காந்தி 151: ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும்?

By செய்திப்பிரிவு

பவித்ரா

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை

குஜராத்தின் ஆதிகவி என்று போற்றப்படும் நரசிங்க மேத்தா, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்கள் கவி ஆவார். அவர் இயற்றிய சாகித்யங்கள் குஜராத் முழுவதும் இன்றும் பக்தியோடும் நேசத்தோடும் பாடப்பட்டு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் சமத்துவ உணர்வையும் மனிதாபிமான உணர்வையும் வளர்ப்பதற்காக மகாத்மா காந்தியால் பரப்பப்பட்டு அவரது அடையாளங்களில் ஒன்றாகிய ‘வைஷ்ணவ ஜன தோ’ பாடல் இவர் இயற்றியதாகும்.

ஜயதேவரின் சிருங்கார பாணியில் தனது இளம்வயதில் பாடல்களை நரசிங்க மேத்தா இயற்றத் தொடங்கினார். இவரது பிந்தைய கால வாழ்க்கையில் தத்துவார்த்த ரீதியான உள்ளடக்கத்தோடு இயற்றிய பாடல்கள் கனமான விஷயங்களைக் கவித்துவமாகவும் எளிமையாகவும் சொல்ல முடியும் என்பதற்கான உதாரணங்கள். இருப்பின் நிம்மதியின்மை, கசப்பு, வயோதிகம், மரணம் ஆகியவை இவரது பிற்காலப் பாடல்களின் பாடுபொருள்களாக விளங்கின. பிராமணக் குடும்பத்தில் டலாஜாவில் பிறந்த நரசிங்க மேத்தா, தற்போதைய குஜராத்தின் ஜுனாகட் பகுதிக்குச் சிறு வயதிலேயே இடம்பெயர்ந்தார். அரச சபையில் நிர்வாகியாக இருந்த தன் தந்தையையும் தாயையும் ஐந்து வயதிலேயே இழந்தார். எட்டு வயதுவரை பேச முடியாமல் இருந்த இவரைப் பாட்டி ஜெய்கௌரிதான் வளர்த்தெடுத்தார்.

நித்திய ராச லீலை

1429-ம் ஆண்டு மேனக் பாயை மணந்த நரசிங்க மேத்தா, தன் மனைவியுடன் அண்ணன் பன்சிதார் வீட்டில் குடியேறினார். ஆனால், அண்ணியாருக்கு அவர்களைப் பராமரிப்பதற்கு மனம் இல்லை. நரசிங்க மேத்தாவின் பக்தி மார்க்கத்தை அவர் கேலிசெய்து புண்படுத்தியபடி இருந்தார். இந்நிலையில் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறிய மேத்தா, அமைதிக்காக அருகிலுள்ள காட்டுக்குள் புகுந்து ஏழு நாட்கள் அங்கிருந்த சிவலிங்கத்தின் முன்னால் தியானத்தில் இருந்தார்.

நரசிங்க மேத்தாவின் தவத்தை மெச்சி அங்கே தோன்றிய சிவன், கவிஞனின் கோரிக்கையைக் கேட்டு, கிருஷ்ணனும் கோபிகைகளும் நித்தியமாக ராசலீலை நடத்தும் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தார் என்பது ஐதிகம்.
அந்தக் காட்சியைப் பார்த்து உறைந்து நின்ற நரசிங்க மேத்தாவின் கையை அவர் வைத்திருந்த தீவட்டி சுட்டிருக்கிறது. ஆனால், அவருக்கு இருந்த பரவசத்தில் அந்த வலியே தெரியவில்லை. கிருஷ்ணனின் கட்டளைக்கு இணங்கி, இகவுலகில் தான் அனுபவித்த அமிர்தானுபவத்தை வெளிப்படுத்துவதற்காக 22 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த தெய்விக அனுபவத்துக்குப் பின்னர், தன் கிராமத்துக்குத் திரும்பிய நரசிங்க மேத்தா, தன் அண்ணியை அழைத்து, அவர் பாதங்களில் பணிந்து வணங்கினார். தன்னைப் புண்படுத்திப் பேசியிருக்காவிட்டால் தனக்கு கடவுளுடனான அனுபவம் கிடைத்திருக்காது என்று கூறி நன்றி சொன்னார்.

ஏழைகள், ஒடுக்கப் பட்டவர்களுடன் சகவாழ்வு

ஜுனாகட்டில் மிகுந்த வறுமை சூழ்ந்த நிலையில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை நிறைவாக நடத்திவந்தார். மகன் பெயர் சமால்தாஸ். மகள் கன்வர் பாயின் மேல் வாத்சல்யம் மிக்கவராக விளங்கினார். சாதுக்கள், ஞானிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோருடனும் சகவாழ்வை நடத்தினார். அவர்களது வீடுகளில் நடக்கும் விழாக்களில், கிருஷ்ணனின் பெருமையைச் சொல்லும் பாடல்களைப் பாடுவதற்காக அவர் அழைக்கப்பட்டார்.

79 வயதில் இறந்ததாகக் கருதப்படும் நரசிங்க மேத்தாவைப் புதைத்த இடுகாடு இன்றும் ‘நரசின்ஹெ நு சம்ஷான்’ என்றழைக்கப்படுகிறது. குஜராத் மண்ணுக்குப் பெருமை சேர்த்த மைந்தரும் வைணவன் என்னும் அடையாளத்தை மகத்தான மனிதாபிமான அடையாளமாக்கியவருமான நரசிங்க மேத்தா புதைக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தியால் பிரபலப்படுத்தப்பட்ட ‘வைஷ்ணவ ஜன தோ’ பாடல் மூலம் வைணவன் என்ற வரையறைக்குட்பட்ட அடையாளம் தகர்க்கப்பட்டது. உலகப் பொது மனிதனின் அடையாளத்துக்கு நகர்த்திய நரசிங்க மேத்தாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். வேற்றுமைகள், வெறுப்பு, அச்சத்தால் மனிதர்கள் பீடிக்கப்பட்டிருக்கும் காலத்தில் நரசிங்க மேத்தாவும் மகாத்மா காந்தியும் முன்னிறுத்திய வைணவனுக்கான அடையாளத்தைப் பரிசீலிப்போம்.

வைஷ்ணவ ஜன தோ

நரசிங்க மேத்தா

வைணவன், மற்றவர்களின் வலியை அறிபவன்
தன் மனத்துக்குள் பெருமிதத்தை நுழையவிடாமல்
மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்பவன்

வைணவன், முழு உலகத்தையும் மரியாதை செய்பவன்
மற்றவர்கள் குறித்து தீங்காகப் பேசாதவன்
தனது உறுதிமொழிகளையும் செயல்களையும் சிந்தனைகளையும்
தூய்மையாகப் பராமரிப்பவன்
அப்படிப்பட்ட ஆத்மாவைப் பெற்ற தாய் ஆசிர்வாதத்துக்குரியவள்

வைணவன், எல்லாரையும் சமமாகப் பார்ப்பவன் எதற்கும் ஏங்காதவன்
பேராசைப் படாதவன்
தன் தாயை மரியாதை செய்வதுபோல
ஒவ்வொரு பெண்ணையும் நடத்துபவன்
அவனது நாக்கு களைப்புற்றாலும் பொய்யே சொல்லாதவன்
மற்றவர் சொத்தைத் தீண்டாதவன்.

வைணவன், உலக பந்தங்களுக்கு ஆட்படாதவன்
காமம் குரோதங்களைத் துறந்தவன்
கவிஞன் நர்சி சொல்கிறான்: அப்படி ஒரு ஆன்மாவைச் சந்திக்க இயன்றால் நான் நன்றிக்குரியவன். அவனது நல்லொழுக்கம் ஒட்டுமொத்த பரம்பரையையும் விடுதலை செய்யும்.

தமிழில் : ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்