பக்ரித் திருநாள் சிறப்புக் கட்டுரை: சொர்க்கத்தின் கல்

By செய்திப்பிரிவு

ஹபீபா ஹைதர்

திருக்குர் ஆனில் மக்காவை குறிப்பிடும் பெயர்கள் 11. பொதுவாக ‘ஆல்மஸ்ஜிதுல் ஹரம்’ என்று உலக முஸ்லிம்களால் அறியப்படும் மக்காவின் பள்ளியும் கஃபாவும் அதன் புனிதக் கற்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் கண்ணீராலும் முத்தங்களாலும் நிரம்பி கல்லுக்குள் ஈரமாய்க் காட்சி தருகின்றன.
நபி இப்ராஹீம் காலத்திலிருந்து முஸ்லிம்கள் ஐயாயிரம் ஆண்டுகளாக ஹஜ் என்னும் வணக்கத்தை நிறைவேற்ற வந்து செல்கிற வரலாறு தொடங்குகிறது. உலகின் தாய் கிராமம் என்று பொருள்படும் ‘உம்முல்குரா’ என்பது மக்காவின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும்.

கஃபாவின் புனிதங்களில் இரண்டு கற்களுக்கு முக்கிய இடம் உள்ளது. நபி இப்ராஹீம் அவர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கஃபாவைக் கட்டத் தொடங்கியபோது அவருக்கு உதவியாக அவரது மகன் நபி இஸ்மாயில் எடுத்துவந்து கொடுத்த கல்லில் ஏறி நின்று கஃபாவின் உயரமான சுவர்களை எழுப்பியபோது, நபி இப்ராஹீமின் இரண்டு பாதங்களும் அந்தக் கல்லில் பதிந்ததை இன்றும் கஃபாவில் காணமுடியும். இது வட்ட வடிவமான கல். இதை மகாமே இப்ராஹீம் என்று சொல்கிறார்கள். நபி இப்ரஹீம் இக்கல்லின் மீது ஏறி நின்றே ஹஜ்ஜுக்கான முதல் அழைப்பை விடுத்தார்கள்.

‘மகாமு’ என்றால் நிற்கும் இடம். பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொள்கிற புனிதமான இடங்களில் இதுவும் ஒன்று. நபி இப்ராஹீமின் பாதம்பட்ட இக்கல் சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் வெள்ளைக்குச் சமமான ஒரு வண்ணத்தில் காணப்படுகிறது. சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த இரண்டு கற்களில் ஒன்றான மகாமு இப்ரஹீம், கஃபாவின் வாசலுக்கு முன் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. ‘மகாமு இப்ராஹீம்’ சொர்க்கத்தின் மரகதக்கல் என்று இப்னு அம்ருபின் ஆஸ்ரலி கூறுகிறார்.

ஹஜருல் அஸ்வத் கல்

மக்காவின் வரலாற்றில் இந்தக் கல்லின் சிறப்புபோல் மற்றொன்று அறியப்படவில்லை. ஹஜ் செல்லும் கோடி ஜனங்களும் இக்கல்லை முத்தமிட்டு பெருமரியாதை செய்கின்றனர். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரும்போது கொண்டுவந்த மூன்று பொருட்கள், அவர் அணிந்துவந்த சொர்க்கத்தின் இலைகள், அவரது கைத்தடியோடு சொர்க்கத்துக் கல்லையும் சுமந்துவந்தார்.

இக்கல்லைச் சுமந்துகொண்டு ஆதம் அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாகும். நபி இப்ராஹீம் கஃபாவின் அடையாளமாக ஒரு கல்லை வைக்கத் தீர்மானித்தபோது அவரது மகன் இந்தியாவுக்கு வந்து ஆதம் கொண்டுவந்த கல்லை கஃபாவுக்கு எடுத்துச் சென்று வைத்ததாக ஒரு அறிவிப்பு உள்ளது. இக்கல்லுக்கு இறைவனது வலக்கரம் என்ற அர்த்தம் கொண்ட பெயர் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்ட ஹாஜிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும். நபிகள் நாயகம் இந்தக் கல்லை முத்தமிட்டதைப் பின்பற்றி ஹாஜிகள் ஒவ்வொருவரும் முத்தமிடுகிறார்கள்.

நிற பேதம், பண்பாட்டு பேதமின்றி, பிரதேசப் பாகுபாடின்றி, வர்க்கப் பேதமின்றி பல்லாயிரம் பேரின் முத்தங்களை ஏந்திக்கொண்ட தாயாக அன்பின் மடியாக, ஆன்மிகத்தின் தாழ்வாரமாக கஃபாவின் கண்களைப் போல் ஹஜருல் அஸ்வத் கல் உலகின் உதடுகளுக்கு ஒளி அமுதம் ஊட்டிக்கொண்டிருக்கிறது.

மார்க்கச் சட்டங்களில் மாசற்ற ஆட்சியை நடத்திய கலிபா உமர் இந்தக் கல்லை முத்தமிட்டபோது இவ்வாறு சொன்னார்கள். “ஹஜருல் அஸ்வத் கல்லே, எனக்குத் தெரியும் நீ ஒரு சாதாரணக் கல் என்று. அல்லாஹ்வின் தூதர் உன்னை முத்தமிட்டதால் நானும் முத்தமிடுகிறேன்”. பக்கத்தில் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த அலி, “இல்லை, உமர். இது இறைவனது கரமல்லவா” என்று நினைவூட்டினார். தனது தவறைத் திருத்திக்கொண்ட உமர், ‘அலி இல்லையெனில் உமர் அழிந்திருப்பான்’ என்று கூறியிருக்கிறார்.
“கல்லும் ஒருபோது கரைந்துருகும் என்மனக்
கற்கரையவில்லை ஐயனே”

- என்னும் குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல் மனதுக்குள் வந்து அலைமோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE