சிந்துகுமாரன்
‘நான் உடல் அல்ல. காலதேசம் கடந்த ஆன்மா’ என்று ஆன்றோர்கள் சொன்னதை நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். உடலை வெறுத்து ஒதுக்கியிருக்கிறோம்; சீரழிக்கிறோம். தேகாத்மபுத்தி தவறு என்று ஞானிகள் சொன்னது உடலையே ‘தான்’ என்று எடுத்துக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
நவீன ஞானியான ஜே. கிருஷ்ணமூர்த்தியின் டைரிக் குறிப்புகள் புத்தகமாக வந்தபோது, அதைத் தொகுத்தளித்தவர் அதன் முன்னுரையில், ‘ஒரு குதிரைப்படைத் தலைவன் தன் குதிரையை எப்படிக் கவனமாகப் பார்த்துக் கொள்வாரோ அப்படித் தன் உடம்பை கிருஷ்ணமூர்த்தி பார்த்துக் கொள்கிறார்,’ என்று எழுதியிருக்கிறார்.
உடல், மனம், ஆன்மா என்ற மூன்றினுள், மனம் எப்போதும் இறந்த காலத்தை நினைத்துக் கொண்டோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றிக் கற்பனை செய்துகொண்டோதான் இருக்கிறது. ஆன்மா காலமற்று, நிகழ்கணத்துக்கு ஆதாரமாக நிலைத்திருக்கிறது. உடல் மட்டும்தான் எப்போதும் நிகழ்கணத்தில் இருக்கிறது. ஆனால் தான் அவ்வாறு இருக்கிறோம் என்ற அறிவுணர்வு அதற்கு இல்லை.
சமூகமும் கலாச்சாரமும் நம் தன்னுணர்வை மனத்துடன்தான் இணைத்திருக்கிறது. மனத்தில் சேகரமாகியிருக்கும் நினைவுப்பதிவுகளின் அடிப்படையில் மனத்தில் ஒரு சுயபிம்பம் உருவாகியிருக்கிறது. அது நம் சுயசரிதை; நினைவுகளின் வரிசை. அதையே ‘நான்’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் பொதுவாக ‘நான்’ என்று கருதுவது ஆன்மாவையல்ல; இந்த பிம்பத்தைத்தான். அதனால் பெருமளவுக்கு இந்தப் பிம்பம் உடலில் இருந்தும், ஆன்மாவான ‘நான்’ என்னும் தன்னுணர்விலிருந்தும் விலகியிருக்கிறது.
அன்பின் அதிர்வு
உடல் நிகழ்கணத்தின் சக்திப் படலத்தில் வேர்கொண்டிருக்கிறது. அகில சக்தியின் சாரமான அன்பு உடலின் அணுக்களில் எந்நேரமும் பாய்ந்துகொண்டிருக்கிறது. மனம் உடலிலிருந்து பிரிந்து தனியே அலைந்துகொண்டிருக்கும் காரணத்தால் அன்பின் முழுமையை உணராமல் இருக்கிறது. அன்பை உடற்சுகம், பொருள் ஈட்டுதல் போன்ற புறத் தடங்களில் தேடுகிறது. அன்பை அனுபவிப்பதற்கு உடலை வெறும் சாதனமாக மட்டுமே மனம் பார்க்கிறது. உடலில் ஓடும் உயிர்ச்சக்தி அன்பின் அதிர்வு. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்கிறார் வள்ளுவர்.
நம்மில் பெரும்பாலோர்க்கு அகவுலகம், அல்லது அகவாழ்க்கை என்பதே கிடையாது. அகம் என்பதை வெறும் எண்ணங்கள், உணர்ச்சிகள், நினைவுகள் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த எண்ணங்கள் எல்லாம் புறவாழ்க்கை அனுபவத்தின் பதிவுகள். அதனால் புறத்தைச் சேர்ந்தவை; அவை அகம் அல்ல. இதை அகப்புறம் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளலார். அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்று நான்கு பரிமாணங்களை அவர் குறிக்கிறார். மாணிக்கவாசகர், ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்று தொடங்கும் திருவாசகப் பாடலில், ‘புறப் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே’ என்று பாடுகிறார்.
நாம் மனம் என்று சொல்வதுதான் அகப்புறம். புலன்களால் நாமறிவது புறம். மனவெளிக்கும் அப்பால் எல்லையற்ற ஆழத்தின் விரிவுதான் உண்மையில் அகம். அதேபோல், புலன்களுக்கு அப்பால், புலன்கள் காட்டும் உலகத்துக்கு அப்பால், பெரும்பாழாய் விகசித்து நிற்பது புறப்புறம். அந்த வெளியில்தான் சிவபெருமான் திரிவதாகச் சொல்கிறார் மாணிக்கவாசகர்.
உடலின் முக்கியத்துவம்
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர்ச்சக்தியின் உள்ளுணர்வில் இடையறாது ‘நான், நான்’ என்று எந்நேரமும் மந்திரமென அதிர்ந்துகொண்டிருக்கும் தன்னுணர்வில் கவனத்தைத் தொடர்ந்து நிலைக்கச் செய்யும்போது, பேரண்டத்தின் ஆன்மாவை அறிந்துணர்ந்துகொள்ள முடியும். இதைத்தான் திருமூலர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படுந்தானே என்கிறார். ‘ஊன் பற்றி நின்ற’ என்று குறிப்பிட்டு உடலின் முக்கியத்துவத்தை அறிவிக்கிறார்.
அகவாழ்க்கை என்பதே இல்லாத மனப்பாங்கில் வாழும்போது வாழ்க்கை அவலமாகிப் போகிறது. புறவுலகம் மட்டுமே உண்மை என்று வாழும் வாழ்க்கையில், நம் அகத்தின் முக்கியமான பகுதிகள் விலக்கியொதுக்கப்படுகின்றன. மறைக்கப்பட்டிருக்கும் அந்தப் பகுதிகள் நம் பார்வையைத் திரித்து மனத்தைப் பேதலிக்கச் செய்கின்றன. நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் ஏன் அவ்வாறு நடக்கின்றன என்பது குறித்த தெளிவு சிறிதும் இல்லாமல் போகிறது. வாழ்க்கை முழுமை பிறழ்ந்து துண்டுதுண்டாகிப் போகிறது.
இதனால் ஏற்படும் அகவிளைவுகள் புதிய காரணங்களாகின்றன; புதிய விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இதைத்தான் கர்மவினை என்கிறோம். நம் செயல்களிலிருந்தும் நம் அறியாமையின் விளைவுகளிலி ருந்தும் நாம் தப்பிக்க இயலாது. என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பது நமக்குப் புரியாததால் அதிருஷ்டம், துரதிருஷ்டம் என்றெல்லாம் இல்லாத பெயர்களை வைத்து சமாதானப்படுத்திக்கொள்கிறோம். விழித்துக்கொண்ட ஆழமான விசாலமான அறிவுணர்வு இல்லாமல் தெளிவும், நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க வழியேதுமில்லை.
ஆர்ப்பரிக்கும் மனச்சுயம்
புறவாழ்க்கையை மட்டுமே கணக்கில் கொண்டு அகவாழ்க்கை புறக்கணிக்கப்படுவதால் ஆன்மா என்னும் உண்மைச் சுயம் நிராகரிக்கப்படுகிறது. ஆன்மிகம் என்பது ஏதோ ஒரு சிலரின் ஆதிக்கத்தில் உள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தினசரி வாழ்க்கையிலிருந்து ஆன்மா ஒதுக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலான ஆன்மாவின் வாகனமாக இயங்கவேண்டிய மனச்சுயம்(Ego), தானே தலைவன் என்னும் ஆணவத்தில் ஆர்ப்பரிக்கிறது.
உடலில், அதாவது நரம்புமண்டலத்தில் இயங்கும் தன்னுணர்வு, தன் தோற்ற மையமான ஆன்மாவைக் கண்டுகொண்டு அதனுடன் ஐக்கியமாவதைத் தடுப்பது மனச்சுயம்தான். ஆன்ம தரிசனத்துக்கான பெரும் ஏக்கம்தான் தடைகளை விலக்குவதற்கான வலிமையைக் கொடுக்கும். திருநாளைப்போவார் நாயனார் என்று அழைக்கப்பெற்றவர் நந்தனார். சிவலோகநாதரின் தரிசனத்திற்காகத் திருப்புங்கூர் சென்றபோது, சிவலிங்கத்தைக் காண முடியாமல் அங்கிருந்த நந்தி மறைத்திருந்தது.
பெரும் ஏமாற்றத்தில் நெஞ்சுருகி நின்ற நந்தனாரின் ஆழ்ந்த பக்தியின் விளைவாகச் சிவபெருமானே நந்தியை விலகச் செய்து தரிசனம் தந்தார் என்று பெரியபுராணம் சொல்கிறது. நந்தி என்பது மனச்சுயம்தான். ஆன்மாவே மனச்சுயத்தை விலகச் செய்யவேண்டுமானால் தாளாத ஏக்கமும் தணியாத தாகமும் வேண்டும்.
அதுதான் ஆன்மாவை ஈர்க்கும். நந்தனாருக்கு நடந்ததுபோல், ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்,’ என்று சொல்லி மனச்சுயம் என்னும் நந்தியை விலகச் செய்யும். ஆன்ம தரிசனம் கிடைக்கும்.
நம் வாழ்க்கை நம் அகநிலையின் நேரடியான பிரதிபலிப்புதான். நிலைக்கண்ணாடியின் முன்னால் நிற்கும்போது, நம் பிரதிபலிப்பில் மாற்றம் வேண்டுமென்றால் நாம் மாறவேண்டும். பிரதிபலிப்பு தானாக மாறும். நம்மிடம் மாற்றம் ஏற்படாமல் பிரதிபலிப்பில் எப்படி மாற்றம் கொண்டுவர முடியும்?
(மாறுவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :
sindhukumaran2019@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago