தெய்வத்தின் குரல்: சிற்றூறல் உண்ணீர் ஆகிவிடும்

By செய்திப்பிரிவு

கீதையில் ஒரு சுலோகம் அர்த்தம் புரியாமலிருந்து வந்தது. அர்ஜுனனுக்கு சுவாமி ஞான யோகத்தை உபதேசம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இருக்கிற ஒரே சத்வஸ்து அழிவில்லாத ஒரே ஆத்மாதான் என்று சொல்லி, “இதொன்றிலேயே நிச்சய புத்தியுடன் பிடிப்பு வேண்டும்; இல்லாவிட்டால் மீமாம்ஸகர்கள் சொல்கிற மாதிரி வேதத்தின் கர்மகாண்டத்தில் உள்ள பலவிதமான பலன்களைத் தரும் பலவிதமான க்ரியா விசேஷங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக ஈடுபட்டு நிச்சய புத்தி ஏற்படாமலே வீணாய்ப் போவதாகத்தானாகும்” என்கிறார்.

சத்வ-ரஜோ-தமோ குணங்களில் பலவிதமாகக் கிளைவிட்டுச் செல்லும் காரியங்களையே விஷயமாகக் கொண்டது. நீ இந்த முக்குணங்களும் தொடாத ஆத்மாவில் ஆடாமல் அசையாமல் இருந்துவிடு” என்று சொல்லி ஒரு சுலோகத்தைச் சொல்கிறார். புரியாத புதிராக இருந்த சுலோகம்:
யாவாந் அர்த்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே |
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: || 1
அர்த்தம் இன்னவென்று தாத்பர்யமாகப் புரியாவிட்டாலும் வார்த்தைகளைச் சேர்த்துப் பார்க்கும்போது என்னவாகு மென்றால், “எவ்வாறு பரந்து விரிந்து கிடக்கிற தண்ணீர்க் காட்டில் ஒரு சின்ன ஊற்றின் பிரயோஜனம் கிடைக்குமோ அவ்வாறே ஞானவானான பிராமணனுக்கு எல்லா வேதத்திலேயுமாம்.”

‘எவ்வாறு’ – ‘அவ்வாறு’ (யாவான்-தாவான்) என்று என்னமோ நமக்கு நன்றாக த்ருஷ்டாந்தம் கொடுத்துப் புரியவைக்கிற மாதிரி பகவான் சிரமப்பட்டிருந்தாலும் நாமும் அர்த்தம் புரியாமல்தான் சிரமப்படுகிறோம்! ‘சின்ன ஊற்றினால் பெறக்கூடிய பயனைப் பெரிய ஜல பிரவாஹத்திலிருந்து பெறலாம்’ என்பது சிரமமில்லாமல் புரிகிறது. ஆனால் “எவ்வாறு இதுவோ அவ்வாறே நல்ல ஞானமுடைய பிராமணனுக்கு எல்லா வேதமும்” என்றால், எவ்வாறு இவ்வாறு சொல்கிறார் என்று புரியாமல் இருந்தது. அப்புறம் இந்த சங்கர விஜய சுலோகத்தைப் பார்த்த பின்தான் அந்த உபமானம் இங்கே சிக்கலில்லாமல் வருவதால் இதைக் கொண்டு அதுவும் தெளிவாயிற்று.

அத்வைதப் பேரானந்தம்

இங்கே ஆசார்யாள் அநேக சாஸ்திரங்கள் படித்தாலும் அவற்றின் சின்னச் சின்ன ஆனந்தங்களெல்லாம் அத்வைதப் பேரானந்தத்தில் அமிழ்ந்து கிடப்பவைதான் என்று கண்டுகொண்டு உள்ளூர அதிலேயே அமிழ்ந்திருந்தார் என்று சொல்லிவிட்டு, “கூபே யோ அர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த ந அந்தர் – பவேத்கிம் ?” என்று அதே உவமையை கேள்வி ரூபத்தில் போட்டு முடித்திருக்கிறது. ‘கூபம்’ என்றால் கிணறு. ‘அதிலே என்ன பிரயோஜனமுண்டோ அது’ என்பதை ‘கூபே யோ அர்த்த: ஸ’ என்று சொல்லியிருக்கிறது. ‘ஒரு கிணற்றைக் கொண்டு என்ன பிரயோஜனம் பெறலாமோ, அது பரந்து விரிந்து கிடக்கும் ஒரு சுத்தமான தீர்த்த பிரவாகத்துக் குள்ளிருந்து கிடைக்காதா என்ன?’ என்று கேட்டு முடித்திருக்கிறது. ‘விதத’ என்றால் ‘பரந்து விரிந்த’. ‘ஸு பயஸ்’ – நல்ல ஜலம். “கிணற்றினால் கிடைக்கும் பயன் பெரிய நதி பிரவாஹத்தில் கிடைக்காதா என்ன?”

‘ஹந்த’ என்றால் சர்வ சாமானியமான ஒரு விஷயம் தெரியாவிட்டால், ‘அடக் கஷ்டமே! இதுகூடவா தெரியலை?’ என்று கொஞ்சம் குத்தலாகவும் கொஞ்சம் பரிதாபமாகவும் கேட்பதாக ஆகும். “மாதோ!” என்று தமிழ்ச் செய்யுளில் வரும்.
ஆசார்யாள் பெற்ற அத்வை தானந்தத்திற்கு முன்னே ஏனைய சாஸ்திர ஆனந்தங்களெல்லாம் மகாநதிக்கு முன்னே கிணறுகள் மாதிரிதான்.

பான யோக்கியம்

நதிப் பாசனத்துக்கு வசதியில்லாத ராமநாதபுரத்தில் வேண்டுமானால் பெரிசாக ஆழமாக கிணறு வெட்டி வயலுக்கு இறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். காவேரி டெல்டாவில் எந்த விவசாயியாவது ஆழக் கிணறு வெட்டிப் பாசனம் பண்ணுவானா? “கூபே யோ அர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே…” தானே?
‘ஸுபயஸி தீர்த்தே’ என்று அர்த்த புஷ்டியுடன் போட்டியிருக்கிறது. ‘ஊற்று இத்தனூண்டு இருந்து, சமுத்திரம் எத்தனாம் பெரிசோ இருந்தாலும் சுத்த தீர்த்தமுள்ள ஊற்று ஜலம்தானே பான யோக்கியமாயிருக்கிறது? உப்பு சமுத்திரம் தாகம் தீர்த்துக்கொள்ள பிரயோஜனப்படுமா?’ என்று அவ்வைப் பாட்டி பாடி வைத்தி ருப்பதைக் குழந்தை நாளிலேயே படித்திருக்கிறோம் – மறந்துகூடப் போயிருக்கும்:
கடல் பெரிது.

மண்ணீரும் ஆகாது ; அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்.
அழுக்கற்ற அமலப் பிரவாகமாக அத்வைத வித்யை இருக்கிறது. மற்ற சாஸ்திரங்கள் கொஞ்சமாவது தூர் வார வேண்டிய கிணறுகள்தான்.
இதைத்தான் கீதையிலும் பகவான் சொல்லியிருக்கிறார். “சகல வேதங்களும் — அதாவது, வேதங்களில் விரிவாக உள்ள கர்ம காண்டம் முழுதும் — சின்னச் சின்ன ஊற்றுக்களைப் போலக் கொஞ்சம் கொஞ்சம் பலனைக் கொடுக்கும் அநேக கர்மாக்களைத்தான் சொல்லியிருக்கிறது.

‘உதபானம்’ என்றால் குடிக்க ஏதோ கொஞ்சம் ஜலம் தரும் சின்ன ஊற்று, “சிற்றூறல்”. அந்தப் பலன்களில் ஆசைக்காகவே அவற்றிலே நீ போனாயானால் (அர்ஜுனனைப் பார்த்துச் சொல்கிறார்…) ஆசை அழுக்கு, முக்குண அழுக்கு எல்லாம் படிந்து வீணாய்ப் போய்விடுவாய். நானாவிதமான ஆசைப் பூர்த்திகளில் ஓடிக் கொண்டு ஒரு நிச்சய புத்தியும் பெறாமல் கெட்டுப்போவாய். அப்படிப் பண்ணாதே! குணாதீதமாக, ஆசைகள் அற்றுப் போகும் நிலையாக, உள்ள அத்வைத ஆத்மாவையே பிடித்துக்கொள்.

அது சிற்றூறல் அல்ல; எங்கே பார்த்தாலும் பரவியுள்ள பெரிய ஜல பிரவாகம். அது இருக்கும்போது இவற்றை ஏன் பிடித்துக்கொள்ள வேண்டும்? ஊற்றுக்களின் பிரயோஜனத்தை எல்லாம் கூட்டினாலும் அதைவிட பிரவாகத்தின் பயன்தானே பெரிசு? அப்படி கர்ம காண்டத்தில் செய்யும் பலவற்றின் பிரயோஜனங்களுக்கும் மேலானது ஞான காண்டத்தினால் பெறும் ஆத்ம சித்தி. கீதை ச்லோகத்திற்கு அர்த்தம் தேடித் தேடி சங்கர விஜய சுலோகத்திலிருந்து கண்டு பிடிக்கும்படி இருக்கிறது! பகவான் சொன்னதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் சங்கரவிஜயக்காரர் சுலோகம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது!

(தெய்வத்தின் குரல் 
ஐந்தாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்