கிருஷ்ண பிரேமையின் சாரம் `மாதவ கீதம்’!

வா.ரவிக்குமார்
 
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் ஆன்மிக உலகத்துக்கு அளித்த கொடை `கீத கோவிந்தம்’. இதை அடியொற்றி டி.பட்டம்மாள் தமிழ் இசை, நாட்டிய உலகுக்கு அளித்திருக்கும் கொடை `மாதவ கீதம்’.
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் அஷ்டபதியை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் அதன் சாரத்தை, பக்தியை டி.பட்டம்மாள் தமிழில் படைத்திருப்பதுதான் `மாதவ கீதத்’தின் சிறப்பு. இந்தப் படைப்பை நாட்டிய நாடகமாக 35 ஆண்டுகளுக்கு முன் சாந்தா தனஞ்ஜெயன், தனஞ்ஜெயன் தங்களின் `பரதக் கலாஞ்சலி' சார்பாக அரங்கேற்றினர்.

தற்போது மீண்டும் இந்தப் படைப்பை அண்மையில் சென்னை, வாணி மகாலில் அரங்கேற்றினர். கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் நாட்டிய பாணி, இசை, காட்சிகள், கிருஷ்ணனின் ஆண் நண்பர்கள் எனப் பாத்திரங்களைச் சேர்த்து மாதவ கீதத்தைப் புதிய அனுபவமாக்கியிருந்தார் சத்யஜித் தனஞ்ஜெயன்.

குருவால் இணையும் பரமாத்மா ஜீவாத்மா

`ஈருடல் ஓருயிராக இருப்போம்’ என்று ஒற்றுமைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால், அதற்கும் மேலாகத் தன்னில் சரிபாதியை உமையவளுக்கு ஈசன் தந்ததால், உமா மகேஸ்வரன் ஆனார். ஈசனைப் போன்றே இணையரின் பெயரை 
முதலாகச் சொல்லிக் கொண்டாடப்படுபவர் கிருஷ்ணன். ராதா, கிருஷ்ணனின் மீது கொண்ட காதலின் அடர்த்தியும், கிருஷ்ணன், ராதையின் மீது கொண்ட நேசத்தின் அடர்த்தியும்தான் கிருஷ்ணனை, ராதா கிருஷ்ணனாக்கியது. இந்தப் பெருமையைக் காட்சிக்குக் காட்சி மிக நெருக்கமாக உணர்த்தியது `மாதவ கீதம்’ நாட்டிய நாடகம்.

கோபியருடன் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்வது, கண்ணனின் நினைவில் ராதை வாடுவது போன்ற காட்சிகளில் கிருஷ்ணனாக உத்யா பரூவாவும் ராதையாக மீனாக்ஷி நாராயணனும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். ராதையின் காதலை கிருஷ்ணனுக்கும், ராதையின் பிரிவால் வாடும் கிருஷ்ணனின் நிலையை ராதைக்கும் கடத்தும் பாலமாக ராதையின் தோழி திகழ்ந்தார். அவரே ஒரு குருவின் நிலையிலிருந்து ஜீவாத்மாவாகிய ராதை பரமாத்வாகிய கிருஷ்ணனை அடைவதற்கு உதவும் தத்துவமாக நாடகத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.

இரண்டு விதமான பக்தி

ஆணின் காதலுக்காகப் பெண் பாடாய்ப்படுவதாகவும் தவிப்பதாகவும் காட்சிப்படுத்துவதும் சாமானிய சிந்தனை. ஆனால், மாதவ கீதத்தில் கண்ணனுடனான அன்புக்கு ராதை தவிக்கிறாள். ராதையின் பிரேமைக்கு கிருஷ்ணனும் ஏங்குகிறான். 
ராதையுடன் சேருமாறு கண்ணனிடமும், ராதை இல்லாமல் கண்ணன் படும் வேதனைகளை ராதையிடமும் விடாமல் தூது செல்லும் தோழியின் மன நிலையில் நாடகத்தைப் பார்க்கும் நம்முடைய மனமும் இங்கும் அங்குமாக அலைபாய்கிறது. ராதை எனும் பக்தை கிருஷ்ணன் எனும் இறைவனை அடைவதற்குச் செய்யும் முயற்சியும் நிறைவேறுகிறது. கிருஷ்ணன் தன் பக்தையை கண்டுணர்ந்து ஆட்கொள்வதும் நிறைவேறுகிறது.

வாக்கேயக்காரர் டி.பட்டம்மாள்

இந்த நூற்றாண்டின் பெண் வாக்கேயக்காரர்களில் குறிப்பிடத்தகுந்தவர் டி.பட்டம்மாள். லால்குடியில் பிறந்து தஞ்சாவூரில் வளர்ந்த இவர், தமிழில் 650 கீர்த்தனைப் பாடல்களை எழுதியவர்.

இசை குறித்த அவருடைய ராகப்பிரவாகம், மாதவ கீதம், மேள ராக கிருதிமாலா, ஜன்ய ராக கிருதிமாலா ஆகிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இவரது 90-ம் பிறந்த நாளையொட்டி இவரது ‘மாதவ கீதம்’ நாட்டிய நாடகத்தை பரதக் கலாஞ்சலி அரங்கேற்றப்பட்டது.

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE