உயிர் வளர்க்கும் திருமந்திரம் 92: மெய்யுணர்வே ஆகாயப் பேறு

கரு.ஆறுமுகத்தமிழன்

சிற்றம்பலம் அல்லது சிதம்பரம் என்னும் சொல்லில் வரும் அம்பலம் அல்லது அம்பரம் என்பது வெளி; அதாவது ஆகாயம். ஆகாயம் என்பது என்ன? ஆகாயம் என்பது இடமாக இருப்பது. ஏதேனும் ஒன்று இருக்க வேண்டுமானால், அது இருப்பதற்கு இடம் வேண்டும் அல்லவா? ‘வாருங்கள்! இருங்கள்!’ என்று உங்களை ஒருவர் வரவேற்று இருக்கச் சொல்கிறார்; இருக்க இடம் இருந்தால்தானே இருப்பீர்கள்?

ஆகாயத்தின் இயல்பு இடம் தந்து நிற்றல். துறவியாய்ப் போன பட்டினத்தார் தாய்க்குக் கொள்ளி வைப்பதற்காகத் திரும்பி வருகிறார். அடைந்திருந்த பெயரை, புகழை, செல்வத்தை என்று எல்லாவற்றையும் துறந்து போனவரால் தாயைத் துறக்க முடியவில்லை. ஏன்? ஏனென்றால் தாய் பிள்ளையை வயிற்றில் சுமந்தபோது பிள்ளைக்கு வயிற்றில் இடம் வேண்டுமே என்று தன் ஈரலை ஒதுக்கி இடம் தந்து இருக்க வைத்தவள். அதற்குக் கைமாறாக அவள் செத்தபோது தன் கூந்தல் ஒதுக்கிக் கொள்ளி வைக்க வந்தான் மகன்.

ஈரல் ஒதுக்கி இடம் தந்த தாயார்க்குக்
கூந்தல் ஒதுக்கிக் கொள்ளி வைக்க வந்த மகன்
-என்று பட்டினத்தாரின் தாயாருடைய உடற் சுட்டெரிப்பை நிகழ்த்திக் காட்டும்போது பெண்கள் ஒப்பாரி பாடுவார்கள்.

இடம் தந்து நிற்பதெல்லாம் ஆகாயம் என்றால் ஈரல் ஒதுக்கிப் பிள்ளைக்கு இடம் தந்த தாய் வயிறும் ஆகாயந்தானே?ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆட்டும் அம்மா.

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்;
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு;
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி;
சகத்துள்ஆ காசம் தான்அம் சமாதியே (திருமந்திரம் 2812)
- என்று ஆகாயம் பாடுகிறார் திருமூலர். அவர் கணக்கில் இருப்பது ஒரு ஆகாயம் அன்று; மூன்று ஆகாயங்கள். அவை: புற ஆகாயம், அக ஆகாயம், சிவ ஆகாயம் என்பன.

(1) புறப் பொருட்கள் அனைத் துக்கும் தங்க இடம் தருவது ஐம்பூதங்களில் ஒன்றான புற ஆகாயம். அதுதான் இந்தப் பேரண்டத்துக்கே இடம் தந்து நிற்கிறது. பேரண்டம், அதன் பால்வீதிகள், உலகம் எல்லாமே புற ஆகாயமான பூத ஆகாயத்தில் (physical space) தங்களுக்கென்று இடங்கள் பிடித்துத் தங்கியிருக்கின்றன.
(2) புறத்தில் இருக்கிற பொருள்கள் எல்லாம் புறத்தில் இருக்கும்போது பூத ஆகாயத்தில் தங்கியிருக்கின்றன என்றாலும், அவை நமக்குள்ளே, நம் அகத்துக்கு வரும்போது எங்கே தங்குகின்றன? நம் அறிவில்தான் தங்குகின்றன. விரிந்து கிடக்கும் இந்தப் பேரண்டத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்பது நம் அறிவு என்பதால் அறிவும் ஆகாயந்தான்; அக ஆகாயம்.

(3) நம் அறிவுக்குள் அடங்க மாட்டாதது ஒன்றே ஒன்று. அது கடவுள். இருக்கிறதா, இல்லையா, இருக்கிறதென்றால் எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறது? என்னவாக இருக்கிறது? ஏன் இருக்கிறது? எப்போதும் இருக்குமா? என்று எந்தக் கேள்விக்கும் பிடி கொடுக்காமல் இருப்பது அது. ஒரு பொருள் நமக்குள் அகப்படவில்லை என்றால் நாம் அதற்குள் அகப்பட்டிருப்பதாகத் தானே பொருள்? நம் அறிவுக்குள் இடம் பெறாமல், நம் அறிவுக்கே இடம் தந்து நிற்பது செஞ்சுடர்ச் சோதி ஆகிய சிவ ஆகாயம். அதற்கு இடம் தந்து நிற்கும் ஆகாயம் வேறு எதுவுமே இல்லை என்பதால் சிவ ஆகாயமே பர ஆகாயம்—அதாவது உயர் நுண்வெளி—அதாவது சிற்றம்பலம் என்கிற சிதம்பரம். அதனை நமக்குள் பிடித்து வைக்க முடியாது; ஆனால் நாம் அதற்குள் கரைந்து போகலாம். அந்த நிலையை எங்கோ எப்போதோ அல்லாமல் இங்கே இப்போதே பெறுவதே அழகிய சமாதிநிலை என்கிறார் திருமூலர். சமாதி என்பதென்ன? தான் அவன் ஆகுதல்.

தான்அவன் ஆகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்;
ஈனம்இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்துஒன்று வோர்கட்கே. (திருமந்திரம் 2320)

தன் அடையாளத்தைப் பேண நினைப்பதுதான் உலகியல் வாழ்வில் நம்மைப் புதைத்துவிடுகிறது. தன் அடையாளத் துறப்போ நம்மை விடுவிக்கிறது. தன் அடையாளம் துறந்து, தான் அவன் ஆகுதல் சமாதி. அந்த நிலை பெற்றால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகள் நீங்கும்; அவை நீங்கினால், உயிரைக் கட்டி வைத்திருக்கும் கயிறு அறும்; கயிறு அற, உடல் அழுக்கற்ற ஒளி உடல் ஆகும். அருட்பெருஞ்சோதி.

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை;
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்அன்பு தானே. (திருமந்திரம் 1987)

உலகம் நமக்கு இடம் கொடுத்து, நம்மைத் தனக்குள் சொருகி வைத்திருக்கிறது. அந்தச் சொருகலில் இருந்து உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்தால் ஒன்று தெரியும்: நம்மைத் தனக்குள் சொருகி வைத்திருப்பதாக நாம் நினைக்கும் இந்த உலகத்தைக் கருத்தினால் நம் அறிவுக்குள் சொருகிக் கொண்டுவிடலாம். ஆனாலும் நாம் எடுத்துச் சொருகிக் கொள்ள முடியாத, நாம் போய்ச் சொருகிக் கொண்டுவிடுகிற துறை ஒன்று இருக்கிறது. உயிர்களுக்குப் புகலிடமாக இருக்கிற அதை அறிந்தவர்கள் இல்லை. அறிந்து சொருகிக் கிடப்பவர்கள் உண்டானால், அவர்களுக்காக என் உள்ளன்பு உருகிக் கிடக்கும்.

சமாதி என்பது ஆகாசப் பேறு; அதாவது ஆகாயத்தை அடைதல். ஆகாயத்தை அடைதல் என்பது உலகத்தின்மேல் நீலமாக விரிந்திருக்கிற கூரையை அடைதல் அன்று; எல்லாம் அறிவில் அடக்கம்; அறிவோ அதன் விரிவுக்கு அப்பாற்பட்ட சிவம் என்னும் செம்பொருளில் அடக்கம் என்னும் மெய்யுணர்வை அடைதல். மெய்யுணர்வே ஆகாயப் பேறு.

(மெய் அறிவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE