சூபி வழி 22: உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

By செய்திப்பிரிவு

முகமது ஹுசைன் 

ஓர் அகல்விளக்காய் ஆகிவிடு
ஓர் ஏணியாய் மாறிவிடு
ஓர் உயிர் காக்கும் படகாய் 
      தத்தளிப்போரைக் கரை சேர்
ஒரு நாடோடி மேய்ப்பனைப் போல
சகலத்தையும் உதறிவிடு
                                                           - ஜலாலுதீன் ருமி

உடலை வருத்தி, உள்ளத்தை அடக்கி, புலனின்பங்களைத் துறந்து, மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற ஞானி அபுல் ஹுசைன் நூரி. மனத்தின் இச்சைகளை அடக்க, தனக்குத்தானே அவர் விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் எண்ணிலடங்காதவை. காண்பதிலும் கேட்பதிலும் இறைவனை மட்டுமே உணர்ந்த அவரது வாழ்வு முழுமையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. சமரசமற்ற இறைபக்திக்குச் சொந்தக்காரரான அவர், சூபி உலகின் பெரும் ஆளுமை என்று கருதப்படும் ஸரீஅஸ்ஸகதியின் முதன்மை சீடர் ஆவார்.

குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம், குராஸானிலிருந்து பக்தாது நகரத்துக்கு வந்து குடியேறியது. எல்லா ஞானிகளின் வாழ்வைப் போல, இவரது வாழ்வும் ஆன்மிகத் தேடலாலும் அளப்பரிய ஞான வேட்கையாலும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தார்.

அன்பும் வளமும் உயர்தரமான கல்வியும் அவருக்குத் திகட்டத் திகட்ட அளிக்கப்பட்டன. அவரது புத்திக்கூர்மையாலும் தெளிவான சிந்தனையாலும் ஒப்பற்ற பக்தியினாலும் கவரப்பட்ட ஸரீஅஸ்ஸகதி, அவரைத் தன்னுடைய சீடராக ஆக்கிக்கொண்டார். நூரியின் ஆன்மிக வாழ்வைப் பட்டைத் தீட்டிய முழுப்பொறுப்பும் ஸரீஅஸ்ஸகதியைச் சாரும். ஆன்மிகத்தின் பல படிநிலைகளையும் மெய்ஞ்ஞானத்தின் பல ரகசியங்களையும் நூரி அவரிடம் கற்றுக்கொண்டார்.

இருளடைந்த அறைக்குள் சிறை

ஞானம் கைவரப்பெற்றாலும், மனத்தின் இச்சையைக் கட்டுக்குள் கொண்டுவர நூரி மிகவும் சிரமப்பட்டார். ஓர் ஆண்டு அல்ல, ஈராண்டு அல்ல; மொத்தமாக 30 ஆண்டுகள் தன்னை ஏனைய மனிதர்களிடமிருந்து விலக்கி, ஓர் இருளடைந்த சிறு அறையினுள் தனது வாழ்வைச் சிறைப்படுத்திக்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் தீவிரமான கட்டுப்பாடுகளை தனக்குத்தானே விதித்துக்கொண்டார். பல தொடர் போராட்டங்களுக்குப் பின், தனது மனத்தை அவர் கட்டுக்குள் கொண்டுவந்த விதம் அலாதியானது. தனது மனம் சரியென்று நினைப்பதை அவர் நிறைவேற்ற மறுத்தார். தனது மனம் தவறென்று நினைப்பதை அவர் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றினார்.

மற்றவர்களுக்கு அது பொருந்துமோ இல்லையோ, இந்த நடைமுறை அவருக்குப் பொருந்தியது. மனமும் அவர் கட்டுக்குள் வந்தது. மனத்தின் இச்சைகள் முற்றிலுமாக நின்று போயின. ஆசைகள் அவர் சொல்படி கேட்டன.
முரட்டுத்தனமான பக்தி அவருடையது. தனது உடலின் தேவைகளை முற்றிலும் துறந்து இறைவனை மட்டுமே தனது வாழ்வின் ஆதாரமாகப் பிடித்துக்கொண்டார். பசியை உணரும் திறனை இழந்தவராக இருந்தார். வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போது எப்போதும் ஒரு ரொட்டியை எடுத்துச் செல்வார். 

கடைக்குச் செல்லும் வழியில் அந்த ரொட்டியை, பசியில் வாடும் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்துவிடுவார். கடையில் இருப்பவர்கள், வீட்டிலேயே அவர் உணவு அருந்திவிட்டு வந்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள். வீட்டில் இருப்பவர்களோ, அவர் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற ரொட்டியை உட்கொண்டிருப்பார் என நினைத்துக்கொள்வார்கள். இந்த உண்மை அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகப் பல ஆண்டுகள் நீடித்தது.

மக்களோடு மக்களாக

மனத்தில் பட்டதை, எங்கும் எப்போதும் எவரிடமும் வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர் நூரி. அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய சூபி ஞானியான ஷிப்லி, ஒருநாள் பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் முன் அமர்ந்து இறை உரை ஆற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தக் கூட்டத்துக்குச் சென்ற நூரி, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து, மெய்ஞ்ஞானத்தில் திளைத்தபடி, ஷிப்லி ஆற்றும் உரையைக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

அதன் பின்னர் திடீரென்று எழுந்த நூரி, “ஷிப்லி அவர்களே, தான் பின்பற்றுவதை மக்களுக்குச் சொல்பவரே உண்மையான ஞானி. நீங்கள் செய்யும் அறபோதத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், மேடையிலிருந்து இறங்கி மக்களோடு மக்களாக அமர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். 

ஷிப்லி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் மௌனித்து கண்களை மூடி இருந்தார். பின்பு மேடையிலிருந்து இறங்கிவந்தார். நூரியைக் கட்டிப் பிடித்து, பின்பு மக்களுடன் மக்களாக அமர்ந்துகொண்டார். சிறிது நேரம் கழித்து “ஷிப்லி அவர்களே, ஞானியின் அறிவுரை, மக்களை இறைவனை நோக்கிச் செல்ல வைக்க வேண்டும். இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு திரையாக அது இருக்கக்கூடாது. அவ்விதம் செய்வது முறையற்றதும்கூட” என்று ஷிப்லியிடம் நூரி கூறினார்.

ஒருமுறை சீடர் ஒருவர் அவரிடம் “இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் “இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவனே ஆதாரம்” என்று நூரி பதில் கூறினார். “நீ ஒரு சூபியாக மாற வேண்டும் என்று விரும்பினால், எல்லா இன்பங்களையும் துறந்து, இறைவனிடம் நட்பும் உலகின் மீது பகைமையும் கொள். உனக்கு எதுவும் கிடைக்காதபோது அமைதியாக இரு. உனக்கு ஏதேனும் கிடைத்தால், அதை அடைவதற்கு உனக்குத் தகுதியில்லை என்று எண்ணிக் கொள்.

மற்ற அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொள்வதே இறைவனிடம் ஒன்றிணையும் வழி. இறைவனைத் தவிர உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்பவர் எவருமில்லை என்பதை ஒருபோதும் மறவாதே.” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார். பசியை மறந்து, உணவைத் தொலைத்து, இறைபக்தியில் மூழ்கிய நிலையில் அவர் மேற்கொண்ட தீராத பயணங்கள் அவரது உடல்நலத்தை வெகுவாகப் பாதித்தன. இருப்பினும், தன் வாழ்நாளின் இறுதிவரை பயணம் செய்துகொண்டே இருந்தார். அதனால்தான் என்னவோ, அவருடைய பெயரும் புகழும் இன்றும் உலகம் முழுவதும் நிறைந்துள்ளன.

(ஞானத் தேடல் தொடரும்) கட்டுரையாளர், 
தொடர்புக்கு: 
mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE