சுவடிகள் நூலகங்கள்

By செய்திப்பிரிவு

முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கும். இதிகாச புராணங்களும் ஸ்தல புராணங்களும் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் அவற்றில் இருக்கும். சுவடி பழுதாக ஆரம்பித்தால் மறுபடி புது ஓலைகளில் அவற்றை எழுத்தாணியால் ‘காப்பி’ பண்ணுவார்கள்.

பழுதான சுவடிகளை ஒரு பக்கம் சேர்த்து வைப்பார்கள். இப்படிச் சேர்ந்ததை எல்லாம் ‘பதினெட்டாம் பெருக்கு’ அன்றைக்குக் காவேரியிலோ வேறு புண்ணிய தீர்த்தங்களிலோ யதோக்தமாகக் கொண்டு போய்ப் போட்டு விடுவார்கள்.

கை ஒடிய இப்படி எழுத்தாணியால் ஓலை நறுக்குகளில் எழுதி எழுதி, எழுதினதைக் காப்பி பண்ணி நம் முன்னோர் நம் தாத்தா காலம் வரைக்கும் கொண்டுவந்து கொடுத்ததைப் பிற்பாடு காப்பி எடுக்காமலே காவேரியில் போட்டு விட்டு அதற்கும் சேர்ந்து “ஸ்நானம்” பண்ணிவிட்டார்கள். இதனால் இப்போதே அநேக புராணங்கள் மறுபடி நமக்குக் கிடைக்குமா என்ற ரீதியில் நஷ்டமாகி விட்டன.

புராணங்கள் மட்டுமில்லை. இதர சாஸ்திரச் சுவடிகளும்தான்! சேகரிக்க முடிந்த சுவடிகளையெல்லாம் எத்தனையோ சிரமப்பட்டு அலைந்து திரிந்து சேகரித்து சில லைப்ரரிகளில் சேர்த்து வைத்திருக்கிறது. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் லைப்ரரி, மெட்ராஸில் ஓரியன்டல் மானுஸ்க்ரிப்ட்ஸ் லைப்ரரி, அடையாறு லைப்ரரி இவற்றில் இப்படி நிறையச் சுவடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறது. அடையாற்றிலே தியாஸாஃபிகல் சொசைட்டிகாரர்கள் இதிலே செய்திருக்கிற பணி ரொம்பவும் உயர்ந்தது.

ஞானசம்பந்தரின் தேவார ஏடு, வைகையை எதிர்த்துக்கொண்டு கரையேறிய இடம் இன்றைக்கும் பாண்டிய நாட்டில் திருவேடகம் (திரு ஏடு அகம்) என்ற தலமாக விளங்குகிறது. அங்கே ஈச்வரனுக்குப் ‘பத்ரிகா பரமேச்வரர்’ என்று பெயர். இப்போது ‘பேப்பர்’ என்றால் காகிதம் என்பது ஒரு அர்த்தம்; ‘மாகஸின்’(சஞ்சிகை) என்றும் அர்த்தம். ‘மாகஸின்’ என்பதை ‘பத்திரிகை’ என்கிறோம். நேச்சரின் பேப்பரான இயற்கை பத்திரிகை கரையேறின ஊரில் ஸ்வாமியே ‘பத்திரிகா பரமேச்வரன்’ என்று ஜர்னலிஸ்ட் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்! ‘பத்ரம்’, ‘பத்ரிக’ என்றாலும் இலை என்றே அர்த்தம்.

அறிவுக்குக் கருவூலம்

பழைய காலத்தில் வெளிதேசத்திலிருந்து படையெடுக்கிறவர்கள் ஒரு தேசத்திற்கு விளைவிக்கிற மிகப் பெரிய அபாயம், அந்த தேசத்தின் லைப்ரரியைக் கொளுத்தி விடுவதுதான் என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஒரு தேசத்தின் பொருளாதாரத்துக்கு கஜானா எப்படியோ, அப்படி அதன் அறிவுக்குக் கஜானாவாக இருந்தது இந்த லைப்ரரிதான். கலாசார கஜானா என்று சொல்லலாம். இப்போது போல் அப்போது பிரிண்டிங் பிரஸ் இல்லாததால், பல பிரதிகள் கிடையாது. சில நூல்களில் ஒரே பிரதிதான் இருக்கும்.

எகிப்தில் அலெக்ஸான்ட்ரியா என்ற இடத்தில் அலெக்ஸான்டர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அநேகத் துறைகளில் உயர்ந்த புத்தகங்களைக் கொண்ட லைப்ரரியையும்; துருக்கியில் இஸ்தான்புல் என்று இப்போது சொல்லப்படுகிற கான்ஸ்டான்டிநோபிளில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியவர்கள் பல காலமாகப் பேணி வளர்த்த லைப்ரரியையும் பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டில் துருக்கர்கள் படை எடுத்தபோது இருந்த இடம் தெரியாமல் கொளுத்திவிட்டார்கள். பழைய சங்க நூல்களை சமுத்திரம் கொண்டு போய்விட்டது என்கிற மாதிரி இயற்கை உற்பாதமாக இல்லாமல், சத்ருக்களின் பண்பாட்டுக் குறைவால் அந்தத் தேசங்களில் பழைய அறிவு நூல்களில் பல வீணாகி விட்டன.

மெக்கென்சி செய்த பங்களிப்பு

இங்கிலீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களுக்கு எதிலும் ஆராய்ச்சி புத்தி அதிகம். இன்னொரு தேசத்து விஷயமானாலும் கொளுத்துவது என்று இல்லாமல், அதனால் தாங்கள் பிரயோஜனம் அடைய முடியுமா என்று பார்ப்பார்கள். ஜெர்மன் தேசத்தவர்களும் கலாச்சார ஆராய்ச்சி , மொழி ஆராய்ச்சிக்காக வந்து நம் நாட்டுச் சுவடிகளை எல்லாம் தேடித் தேடிப் பார்த்தார்கள்.

இதனால் நமக்கே பல புது சாஸ்திரங்களை இந்த அந்நிய தேசத்தவர்கள்தான் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். குறிப்பாக மெக்கென்சி என்பவர் சர்வேயர்-ஜெனரலாக இருந்தபோது ஊர் ஊராகப் போய் கிடைக்கக்கூடிய சகல ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்து, அப்போது இதற்காக அரசுத்துறை இல்லாவிட்டாலுங்கூட, அங்கங்கே படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு படிக்கப் பண்ணி, எல்லாவற்றையும் ஆவணமாகப் பாதுகாத்து வைத்ததைச் சொல்ல வேண்டும். மெக்கென்சியின் ஆள் கும்பகோணத்தில் நம் மடத்துக்குக்கூட வந்து விவரங்கள் சேகரித்துக்கொண்டு போயிருக்கிறார்.

வராகமிஹிரரின் ‘ப்ருஹத் சம்ஹிதை’ மாதிரியான ‘டைஜஸ்டுகள்’ நம் நாட்டின் அநேகத் துறை சாஸ்திரங்களையும் ஸயன்ஸ்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றன. சாஸ்திரங்கள், மற்ற வித்யைகள், நம்முடைய மருத்துவம், அறிவியல் எல்லவாற்றுக்கும் பழைய சுவடிகள் இருக்கின்றன. புராணங்களும் இவற்றில் இருக்கின்றன. இவற்றில் தல புராணங்கள் மற்றவற்றை விடவும் ரொம்ப நஷ்டப்பட்டிருக்கின்றன. எஞ்சியதை நாம் காப்பாற்ற வேண்டும். தேடித் தேடிப் புதுசாகக் கிடைப்பதைச் சேகரம் செய்ய வேண்டும்.

தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்