உயிர் வளர்க்கும் திருமந்திரம் 96:ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

இறையைக் கற்பிக்கிறவர்களிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்விகள் இவை: (1) இறை எங்கே இருக்கிறது? (2) இறை எப்படி இருக்கும்? (3) இறை என்ன செய்துகொண்டிருக்கிறது?
இந்த உலகத்தைப் படைத்ததே இறைதான்; உலகத்துக்குள் இருந்துகொண்டே உலகத்தைப் படைத்திருக்க முடியாது; உலகத்துக்கு அப்பாலே இருந்துகொண்டுதான் இந்த உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். எனில், உலகத்தைப் படைக்கும் முன் உலகத்துக்கு அப்பாலே இருந்த இறை உலகத்தைப் படைத்தபின் உலகத்துக்குள் குடி வந்துவிட்டாரா? அப்பாலேயும் இருக்கிறார்; இப்பாலேயும் இருக்கிறார்.

இறை எப்படி இருக்கும்? அது இறை. எப்படி வேண்டுமானாலும் இருக்கும். காண முடிந்த உருவமாக இருக்கும்; காண முடியாத அருவமாகவும் இருக்கும்; அருவமாக அல்லாமல், அதே நேரம் தெளிவான உருவமாகவும் இல்லாமல், குத்துமதிப்பான உருவமாக, அதாவது அருஉருவமாகவும் இருக்கும்.

இவற்றை எடுத்துக்காட்ட வேண்டுமானால், அருவத்தை எடுத்துக்காட்ட ஒன்றும் இல்லை. அருஉருவத்தை எடுத்துக் காட்டச் சிவலிங்கம். உருவத்தை எடுத்துக் காட்ட, அறிவு நிலைகாட்டும் தென்முகநம்பித் திருமேனி (தட்சிணாமூர்த்தி), அழிவு நிலைகாட்டும் காமனைக் கனலால் காய்ந்த திருமேனி (காமாரி), சைவ-சாக்த மதங்களின் இணைப்பைக் காட்டும் மங்கைமணாளத் திருமேனி (உமாமகேசன்), சைவம்-சாக்தம்-கௌமாரம் ஆகியவற்றின் இணைப்பைக் காட்டும் இளமுருகு உடனுறையும் அம்மையப்பத் திருமேனி (சோமாசுகந்தர்), ஆட்டம் காட்டும் கூத்தத் திருமேனி (நடராசன்) ஆகியவற்றைச் சொல்லலாம். இத்திருமேனிகளில் அழகியல் சிறப்பு, அறிவியல் சிறப்பு, மெய்யியல் சிறப்பு, சமயச் சிறப்பு, குறியீட்டுச் சிறப்பு என்று எல்லாச் சிறப்புகளும் கூத்தத் திருமேனிக்கே. இல்லாமலா அப்பர் மனித்தப் பிறவி வேண்டினார்?

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.
(தேவாரம், 4:81:4)

ஆடும்போது அபிநயம் காட்டி வளைத்த புருவம், கொவ்வைப் பழம்போலச் சிவந்த வாயில் இதழோரம் ஒரு குமிழ்ச் சிரிப்பு, கங்கை வழிந்தோடி நனைத்த சடை, பவளம்போலச் சிவந்த மேனி, அதில் பூசிய வெண்சாம்பர்ப் பொடி, எங்களுக்குப் பேரின்பம் தருவதற்காக என்றே தூக்கிய திருவடி, இவற்றைக் கண்டவர்கள் மனிதப் பிறவியை மேலும் தா என்று வேண்ட மாட்டார்களா?
இறை என்ன செய்துகொண்டிருக்கிறது? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்துகொண்டிருக்கிறது.

படைத்தலும் காத்தலும் ஒரு முறை செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளும் தொழில்கள்; ஆனால் காத்தலும் மறைத்தலும் அருளலுமோ நாளும் செய்கிற தொழில்கள். இவற்றில் காத்தல் புரிகிறது; அருளலும் புரிகிறது; அது என்ன மறைத்தல்? எதை மறைக்கிறது இறை? தன்னையே மறைக்கிறது. தன்னை ஏன் மறைக்க வேண்டும்? நாம் தேடிக் கண்டுபிடிக்கத்தான். கண்டுபிடிக்க முடியாமல் தவித்தால்? தன்னைக் கண்டுபிடிக்கத் தானே தன்னைக் காட்டி நமக்கு அருளும். இதென்ன கண்ணாமூச்சி விளையாட்டா? ஏறத்தாழ அப்படித்தான்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்;
போற்றி அருளுகநின் அந்தம்ஆம் செந்தளிர்கள்;
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றம்ஆம் பொற்பாதம்;
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகம்ஆம் பூங்கழல்கள்;
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணைஅடிகள்;
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்;
போற்றியாம் உய்யஆட் கொண்டுஅருளும் பொன்மலர்கள்;
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
(திருவாசகம், திருவெம்பாவை, 20)

எல்லாவற்றுக்கும் தொடக்கம் உன் திருவடி; போற்றி. எல்லாவற்றுக்கும் முடிவு உன் திருவடி; போற்றி. எல்லா உயிர்களையும் உலகத்துக்குள் தோற்றுவித்தது உன் திருவடி; போற்றி. எல்லா உயிர்களையும் அவை அவற்றுக்கு உரியவற்றில் பொருந்தச் செய்து காத்ததும் உன் திருவடி; போற்றி. எல்லா உயிர்களையும் இறுதிப்படுத்துவதும் உன் திருவடி; போற்றி. திருமாலும் நான்முகனும் விழுந்து கும்பிட அலைந்தும் காணாமல் மறைத்துக்கொண்ட தாமரை உன் திருவடி; போற்றி.

