உட்பொருள் அறிவோம்: சற்குணம் நிர்குணம்

By செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

சேதனம் அசேதனம் என்று பௌதிக உலகத்தை இரண்டாக வகுக்கலாம். சேதனம் என்பது உயிருணர்வு உள்ளவை; அசேதனம் என்பது உயிருணர்வு அற்றவை. ஒரு பாறைக்குத் தான் இருப்பது தெரியாது. அதற்கு உயிருணர்வு இல்லை. மனிதனுக்கு அந்த உயிருணர்வு இருக்கிறது. மிருகங்களுக்கு அந்த உணர்வு குறைவு. தாவரங்களுக்கு இன்னும் குறைவு.

உயிருணர்வு பிரபஞ்சத்தின் அடிப்படைச் சக்தி. பிரளயத்தில் பிரபஞ்சமனைத்தும் அழிந்துபோனாலும் இந்தச் சக்தி மட்டும் நிலைத்து நிற்கிறது. இந்தச் சக்திதான் பிரபஞ்சத்தை உண்டாக்குகிறது. தான் உண்டாக்கிய பிரபஞ்சத்தின் உயிரோட்டமாக உள்ளுறைந்து(Immanent) நிற்கிறது. மனிதப் பிரக்ஞையில் ‘நான்’ என்னும் தன்னுணர்வாக வெளிப்படுவதும் இதுதான். தான் உருவாக்கிய பிரபஞ்சத்துக்கு வெளியேயும் காலமற்று விரிந்து(Transcendent) நிற்பதும் இதுவே.

பிரபஞ்சம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. உருக்கொண்ட எதுவுமே வரையறைக்கு உட்பட்டதுதான். ஆனால் அதற்குள் பொதிந்து நிற்கும் உயிருணர்வு எந்த வரையறைகளுக்கும் உட்படாதது. உயிருணர்வு இல்லாதது என்று நாம் சொல்லும் கல்லும் மண்ணும் கூட இந்தப் பிரபஞ்ச சக்தியினால் ஆனவைதான்.

இந்தச் சக்தி தன் இரு நிலைகளிலும் தன்னில் தான் மாற்றம் கொள்ளாமல் இருந்து இயங்குகிறது - உள்ளுறைந்து நிற்பது, அனைத்தையும் கடந்து நிற்பது இரண்டும். உள்ளுறைந்து நிற்பதைச் சற்குணப் பிரம்மம் என்றும், கடந்து நிற்கும் நிலையை நிர்க்குணப் பிரம்மம் என்றும் சொல்கிறார்கள். சற்குணப்பிரம்மத்தை அனுபவம் கொள்ளும் நிலையை சவிகல்ப சமாதி என்றும், நிர்க்குணப் பிரம்மத்தை அனுபவம் கொள்ளும் நிலையை நிர்விகல்ப சமாதி என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

இரண்டு நிலைகள்

விஷ்ணு, சிவன் என்னும் குறியீடுகள் இந்த இரண்டு நிலைகளைத்தான் குறிக்கின்றன. விஷ்ணு சிருஷ்டியில் ஊடுருவி நிற்கும் உண்மையையும், சிவன் அனைத்தையும் கடந்து நிற்கும் சத்தியத்தையும் குறிக்கிறார்கள். இரண்டும் ஒரே தத்துவத்தின் இரண்டு அம்சங்கள். விஷ்ணு அனுபவத் தளத்தையும், அதன் காரணமாக உலக வாழ்க்கையையும் குறிக்கிறார். உலக அனுபவத்தை விடுத்து, அதைக் கடந்து நிற்கும் தன்மையை சிவன் குறிக்கிறார்.

உலக வாழ்க்கையில் விஷ்ணு

விஷ்ணு, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். கிருஷ்ணராகப் பசுமை நிறைந்த நந்தவனங்களில் கோபியரோடு நடனமாடுகிறார். சிருங்கார ரசத்தில் ஆழ்ந்துபோகிறார். பொன்னாலும் மணியாலும் ஆன ஆபரணங்களை அணிகிறார். குளிர் சந்தனத்தைப் பூசிக்கொள்கிறார். அலங்காரப் பிரியனாக இருக்கிறார். உலகை உய்விக்கும் பொருட்டுத் தர்மத்தை நிலைநாட்ட அவதாரங்கள் எடுக்கிறார். அரசனாக, கலைஞனாக, காதலனாக, வீரனாக உருவெடுக்கிறார்.

