்கும் உலகம் என்னும் வெறும் மனப்பிம்பத்தின்மீது பிரதிபலிக்கிறோம். அதற்குச் சுய இருப்பு இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இதுதான் மரண பயத்தின் அடிப்படை.

இதைத்தான் மாயை என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் நமது மனத்தில் நினைவு வரிசையின் அடிப்படையில் உருவாக்கி வைத்திருக்கும் சுய அடையாளம் பொய்யானது. நாம் அழிவற்ற, முதலும் முடிவுமற்ற ஆன்மா என்னும் உண்மை தெரியவரும்போது மரண பயத்திலிருந்து நாம் முற்றிலுமாக விடுபட முடியும்.

(விட்டு விடுதலையாகலாம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்