கரு.ஆறுமுகத்தமிழன்
ஓர் அரசு எழுச்சி பெறும்போது, அந்த அரசைத் தாங்கிப் பிடிக்கும் தளமாக ஒரு மெய்யியல் கொள்கையும் எழுச்சி பெறுகிறது; இதன் நேர்மாறும் உண்மையாகலாம்: ஒரு மெய்யியல் கொள்கை எழுச்சி பெறும்போது, அதன் கருத்தை நிறைவேற்றும் ஓர் அரசும் எழுச்சி பெறுகிறது. அசோகனின் அரசு எழுந்தபோது, அதன் பார்வைச் சட்டகமாகப் பவுத்த மெய்யியலும், புசியமித்திரச் சுங்கனின் அரசு எழுந்தபோது, அதன் பார்வைச் சட்டகமாக வைதிக மெய்யியலும் எழுந்தன.
தமிழ்நாட்டில் களப்பிரர் அரசு பௌத்தத்தையும் சமணத்தையும் பார்வைச் சட்டகமாக வைத்திருக்க, பின்னர் எழுச்சி பெற்ற சோழப் பேரரசு சைவத்தைத் தனது பார்வைச் சட்டகமாக்கிக் கொண்டது. சைவத்தால் சோழப் பேரரசும், சோழப் பேரரசால் சைவமும் பெருகித் தழைத்தன.
தேவார மூவரான அப்பர், சம்பந்தர், சுந்தரரால் பாடப்பட்ட சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்து நான்கு என்று ஒரு கணக்கு: மலைநாட்டில் ஒன்று, கொங்குநாட்டில் ஏழு, சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையில் நூற்று இருபத்து ஏழு, காவிரிக்கு வடகரையில் அறுபத்து மூன்று, தொண்டை நாட்டில் முப்பத்திரண்டு, நடுநாட்டில் இருபத்திரண்டு, பாண்டிநாட்டில் பதினான்கு, ஈழ நாட்டில் இரண்டு, துளு நாட்டில் ஒன்று, வடநாட்டில் ஐந்து. சைவம் பெருகித் தழைத்தது சோழநாட்டில்தான் என்பது பட்டியலைப் பார்த்தால் தெரிகிறது.
சோழநாட்டின் காவிரி வடகரைத் திருத்தலம் இப்போது சிதம்பரம் என வழங்கும் தில்லையம்பதி என்கிற சிற்றம்பலம். சிதம்பரத்தைச் சித்+அம்பரம் என்று பிரித்து, சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் வெளி, சிதம்பரம் என்றால் அறிவு வெளி என்று பொருள் உரைப்பாரும் உண்டு. பரம் என்றால் உயர்வெளி; மேடை. பரத்தில் ஆடுகிறவர் பரத்தை அல்லது பரத்தன். பரத்தில் ஆடுகிற நாட்டியம் பரத்தம் என்பார் சொல்லாய்வறிஞர் ப.அருளி. பரத்த நாட்டியம் பரத நாட்டியம் ஆனது பின்னாளில்.
பரத்தில், அதாவது உயரத்தில் இருப்பவர் பரன் அல்லது பரமனாகிய இறைவனும், பரை ஆகிய இறைவியும். இறையின் இருப்பிடமான பரத்தில் பதம் வைக்கும் பேறு பெற்றால் பரமபதம். இனிச் சிதம்பரத்துக்கு வருவோம். அம் என்பது அழகு; அம்பரம் என்பது அழகிய உயர்வெளி. அம்பரம் அம்பலம் ஆகியது. அம்பலம் என்பதும் உயர்வெளியே. அம்பலத்தில் அதாவது மேடையில் அமர்ந்து நீதி சொல்லும் பொறுப்பேற்றவர் அம்பலக்காரர்; ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது காண்க. உயரமாகக் கட்டப்பட்ட அல்லது கருதப்பட்ட கோயிலை மலையாளத்தார் அம்பலம் என்பார்கள். அம்பலம் என்பது அனைவரும் அறிய முடிகிற பொதுவெளியும் ஆகும்.