அழகனாக இருந்து பெண்களுடன் சல்லாபம் செய்து உல்லாசப் பிரியனாக இருக்கிறார். பல மனைவிகள் கொண்டவராக இருக்கிறார். கோபிகைகள் துணையாக இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ந்தவராக இருக்கிறார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட மகாலட்சுமியைத் தன் துணையாக ஏற்றுக்கொள்கிறார். உலக வாழ்க்கையில் துணை புரிகிறார். காலத்தின் பாதையில், பரிணாம வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று உயிர்களை வழி நடத்துகிறார்.

சிவன் உலகைத் துறந்து, யாருமில்லாத, பனிபடர்ந்த மலையுச்சிகளில் தவத்தில் ஈடுபடுகிறார். இருட்குகைகளில் வாசம் செய்கிறார். இடுகாட்டில் சாம்பலைப் பூசிக்கொண்டு தாண்டவம் ஆடுகிறார். ‘காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்கிறார் திருஞானசம்பந்தர். பாம்புகளும் ருத்ராட்சங்களுமே அவரது ஆபரணங்கள். உலகத்தில் அவர் அவதரிப்பதில்லை. தவசீலராக, தனிமையில் இனிமை காண்பவராக இருக்கிறார்.

ஆலகால விஷத்தைக் குடிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கிறார். கட்டற்று நீண்டு, கலைந்து வளர்ந்து, சடையாகிப் போன முடி கொண்டவராகத் திகழ்கிறார். உடுக்கை அடிப்பவராக இருக்கிறார். பூதகணங்களே துணைவர்களாக இருக்கிறார்கள். பாற்கடல் கடைந்ததில் வெளிவந்த ஆலகால விஷத்தை அருந்துகிறார். திருமணம் செய்துகொள்ள வைக்க அனைவரும் மிகுந்த சிரமம் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. உலக பந்தத்தை மறுப்பவராகக் காட்சியளிகிறார். காலத்தைத் துறந்து, இருப்பைத் துறந்து, உலக வாழ்க்கையில் பங்குகொள்ளாமல், அனைத்துக்கும் சாட்சி பூதமாக மட்டுமே நிலைக்க உதவுகிறார்.

அனுபவத் தளத்தில்தான் அகிலம் மலர்ந்து தழைக்கிறது. இருமைநிலை, பிரபஞ்சத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. ஆண்-பெண், இரவு-பகல், அகம்-புறம், இருள்-ஒளி, பிறப்பு-இறப்பு என்று அனைத்தும் இருமையின் துருவநிலையில் இயங்குகின்றன. இதன் காரணமாகத்தான் விஷ்ணு எப்போதும் தன் பெண்மையின் அம்சமான மகாலட்சுமியுடன் காட்சி தருகிறார். பெண்மையைத் தன் இதயத்தில் இருத்திக்கொள்கிறார்.

பரதத்துவத்தின் அடையாளம்

அமிர்தத்தைத் தேவர்களுக்குக் கொடுப்பதற்காகவும், பஸ்மாசுரனை வதம் செய்வதற்காகவும் மோகனாவதாரம் எடுக்கிறார். அகிலத்தின் ஆன்மாவாக விஷ்ணு பரிணமிக்கிறார். விஷ்ணுவின் மோகனப் புன்னகையில் உலகம் தழைக்கிறது. இருமை கடந்து, ஒருமை அடைந்து, பின் அதையும் விடுத்து, எதுவுமாக இல்லாமல் இருக்கும் பரதத்துவத்தின் அடையாளமாகச் சிவன் திகழ்கிறார். காலம், இடம், மகிழ்ச்சி, துயரம், இன்பம், துன்பம், போன்றதான தன்மைகள் ஏதுமற்ற, அகண்ட நிலையைச் சிவன் குறிக்கிறார். ஆன்ம அனுபவத்தையும் கடந்த சூன்யத்தில், எல்லைகள் விடுத்த பெரும்பாழில் சிவன் தாண்டவமாடுகிறார். சிவனின் சிரிப்பில் அண்டம் அதிர்கிறது.

இகம்-இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலகம் விஷ்ணுவின் ஆட்சிக்குள் இருந்து இயங்குகிறது. பரம்-மறுமை என்று குறிக்கப்படும் அவ்வுலகம் சிவனின் ஆதிக்கம். இவையிரண்டும் உள்ளங்கை-புறங்கை போன்று ஒரே விஷயத்தின் இரு பக்கங்களே. இரண்டையும் புரிந்துகொண்டால்தான் வாழ்க்கையின் அர்த்தத்தையும், வாழ்வனுபவத்துக்கு ஆதாரமாக இருக்கும் பரதத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

(புரிதல் மலரட்டும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்