உயிர் வளர்க்கும் திருமந்திரம் 90: பிடித்ததைத் தாபிக்கும் பேராணவம்

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

திருமூலர் தெளிவாக வரையறுப்பவற்றுள் மற்றொன்று ஆணவம். ‘நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்’ (திருமந்திரம் 2421). எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்று முட்டிக்கொள்வதே ஆணவம். ஆணவம் என்பது அறியாமை.

உயிர்கள் இயல்பாகவே அறிவுடையவை—இறைவனைப்போல. உயிரும் இறைவனைப்போலவே அறிவுடைய பொருள் என்றால், இறைவனுக்கும் ஓர் உயிருக்கும் என்ன வேறுபாடு? இறை அறிவு எதனாலும் கட்டுப்படுத்தப்படாத பேரறிவு. உயிர் அறிவோ பாசத்தினால், அதாவது மனத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட சிற்றறிவு.

அறிவு நிகழ்கிறது

இன்னும் கொஞ்சம் விரித்து விசாரிக்கலாம்: அறிவு எப்படி நிகழ்கிறது? அறிவின் தன்மை என்ன? ஒட்டகம் ஒன்றைப் பார்க்கிறீர்கள்; அது ஒட்டகம் என்பது எப்படித் தெரிந்தது? உங்கள் பார்வைப் புலன் பார்க்கப்படும் பொருளின்மீது பரவி, அதை அளந்து, உங்களுக்குச் சொல்கிறது; அறிவு நிகழ்கிறது. பார்வையில்லாதவர் ஒரு பொருளை அறிய முற்படும்போது, பொருளைத் தடவிப் பார்த்து அறிகிறார்; அறிவு நிகழ்கிறது. ஒரு பொருளை அறிகிறவர் அதன்மீது பரவாமல் அறிய முடியாது. அவ்வாறு பரவி அறிவது சிற்றறிவு. பரவாமலே அறிவது பேரறிவு. எளிதாகச் சொன்னால், அழுந்தி (அனுபவித்து) அறிவது சிற்றறிவு. அழுந்தாமலே (அனுபவிக்காமலே) அறிவது பேரறிவு. உயிர் அறிவு சிற்றறிவு. இறை அறிவு பேரறிவு.

உயிர் சிற்றறிவுக்கு எது அடையாளம்? ‘நான்’, ‘எனது’ என்று கூத்திடுகிறதில்லையா, அதுதான் அடையாளம். முழு அறிவுடையவன் அப்படிக் கூத்திடுவானா? எந்த ஒன்றுக்கும் தான்மட்டுமே ஒற்றைக் காரணமாய் இருக்க முடியாது என்று அவனுக்குத் தெரியாதா? ‘செய்பவன் தானாக இருந்தாலும் நிகழ்கிற செயல்கள் மூலப் பொருள்களாலும் துணைப்பொருள்களாலும் பிற சூழல் அமைவுகளாலுமே நிகழ்கின்றன’ என்று எதையும் விரிவான பின்புலத்தில் வைத்துப் பார்க்கத் தெரிந்தவன் முழு அறிவாளன். அவ்வாறு அறியத் தெரியாமல் ‘நான்தான்’, ‘என்னால்தான்’ என்பவன் சிற்றறிவாளன். அணு என்பதிலிருந்து வந்த சொல் ஆணவம். உயிர்களை அணுத்தன்மைப்படுத்துவது எதுவோ அது ஆணவம். அணு என்றால் சிறுமை. உயிர்களின் அறிவைச் சுருக்கிச் சிறுமைப்படுத்துவது ஆணவம் என்க.

அறியாமை செய்யும் ஏழு வேலைகள்

ஆணவம் என்கிற அறியாமை ஏழு வேலைகளைச் செய்யும்: (1) உண்மையைப் பொய் என்றும் பொய்யை உண்மை என்றும் மயங்க வைக்கும் (2) தனக்கு நிகர் யாருமில்லை என்று மதம் பிடிக்க வைக்கும் (3) ஆசை கொள்ள வைக்கும் (4) ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதபோது ஏங்க வைக்கும் (5) கிடைத்தது கைவிட்டுப் போகும்போது வருந்த வைக்கும் (6) அதை எவ்வாறு மீண்டும் அடைவதென்று எண்ணி வாட வைக்கும் (7) எல்லாவற்றையும் நான் செய்தேன் என்று திமிர்கொள்ள வைக்கும். சுருக்கமாக, தன்னைப் பிறவற்றின் தொடர்ச்சியிலும் தொடர்பிலும் வைத்துக் கருதாமல், தான் தனி என்று கருதவைக்கும். தான் தனி என்றும் விண்ணிறக்கம் (அவதாரம்) என்றும் கருதிக்கொள்வது அறியாமையினால் வரும் கீழ்மை.

நேர்த்து நிகர்அல்லார் நீர்அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்துஅதனை
உள்ளத்தால் உள்ளி, உரைத்துஉராய் ஊர்கேட்பத்
துள்ளித் தூண் முட்டுமாம் கீழ்
(நாலடியார் 64)

-என்பது நாலடியார். தனக்கு ஒப்புமை இல்லாதவர்கள் தம்மை எதிர்த்துத் தகுதியில்லாத சொற்களைச் சொன்னால், அறிவில் பெரியவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அவன் கிடக்கிறான், புரியாமல் பேசுகிறான் என்று போய்விடுவார்கள். ஆனால் அறிவில் சிறியவர்கள் அதைப் பெரிதுபடுத்துவார்கள். தன்னிடம் மட்டும் தனியாகப் பேசிய பேச்சை ஊரார் அனைவரும் அறியுமாறு சொல்லி, இப்படி ஒருவன் பேசிவிட்டான்,
அதெப்படிப் பேசலாம் என்று துள்ளிக் குதிப்பார்கள். ஆத்திரத்தில் தூணிலேகூடப் போய் முட்டிக்கொள்வார்கள். இந்த மூடத்தனத்தை அறுத்து அறிவை வளர்ப்பதே உயிர் வளர்க்கும் வகை.

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள் 346)
‘நான்’ என்று நீங்கள் சொல்வது எது? உடம்பா? எனில் இறுதியில் அது உங்களோடு வருவதில்லையே? ‘எனது’ என்று நீங்கள் சொல்பவை எவை? அவற்றில் எவற்றையேனும் உடன்கொண்டு போவீர்களா? வருமா? வாய்ப்பில்லை. எதுவுமே உங்களுக்குச் சொந்தமில்லாதபோது அவற்றையே பற்றிக்கொண்டு உழல்கிறீர்களே, ஏன்? அறியாமை. அதனால் வரும் செருக்கு. நீங்கள் கட்டி இழுக்கும் அவற்றை, உங்களைக் கட்டி இழுக்கும் அவற்றை அறுத்துவிட்டால், வானோர்க்கும் உயர்ந்த உலகத்துக்குள் எளிதாகப் புகுந்துவிடமாட்டீர்களா?
பிடித்ததையே தாபிக்கும் பேராண வத்தை
அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.
(தாயுமானவர் பாடல்கள், பராபரக்கண்ணி 306)
தான் பிடித்ததற்கு மூன்றே கால் என்று நிலைநிறுவுகிற பெரும் ஆணவம்; அதனை அடித்துத் துரத்த வல்லார் யார்? ஆணவத்தைப் போக்க என்ன வழி? தாயுமானவர்க்கும் இது கேள்வி.

சைவ சமய வகைகளில் பாசுபதம் என்று ஒரு வகுப்பு. குஜராத்தின் கார்வான் என்று இப்போது வழங்கப்படும் காயாரோகணத்தில் தோன்றியது. இலகுலீசர் என்பவர் இந்தப் பிரிவின் தோற்ற முதல்வர். கையில் தண்டு பிடித்துச் சைவத்தை ஒழுங்கு செய்ய வந்தவர். கையில் தண்டு ஏந்திய கோலத்தினர் என்பதால் ‘இலகுட பாணி’ என்று வழங்கப்பட்டவர். தமிழ்நாட்டில் கேலியாக வழங்கப்படும் ‘இலகுட பாண்டி’ என்பது இதன் மருவலாக இருக்க வேண்டும். பாசுபதர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பெற்ற செல்வாக்குக்கு அடையாளமாகவும் அது இருக்கலாம்.
பாசுபதர்களுக்கு ஒரு கருத்து உண்டு. ஆணவத்தை அழிக்கத் தன்னை அவமானப்படுத்திக் கொள்ளுதல் என்பது அது.

சாம்பலைப் பூசிக்கொள்வார்கள்; பொது இடத்தில் ஆடுவார்கள்; கத்துவார்கள்; அட்டகாசமாய்ச் சிரிப்பார்கள்; அவதூறான, அருவருப்பான, பொருளற்ற சொற்களைப் பேசுவார்கள்; கிறுக்கர்களைப்போல நடந்துகொள்வார்கள். அதன்வழியாகத் தங்கள் மதிப்பை அழித்து அவமதிப்பைப் பெற்றுக்கொள்வார்கள். ‘ஒழிந்தது—என் ஆணவம், என் கர்வம், என் அகம்பாவம்—அத்தனையும் அற்றுப் போய்விட்டது’ என்று மகிழ்ச்சி கொள்வார்கள். ஆணவத்தை அடித்துத் துரத்த அவர்கள் கண்டுபிடித்த வழி இது.

எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் இதை? சிவனிடமிருந்துதான். சிவன் மட்டும் என்ன நயத்தகு நாகரிகனா? சுடுகாட்டுச் சாம்பலை அள்ளிப் பூசிக்கொள்ளும் பித்தன்; பிணத்தின்மேல் ஆடும் பேயன்; அம்மணமாய் அனைவர்க்கும் முன் வந்த நக்கன்; அட்டகாசமாய்ச் சிரித்து முப்புரத்தையும் எரித்த கிறுக்கன்; கழன்ற கடுக்கனைக் காலால் எடுத்துக் காதில் அணிந்து காளியை வெட்கமுறச் செய்த கூத்தாடி. கற்றுக்கொடுத்தோன் எவ்வழி கற்றுக்கொண்டோர் அவ்வழி. திருமூலர் பரிந்துரை வேறு:
உயிர்க்குஉயிர் ஆகி ஒழிவுஅற்று அழிவுஅற்று
அயிர்ப்புஅறு காரண உபாதி விதிரேகத்து
உயிர்ப்பு உறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புஉறும் ஆணவம் வீடல்செய் யாவே.
(திருமந்திரம் 2504)

பாலில் நெய்போல இறைவன் உயிருக்கு உயிராய் உள்ளுக்குள்ளேயே நிற்கிறான் என்றால் தயிரில் நெய்போலத் தோன்றித் தொலைய வேண்டியதுதானே? அப்படி வெளிப்பட வேண்டுமானால் உயிர் தன் துன்பத்துக்குக் காரணமாய் இருப்பவற்றைக் களைய வேண்டும். களைந்தால் இறைவன் வெளிப்படுவான்; இறைவன் வெளிப்பட்டால் ஒழிய ஆணவம் நீங்காது. அதற்கு என்ன வழி?
அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடிமையாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்;
அடியார் அருளால் அவன்அடி கூட
அடியான் இவன்என்று அடிமைகொண் டானே.
(திருமந்திரம் 2624) அடிமையாய் இருங்கள். கண்டுகொள்வான். கொண்டு போவான்.

விடுதலைக்கு வழி அடிமைத்தனம் என்று புதிய கொள்கை வைக்கிறார் திருமூலர். போற்றுவாராயினும் தூற்றுவாராயினும் விடுதலையே விரும்புக.
(விடுதலையே வழி) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்