தெய்வத்தின் குரல்: மனம் என்பது என்ன?

By செய்திப்பிரிவு

‘மனசைக் கழற்றிப் போட்டுவிட்டால் நாமே ப்ரம்மம்; இங்கேயே மோக்ஷம்’ என்றால், நமக்கு “இத்தனை ஈஸியாக இப்பேர்ப்பட்ட சித்தியா?” என்று ஆச்சரியமாயிருக்கிறது.

நமக்கு மேலே பரமாத்மா என்று ஒருத்தர், ‘அவருக்குக் கீழேதான் நாம்’ என்று இருக்கிற நிலையையே பேரானந்தமான முடிவு நிலை என்று சொல்லி, அதை அடைவதற்கும் எங்கேயோ எட்டாததாயிருக்கும் மோக்ஷ லோகத்திற்குப் போக வேண்டுமென்று மற்ற சித்தாந்தங்கள் சொல்வதாயிருக்க, நமக்கு மேலே ஒரு சுவாமி, அதற்குக் கீழே நாம் என்றில்லாமல் நாமே சுவாமியாயிருக்கிற மஹா மஹா பேரானந்தத்தை முடிவு நிலையாகச் சொல்கிற அத்வைதமோ, அதை அடைய எந்த எட்டாத லோகத்துக்கும் போக அவசியமில்லாமல் இங்கேயே அடையலாம் என்றும் சொல்கிறதே! எத்தனை சுலபமாக எத்தனாம் பெரிய லாபம்?’ என்று ஆச்சரியமாயிருக்கிறது.

மனம் லேசில் அழிய மாட்டேனென்கிறது. மனம் என்பது என்ன? எண்ணங்களை உற்பத்தி பண்ணும் கருவி. எண்ணம் நின்று போனால் மனமும் இல்லாமல் போய்விடும். ஆனால் எண்ணத்தைத்தான் நிறுத்தவே முடியவில்லை. அது சதா சர்வதா நாலு கால் பாய்ச்சலில் எங்கேயாவது பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவே இருக்கிறது. எத்தனையோ அனுபவங்கள், அனுபோகங்களை நாம் கண்டிருக்கிறோம்.

கண்டு கொண்டேயிருக்கிறோம்; நமக்குத் தெரிந்து இந்த ஜன்மங்களில்; தெரியாமல் எத்தனையோ பூர்வ ஜன்மாக்களில்! அது ஒவ்வொன்றின் சுவடும் எண்ணத்தின் வேராக மனத்துக்குள் நன்றாக ஓடி, ஓயாமல் ஒழியாமல் ஏதாவது சிந்தனையை முளைக்கப் பண்ணிக் கொண்டேயிருக்கிறது. பெருங்காயம் செலவான பின்னரும், அது இருந்த பாத்திரத்தில் நெடி விடாமலிருக்கிறது அந்த மாதிரி நாம் அனுபோகங்களை அனுபவித்துத் தீர்த்தபின்னும் அதன் நெடி விடாமல் இருக்கிறது.

அதைத்தான் வாசனை, ஜன்மாந்த்ர வாசனை, சம்ஸ்கார வாசனை என்றெல்லாம் சொல்வது. அது என்ன பண்ணுமென்றால் அந்த அனுபோகத்தைப் பற்றிய எண்ணத்தை மனத்தில் கிளப்பிக் கொண்டேயிருக்கும். அதை மறுபடி அடைந்து அனுபவிக்க என்ன வழி என்று மனசை ‘பிளான்’ போட வைத்துக் கொண்டேயிருக்கும். இந்த நெடி அடங்கினால்தான் – ‘வாஸனாக்ஷயம்’ என்பது இதுதான் – மனம் நின்றுபோகும்.

ஓட்டம் முடிந்து போய்விட்டது

நின்றுபோகும் என்றால் முடிந்து போகும் என்ற அர்த்தம். ஓடுகிற ஒன்று நிற்குமானால் அதுதானே ஓட்டத்துக்கு முடிவு? ஜல பிரவாகம் ஓடிக்கொண்டே இருக்கும் ஒன்று. அணை போட்டு ஜலத்தை நிறுத்துகிறோமென்றால் – நின்று போகும்படிச் செய்கிறோம் என்றால் – அப்போது ஓட்டம் முடிந்து விடுகிறது. அப்படித்தான் சதா ஓடிக்கொண்டேயிருக்கும் மனசு நின்றது என்றால் அது முடிந்து போய்விட்டதென்று அர்த்தம்.

ஒரே விஷயத்தில் மனசு நிற்பது வேறு; இப்போது நான் சொல்கிற ‘நிற்பது’ வேறு. ஒரே விஷயத்தில் மனம் நிற்கும் போது மனத்தில் முழுவதும் அந்த விஷயமே வியாபித்துக்கொண்டிருக்கும். வேறு எந்த விஷயமும் அப்போது மனசில் முளைக்காது. அப்படி மனசை ஒன்றிலேயே நிறுத்துவதும் மஹா கஷ்டம்தான். மனசை இல்லாமல் பண்ணி முடித்து விடுகிற நிறுத்தலுக்கு முந்தின படி, இப்படி அதை ஒன்றிலேயே நிறுத்துவதுதான்.

ஒரு குரூரமான விலங்கு நாலா திசையிலும் பாய்ச்சுக்காட்டி ஓடிக்கொண்டே இருக்கிறவரையில், அதை எப்படி குறிவைத்து ‘ஷூட்’ பண்ணமுடியும்? அது ஒரு இடத்தில் நிற்கும்படிப் பண்ணினால், அப்போது ‘ஷூட்’ பண்ணிவிடலாமல்லவா? அப்படி, நாலா தினுசு சிந்தனைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மனசை ஒரே விஷயத்தில் நிறுத்தினால்தான் ‘ஷூட்’ பண்ணமுடியும். இப்படி ஒரே விஷயத்தில் நிற்கிறபோது மனசு என்பதே இல்லாமல் போய் விடவில்லை.

அது இருக்கிறது. ஆனால் பல எண்ணங்களில் வாய் வைப்பதாக இல்லாமல் ஒரே எண்ணத்தில் தன்மயமாகியிருக்கும். நான் சொல்கிற மனசின் அழிவாகிய நின்று போதலுக்கு இது பூர்வாங்கம். இதற்கு அப்புறம் மனசே இல்லாமல் போய்விடவேண்டும். அப்போதுதான் ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டாகும். அதாவது, ஜீவபாவம் போய், தான் பிரம்மமே என்பது தெரியும்.

வாசனைச் சிக்கு

ஆனால் இப்படி ஒன்றிலேயே மனசை நிறுத்துவது, அப்புறம் ஒன்று என்ற எண்ண வேரையும் பிடுங்கிப் போட்டுவிட்டு, மனசையே வேரோடு அழிப்பது என்றால் – என்ன பிரம்ம பிரயத்தனம் பண்ணினாலும் முடியுமா என்றிருக்கிறது. காரணம், “அநாத்யவித்யா வாஸநயா ப்ரவர்த்தமானே” என்று சொன்னபடி, எப்போது ஆரம்பித்தது என்றே சொல்ல முடியாத காலத்திலிருந்து ஜன்ம ஜன்மமாக மனசுத் துணியின் மேலே ஏறிவிட்ட அஞ்ஞான வாசனைச் சிக்கு அத்தனை தடிப்பாக ஆகியிருப்பதுதான்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்