சிதம்பரத்தின் மூலத் தமிழ் வடிவமான சிற்றம்பலம் என்பது சிறு அம்பலம்; அதாவது, நுண்ணிய உயர்வெளி. வெட்டவெளி. எனவே சிதம்பரத்தின் தமிழாக்கம் சிற்றம்பலம் என்பதைக் காட்டிலும் சிற்றம்பலத்தின் வேறு மொழியாக்கமே சிதம்பரம் என்பது. நிற்க, அனைவர்க்கும் பொதுவான இந்தச் சிற்றம்பல வெளியில் என்ன நிகழ்கிறது? நாட்டியந்தான் நிகழ்கிறது. ஆற்றலின் நாட்டியம். துகள்கள் அல்லது துமிகள் தங்கள் சாடலால், ஆடலால், உலகத்தைக் கூட்டியும் குலைத்தும் ஆடும் நாட்டியம்.
இடையறாது இயங்கிக்கொண்டே இருப்பன துமிகள்; மாறிக்கொண்டே இருப்பன; ஆற்றலே அவற்றின் அடையாளம். ஆற்றலாகத் தோன்றி ஆற்றலாகவே மறைகின்றன. உலகம் முழுமையும் துமிகளின் ஆற்றலால் ஆன வலை என்கிறது துமிகளின் இயற்பியல் (particle physics). புரோட்டான்கள், நியூட்ரான்கள், பையான்கள், பிற என்று துமிகளால் ஆன உலகம். ஏதேனும் ஒன்றை உமிழ்கின்றன; அல்லது ஏதேனும் ஒன்றில் அமிழ்கின்றன. துமிகளின் இடையறாத இயக்கத்தால் ஆற்றல் அருவிபோலக் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
துமிகளின் இயக்கம், அவற்றின் நாட்டியம். அவற்றின் சிறு மின்மினி அசைவில் ஒலி எழும்புகிறது. துமி அசைவுகளின் இசைவு மாறும்போது ஒலியும் மாறுகிறது. ஒவ்வொரு துமியும் தன்னுடைய பாடலை இசைத்துக்கொண்டே ஆடுகிறது. பேரண்டத் திருக்கூத்து. துமிகளின் இந்தப் பேரண்டத் திருக்கூத்தைச் சிவ நடனத்தோடு ஒப்பிடுகிறார் ஃபிரிட்சோஃப் காப்ரா (“பேரண்டத் திருநடனம்”, இயற்பியலின் தாவோ, தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்).
ஆக்கமும் அழிவும் உற்பத்திக் காலத்திலும் ஊழிக் காலத்திலும் மட்டும் நிகழ்வன அல்ல; அவை எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பன. ஆக்கமும் அழிவும் உயிர்ப் பொருள்களிடத்தில் மட்டும் நிகழ்வன அல்ல; உயிரற்ற சடப் பொருள்களிலும் நிகழ்கின்றன என்று தற்கால இயற்பியல் நிறுவியிருக்கிறது. தற்கால இயற்பியலாளனின் பார்வையில் சிவ நடனம் என்பது நுண்ணிய அணுத் துகள்களின் ஆட்டமே ஆகும் என்கிறார் காப்ரா.
ஓய்வு, இயக்கத்தின் அடையாளம்
பள்ளிகொண்ட பெருமாள் ஓய்வின் அடையாளம் என்றால் சிவன் இயக்கத்தின் அடையாளம்; கூத்தப்பிரானாக அவனைச் சித்திரித்த கோலம் என்றும் ஓய்வின்றி இயங்குகிற சுழற்சியின் கலை வடிவம். சிவ நடனத்தைப் பற்றி ஆனந்த குமாரசாமி குறிப்பதை காப்ரா எடுத்துக்காட்டுகிறார்: சிவபெருமானின் கருத்திசைவின்றி இயற்கையால் நடனமாட முடியாது. பேரானந்தப் பரவசமாய்க் கூத்தன் எழுகிறான்; அசைவிலாப் பொருள்களின் வழியே திருக்கூத்துப் பரவுகிறது; ஓசைகள் துடித்தெழுகின்றன; ஆகாகா! பருப்பொருள்களும் நடனமாடுகின்றன; அவன் புகழ் பாடுகின்றன; திருக்கூத்தால் எண்ணற்ற நிகழ்வுகளை நிகழ்த்துகிறான்.
கால முடிவுவரையிலும் திருக்கூத்து தொடர்கிறது. பின் அனைத்து வடிவங்களும் பெயர்களும் ஊழித் தீயில் கருகுகின்றன; பெரும் பேரமைதி நிலவுகிறது. இது கவிதைதான். ஆனால், விஞ்ஞானக் குறைவற்றது. (ஆனந்த குமாரசாமியின் நூலைச் சிவானந்த நடனம் என்ற பெயரில் தமிழுக்குப் பெயர்த்தவர் நவாலியூர் சோ.நடராசன்; மேலே கண்ட மொழியாக்கம் பொன்.சின்னத்தம்பி முருகேசனுடையது). திருமந்திரத்துக்கு வருவோம்:
காளியோடு ஆடிக் கனக அசலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்,தீ,கால், நீள்வான் இடைஆடி
நாள்உற அம்பலத் தேஆடும் நாதனே.
(திருமந்திரம் 2746)
போட்டிக்கு இழுத்த காளி வெட்கமடையும்படி ஆடினான்; தான் அசையாமல் அசையாது உலகு என்று தேவர்க்குக் காட்டப் பொன்மலையில் ஆடினான்; சுடுகாட்டில் பிணம் பிடுங்கித் தின்னும் கொள்ளிவாய்ப் பேய்களோடு ஆடினான்; நிலத்தில் ஆடினான்; நீரில் ஆடினான்; தீயில் ஆடினான்; காற்றில் ஆடினான்; வானத்தின் இடையிலும்தான் ஆடினான்; நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் அம்பலந்தான்; அம்பலங்கள் எல்லாவற்றிலும் ஆடுகிறான்தான். ஆடாத இடமும் உண்டோ?
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்;
ஆதி நடம்செய்கை ஆரும் அறிகிலர்;
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
(திருமந்திரம் 2787)
இறைவனைக் கூத்தாடி என்பார்கள் உயிரினர். இறைவனின் கூத்தை அறிந்தா சொல்கிறார்கள்? இறைவனின் கூத்தை அறிந்து பேசுக: இறைவனின் திருக்கூத்து ஆற்றலின் அருட்கூத்து.
‘தில்லை மூதூர் ஆடிய திருவடி’ என்று மணிவாசகரும் பிறரும் கூத்தைத் தில்லை என்னும் தலத்தை மையமாக்கிப் பேச, திருமூலரோ தலத்தைத் தூக்கிப் பொதுவெளியாக்குகிறார்:
எங்கும் திருமேனி; எங்கும் சிவசத்தி;
எங்கும் சிதம்பரம்; எங்கும் திருநட்டம்...
(திருமந்திரம் 2722)
பார்க்கும் இடமெல்லாம் தில்லையம்பலந்தான்; பார்ப்பதெல்லாமே திருக்கூத்துத்தான். தலம் நந்தனை விடாது. பொதுவெளி எல்லோர்க்குமானது. ஒன்றைக் கவனியுங்கள்; சிதம்பரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் திருமூலர். பன்னிரு திருமுறைகளில் வேறு எங்கும் சிதம்பரம் என்ற பெயர் இடம்பெறவில்லை என்கிறார் க.வெள்ளைவாரணர் (தில்லைப் பெருங்கோயில் வரலாறு). பொதுமை வேண்டிச் சிற்றம்பலத்தைச் சிதம்பரமாக்கியவர் திருமூலர்தான் போலிருக்கிறது.
அது ஒருபுறமிருக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனமாகிய CERN-இல் தில்லைக் கூத்தன் சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும் மனம் கொள்க.
(திருக்கூத்து தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago