குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: துலாம் ராசி வாசகர்களே

By செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.

துலாம் ராசி வாசகர்களே

முயற்சியை முதுகெலும் பாகக் கொண்டவர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப்புழக்கத்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோமென்று பேசாமல் சில விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள். எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாது. குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்களைப் பெரிதாக்க வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.

வெளியிடங்களிலும் நிதானமாகப் பேசுங்கள். ஆனால் உங்களின் ஏழாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்கள் உள்மனம் சொல்வதை கேட்டு நடந்து கொள்வீர்கள். ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். சாதுக்களுக்கு நெருக்கமாக இருப்பீர்கள். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்னியோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். நெடுநாளாக அடகில் இருந்த நகைகளையும் மீட்பீர்கள். பழைய கடன் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அப்பா, மகனின் உறவு இனிக்கும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால் எதிர்பாராத வகையில் செலவு, திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வாகனம் வாங்குவீர்கள்.

29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் ,மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சமாளிக்க முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சின்ன சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாவார்கள். பணப்பற்றாக்குறை தீரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி வழியில் உதவி உண்டு.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் அமர்வதால் தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.

07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வீண் பிடிவாதம், முன்கோபம் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன் மனைவிக்குள் மோதல்கள் விலகும். விபத்து களிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தேமல், அலர்ஜி நீங்கும்.

வியாபாரத்தில் இருப்பதை வைத்து முன்னேறப்பாருங்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலியுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள்.
இந்த குரு மாற்றம் அவ்வப்போது குழப்பத் தையும், காரியத்தடைகளையும் தந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுவதாலும் கடின உழைப்பாலும் நினைத்ததை நிறைவேற்றித் தரும்.

பரிகாரம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சேத்திரப்பாலபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவரை அஷ்டமி திதியில் சென்று வணங்குங்கள். சர்க்கரை தானம் கொடுங்கள். தடைகள் விலகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்