சூபி வழி 21: சொர்க்கத்துக்கான வழியைக் காட்டியவர்

By செய்திப்பிரிவு

முகமது ஹுசைன் 

விழுவதினாலும்,
விழுந்துகொண்டே இருப்பதினாலும்,
சிறகுகள் பரிசாகக் கிடைத்தன
பறவைகளுக்கு
                                            - ஜலாலுதீன் ரூமி

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து ஞானத்தைக் கண்டடைந்த பெரும் ஞானி அபூ யஸீத் பிஸ்தாமி. ஏன், எதற்கு என்ற கேள்வியின்றி இறைவனிடம் தன்னை முற்றிலுமாக ஒப்படைத்தவர் அவர். சூபி ஞானத்தின் அடிவேராகக் கருதப்படும் அவருக்கு, இறைத்தேடலே அவரது வாழ்வின் எல்லாமுமாக இருந்தது. பக்தியும் பயணங்களும் அவரது ஆன்மிக வாழ்வின் கண்கள். தனது வாழ்நாள் முழுவதும் மெய்ஞ்ஞான வேட்கையில் எண்ணற்ற பயணங்களை மேற்கொண்டார்.

சொல்லப்போனால், இவ்வுலகின் இருப்பு பயணங்களின் நீட்சியாகவே அவருக்கு இருந்தது.
ஞானம் செரிந்தோடும் அவரது உரைகள் துணிச்சலுக்குப் பேர் போனவை. மெய்ஞ்ஞானத்தில் தன்னை முற்றிலும் இழந்த நிலையில் அவர் ஆற்றும் உரைகள் கேட்பவர்களின் ஆன்மாவை இறைவனுள் கரைய வைத்தன. குறிப்பாகச் சொர்க்கத்துக்கான வழிகள் குறித்து அவர் ஆற்றிய உரைகள். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அவருடைய சிறுவயது வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகவே விளங்கியது. வளமும் வசதியும் மட்டுமல்லாமல்; அன்பும் உயர்தரக் கல்வியும் அவருக்கு மட்டற்று கிடைத்தன.

பெற்றோரா, கடவுளா?

அன்னையின் மீதான அளவற்ற பாசமே அவரது ஆன்மிக வாழ்வின் தொடக்கம். கற்கும் வயது வந்தவுடன், அவரை அவருடைய அன்னை குரான் படிக்க அனுப்பிவைத்தார். ஒருநாள் ஆசிரியர் குரானிலிருந்து “கடவுளின் மீதும் பெற்றோரின் மீதும் அன்பைக் கொள்ளுங்கள். உங்களது வாழ்வை அவர்களுக்கு அர்ப்பணியுங்கள். கடவுளுக்கும் பெற்றோருக்கும் சேவை செய்வதே உங்கள் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்”
- என்ற வாசகத்தை வாசித்துக்கொண்டு இருந்தார். அதைக் கேட்டவுடன் உடனடியாக எழுந்த பிஸ்தாமி, ஆசிரியரிடம் அனுமதி பெற்று வீட்டுக்கு விரைந்தார்.

பகல் பொழுதில் வீடு திரும்பியதால் கலக்கமுற்ற அவருடைய அன்னை “ஏதேனும் பிரச்சினையா? உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று கேட்டார். இல்லையென்று சொன்ன பிஸ்தாமி, கண்களில் நீர் மல்கப் பள்ளியில் தான் கேட்டவற்றைத் தாயிடம் சொன்னார். அதில் என்ன இருக்கிறது என்று பதிலளித்த அன்னையை நோக்கி “என்னால் எப்படி, ஒரே நேரத்தில் முழு மனத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் எவ்வித குறையுமின்றி எவ்வாறு இருவருக்கும் சேவையாற்ற முடியும்? இருவருக்கும் சேவை என்றால், அதில் குறை நேர்வது தவிர்க்க முடியாது அல்லவா? அப்படியானால், நான் யாருக்கு இங்கு முதல் உரிமை அளிக்க வேண்டும்? கடவுளுக்கா? உங்களுக்கா?” என்று கேட்டபடி ஓவென்று அழத்தொடங்கினார். 