நாங்கள் உய்வடைய அருள்வதும் உன் தங்கப் பூந்திருவடி; போற்றி. இவ்வாறு போற்றி மார்கழிக் குளியலை நிகழ்த்துவோம் வருக என்று அழைக்கையில் மணிவாசகர் இறைவனின் ஐந்து தொழில்களையும் பட்டியல் இட்டுவிடுகிறார். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் தவிர, இறைவனின் ஐந்து தொழில்களைப் பற்றி விளக்கிப் பேசும் பாட்டு பிற திருமுறைகளில் இது ஒன்றே. எனில் திருமந்திரம் எவ்வாறு பேசியிருக்கிறது? இறைவனின் ஐந்தொழில்களைக் கூத்தன் திருவுருவத்தோடு குழைத்துப் பேசியிருக்கிறது:

அரன்துடி தோற்றம்; அமைத்தல் திதியாம்;
அரன்அங்கி தன்னில் அறையில்சங் காரம்;
அரன்உற்று அணைப்பில் அமரும் திரோதாயி;
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
(திருமந்திரம் 2799)

கூத்தன் திருவுருவம் அறிவோம். கூத்தனுக்கு நான்கு திருக்கைகள்: பின்னங்கை ஒன்றில் உடுக்கை; மற்றொன்றில் தீ; முன்னங்கையில் ஒன்று அணைத்தாற்போல வீசிய புறங்கை; மற்றொன்று அமைத்தாற்போலக் காட்டும் உள்ளங்கை. கூத்தனுக்கு இரண்டு திருவடிகள்: ஒன்று தூக்கி ஆடிய பாதம்; மற்றொன்று அழுந்த ஊன்றிய பாதம்; ஊன்றிய பாதத்தின் அடியில் எழமுடியாமல் தவிக்கும் முயலகன் என்னும் குண்டர். இனித் திருமூலர் சொல்வன: ஒரு கையில் பிடித்த உடுக்கை படைப்புத் தொழிலின் அடையாளம்.

ஏன்? ஏனெனில் படைப்பின் தொடக்கத்தில் நாதமே வருதலால்; பொருள் வருமுன் ஒலியே வருகிறது. அமைத்தாற்போல் காட்டும் உள்ளங்கை காத்தல் தொழிலின் அடையாளம். ஏன்? நான் காப்பாற்றுகிறேன் என்பார் காட்டுவது அது. மற்றொரு கையில் ஏந்திய தீ அழித்தல் தொழிலின் அடையாளம். ஏன்? தீ இன்னார் இனியார் என்று பாகுபடுத்தாது சேர்ந்தாரை எல்லாம் கொல்லும். ஊன்றிய திருப்பாதம் மறைத்தல் தொழிலின் அடையாளம். ஏன்? தூக்கிக் காட்டாமல் வைத்திருக்கிறார்; தேடித்தான் கண்டுகொள்ள வேண்டும்.

தூக்கிய திருவடியாகிய ஆடிய பாதம், பின்னாளில் அப்பர் கிறுகிறுத்ததுபோல ‘இனித்தம் உடைய எடுத்த பொற்பாதம்’, அருளல் தொழிலின் அடையாளம். ஏன்? தேடிக் களைத்தவர்கள் கண்டுகொள்க என்று அவரே தூக்கிக் காட்டிவிட்டதால். அப்படியும் பிறவிக் களைப்பில் எங்கே பார்க்காமல் போய்விடுவார்களோ என்று எண்ணி, வீசி ஆடிய கையின் சுட்டுவிரலால் தூக்கி ஆடிய பாதத்தைச் சுட்டியும் காட்டுகிறார் இறையனார்: இதோ உன் விடுதலை. வா. அவ்வாறு வந்து சேர்ந்தாரை ஆணவம் பற்றாது. ஏன்? ஆணவத்தைத்தான் ஊன்றிய காலுக்குக் கீழே முயலகக் குண்டர் வடிவில் தலை தூக்கவிடாமல் மிதித்து வைத்திருக்கிறாரே இறைவர்!

(மறைபொருள் அறிவோம்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

மனத்தை மாற்றுங்கள்

மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்றவேண்டுமென்று கருதினால் சுவாசம்தான் சிறந்தவழி. மனதின் எல்லா பழக்கங்களுமே சுவாசத்தின் பாணியைப் பொறுத்தே இருக்கின்றன. சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது, முயன்று பாருங்கள்!
- ஓஷோ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்