புனித பீட்டர்ஸ்பெர்க்கின் நாயகி

By செய்திப்பிரிவு

ரஷ்ய வர்த்தக சபையின் அழைப்பையேற்று 60 பள்ளிமாணவ, மாணவிகளுடன் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையங்களைப் பார்வையிடுவதற்கு சென்ற ‘இந்து தமிழ்’ செய்தியாளர் ஜெயந்தன் அங்குள்ள தேவாலயங்களை பார்த்துவந்து எழுதிய அனுபவக் கட்டுரை இது…

இன்றைய ரஷ்யாவுக்குச் சுற்றுலா செல்பவர்களை ஈர்க்கும் இரண்டு மிகப்பெரிய நகரங்கள் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க். மாஸ்கோ, பாரம்பரியம், நவீனம் இரண்டையுமே தன்னிடம் கொண்டிருக்கிறது என்றால், பீட்டர்ஸ்பெர்க் அப்படியே தலை கீழ். உலக நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை தன் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த ஜார் முடியாட்சியின் 500 ஆண்டு கால வரலாற்றை, அதன் புனித ஐசக் தேவாலய உட்புறம் நம் காட்சிக்கு வைத்திருக்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்த அரண்மனைகள், மன்னனுக்குப் படைகளை வழங்கிய பிரபுக்களின் மாட மாளிகைகள், தேவாலயங்கள், பொக்கிஷங்கள் நிறைந்து கிடக்கும் அருங்காட்சியகங்களைப் பொத்திப் பாதுகாத்துவரும் இந்நகரம், நவீனக் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் இன்றுவரை உறுதியாக நிற்கிறது.

ஜார் ரஷ்யாவின் தலைநகரம்

இன்றைய மாஸ்கோவிலிருந்து தரை மார்க்கமாக 700 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரமே ஜார் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. கிறிஸ்தவத்தின் ஆதித் திருச்சபையாகிய ரோமன் கத்தோலிக்கத்துடன் ஏற்பட்ட இறையியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் காரணமாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1054), கிழக்குத் திருச்சபைகள் சுமுகமாகப் பிரிந்து சென்று, தங்களை மரபுவழி கிறிஸ்தவப் பிரிவாகத் தகவமைத்துக்கொண்டன.

கிழக்கு மரபுவழி கிறிஸ்தவம் என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் மதமானது, இன்று உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாக விளங்குகிறது. இயேசுவுக்கு முதன்மை நிலையை வழங்கும் இம்மதப்பிரிவு, கத்தோலிக்கர்களைப் போலவே கன்னி மரியை இயேசுவுக்கு இணையான இடத்தில் வைக்கிறது. அதேநேரம் இயேசுவுடைய சீடர்கள் முன்வைத்த மரபார்ந்த இறையியல் தொடர்ச்சியையும் பின்பற்றுகிறது.

சோசலிஸ பொற்காலம் என்று வருணிக்கப்படும் சோவியத் ஒன்றியம் எழுந்து நின்ற காலக் கட்டத்தைத் தவிர்த்து, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தின் மீது நெருக்கமான செல்வாக்கைச் செலுத்தி வந்திருக்கிறது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம். அதை செயின்ட் பீட்டர்ஸ்பெர்க், மாஸ்கோ நகரங்களின் வரலாறும், அங்கே வானளாவ எழுந்து நிற்கும் தேவாலயங்களும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

மரியன்னையின் பேராலயம்

தன் உடலின் ரத்த நாளங்கள்போல், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் முழுவதும் நேவா நதி பல துணை ஆறுகளாகப் பிரிந்து பாய்வது இந்த நகரை ஈரமாக வைத்திருக்கிறது. நேவா நதியின் இரு கரைகளின் மீது மட்டுமல்ல, அதன் துணை ஆறுகளின் கரைகளை ஒட்டியும் பேராலயங்கள், தேவாலயங்கள், சிற்றாலயங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பெரும்பாலான தேவாலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலய அருங்காட்சியகங்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தின் வரலாற்றுக்குத் துணைநிற்கும் மிகப் பழமையான புனிதர்களின் ஓவியங்கள், ரீலிக் எனப்படும் அவர்களின் புனிதப் பண்டங்கள், சமயக் கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கின்றன. ஒவ்வோர் ஆலயமும் வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களைத் தன்னுள் வைத்திருக்கின்றன.

கன்னிமேரியின் புனித ஓவியம்

புனித பீட்டர்ஸ்பெர்க் நகரின் மையமாக இருக்கும் நெவ்ஸ்கி சாலையில் (Nevsky prospect) கஸான் பேராலயம் (Kazan Cathedral) வானளாவி நிற்கிறது. கத்தோலிக்க மதத்தின் தலைமையிடமாகிய ரோமின் வாடிகன் நகர புனித பீட்டர் பேராலயத்தை நினைவூட்டும் வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

கான்ஸ்டான்டிநோபிள் நகரத்திலிருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட கன்னிமேரியின் புனித ஓவியம் இங்கே பாதுகாக்கப்பட்டது. பின் அந்நியப் படையெடுப்பாளர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட அந்த ஓவியம் பின்னர் மீட்கப்பட்டது. அதிலருந்து நகலெடுக்கப்பட்ட ஓவியமே தற்போது இந்தப் பேராலயத்தின் வழிபாட்டு ‘சின்னமாக’ இருக்கிறது.

கஸான் தேவாலயம் இருக்கும் நெவ்ஸ்கி சாலையில்தான் உலகின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமான ‘ஹெர்மிட்டேஜ்’ மியூசியம் பரந்துவிரிந்து கிடக்கிறது. ஜார் அரசக் குடும்பத்தின் உடைமைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் மட்டுமல்ல; ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தின் வேரோடிய செல்வாக்கை இந்த அருங்காட்சியகத்தில் காணமுடியும்.

பீட்டர்ஸ்பெர்க்கின் எழுத்தாளுமை

நெவ்ஸ்கி சாலை என்றதும் ரஷ்ய இலக்கிய வாசகர்களுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும் பெயர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் எழுத்துக்காரரான இவர், நாவல், சிறுகதை ஆகிய தளங்களில் முத்திரை பதித்ததுடன், ரஷ்யாவின் நவீன தத்துவ வரலாற்றில் ஒரு தந்தையாகவும் பார்க்கப்படுபவர். அவரது படைப்புகள், தத்துவ, ஆன்மிகப் பின்புலங்களில் முன்வைக்கப்பட்டவை.

அவர் வசித்தது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில்தான். நெவ்ஸ்கி சாலையை அவரது ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பார். அவரது நாவலில் வரும் தெருக்களும் தேவாலயங்களும் இன்னமும் அங்கே அப்படியே இருப்பது, அந்த நாவலை வாசித்துவிட்டு, செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்ஸ் நகரத்துக்கு வரும் ரஷ்யர் அல்லாத சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஆன்மிக, தத்துவ விசாரம் கொண்ட தருணமாகவே அமைகிறது.

ஓர் அரசனும் பக்தியும்

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரைத் துறைமுகத்துடன் கூடிய ஒரு நவீன நகரமாக உருவாக்கியவர் ஜார் மன்னர், முதலாம் பீட்டர். கடல் வணிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் இந்த நகரத்தில் இரண்டு மிகப்பெரிய பேராலயங்களை எழுப்பினார். கடவுள் பக்திமிக்க அரசனாக, ஆர்த்தடாக்ஸ் வரலாறு அவரைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. அவர் எழுப்பிய ஆலயங்களில், பீட்டர் பால் துறைமுகக் கோட்டைக்குள் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது புனித பீட்டர் பால் பேராலயம்.

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்பேராலயத்தின் பீடமும் உட்கூரையும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டிருக்கின்றன. பீட்டர்ஸ்பெர்க்கில் பேரரசன் முதலாம் பீட்டர் எழுப்பிய மற்றொன்று புனித ஐசக் பேராலயம். கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தில், கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த கத்தோலிக்கப் புனிதரான ஐசக்கின் பெயரால் எழுப்பிய தேவாலயம் இது. உலகின் நான்காவது பெரிய ஆர்த்தடாக்ஸ் பேராலயமான இதன் உட்புறச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் புனித ஓவியங்களை நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

கஸான் கன்னிமரி பேராலயத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் வந்துவிடுகிறது ரத்த மீட்பர் தேவாலயம் (Chruch of the saviour on spilled blood). ஜார் மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் புரட்சியாளர்களால் 1881-ம் ஆண்டு கையெறி குண்டு வீசிக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட இடத்தில் அவரது மகன் மூன்றாம் அலெக்ஸாண்டர் எழுப்பிய தேவாலயம் இது. இன்று அருங்காட்சியகமாக மட்டுமே செயல்படுகிறது. புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை காண விரும்பும் யாரும், அதன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரித்தறிய முடியாதபடி தன் பக்தி இழைகளால் இறுகப் பிணைந்து வைத்திருக்கிறது ஆன்மிகம்.

- ஆர்.சி.ஜெயந்தன்,
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்