பிஸ்தாமியின் பேச்சைக் கேட்டு அவருடைய அன்னை வாயடைத்துப் போனார். சற்றுநேரம் அமைதியாக இருந்த அவர், பிஸ்தாமியின் தாடையைப் பிடித்து, “பெற்றோரை விடவும்; இவ்வுலகில் இருக்கும் அனைத்தையும் விடவும் கடவுளே பெரியவன். உனது சேவையை மட்டுமல்ல; உனது வாழ்வையே கடவுளிடம் முற்றிலுமாக ஒப்படைக்க இப்போதே உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன். என்னைப் பற்றி இனி நீ கவலைப்பட வேண்டாம்.” என்று கூறி அவருக்கு விடையளித்தார்.

பயணமே கல்வி

அன்னையிடம் விடைபெற்ற அவர், உயர்கல்வி கற்கும் நோக்கில் பாக்தாத் நகருக்குச் சென்றார். ஆனால், அங்கே கற்றது, அவருக்கு போதுமானதாக இல்லை. கற்றலை வகுப்பறையில் சுருக்கிக்கொள்ளாமல், பயணத்தில் நீட்டிக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். ஆன்மிகக் கல்வியைத் தேடிப் பல நாடுகளுக்குப் பயணப்பட்டார். செல்லும் இடங்களில் தான் சந்தித்த ஞானிகளிடமிருந்து ஞானத்தை, அவர்களுடன் புரிந்த தர்க்கத்தின் மூலமாகப் பெற்றுக்கொண்டார்.

ஜஃபார் ஸாதிக்குடன் அவர் மேற்கொண்ட உரையாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பிஸ்தாமியின் ஞானத்தைப் பட்டை தீட்டியதன் பெரும் பங்கு அந்த உரையாடல்களைச் சாரும். இஸ்லாமியச் சட்ட திட்டங்களைப் பற்றி ‘அபூ அலி சித்தீ’ என்ற ஞானியிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். பயணங்களும் தர்க்கங்களும் அவரை ஆன்மிக நிலையின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. மெய்ஞ்ஞானத்தின் ஒளி அவரிடமிருந்து பாய்ந்து பரவியது. தான் பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மக்களின் மனத்தினுள் ஆன்மிக விதையை ஆழமாக விதைத்தார். அவரால் நல்வழி அடைந்து, இறைவனைத் தேடிச் சென்று, ஞானத்தைப் பெற்று ஞானியானோர் அன்று ஏராளம். சூபி உலகில் எண்ணற்ற ஞானிகளை உருவாக்கிய பெருமை மற்ற எவரையும்விட இவருக்கு அதிகம் உண்டு.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்த அவர், தனது பயணத்தின் முடிவில் தன்னுடைய முதல் ஆன்மிக வழிகாட்டியான ஜஃபார் ஸாதிக்கை மீண்டும் சந்தித்தார். அது ஒரு மாலை நேரம். ஒரு நீண்ட உரையாடலுக்கு இடையே, “பிஸ்தாமி, ஜன்னலிலி ருக்கும் அந்தப் புத்தகத்தை எடுத்து வா” என்று ஜஃபார் ஸாதிக் கூறினார். “ஜன்னலா? அது எங்கே உள்ளது?” என்று பிஸ்தாமி சட்டெனக் கேட்டவுடன், “என்ன பிஸ்தாமி, என்னுடன் இந்த வீட்டில் பல ஆண்டுகள் தங்கி உள்ளாயே, ஜன்னல் இருப்பது தெரியாத அளவு உனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதா?” என்று மீண்டும் அவர் கேட்டார். “ஸாதிக், அவர்களே, நான் உங்களைக் காண வந்தது, உங்கள் உரையைக் கேட்கவே அன்றி, ஜன்னலைப் பார்க்க அல்ல.

உங்கள் வீட்டிலிருந்த ஒரு பொருள் கூட என் கண்ணில் இதுவரை பட்டதில்லை” என்று சொல்லியபடி ஜன்னலைத் தேட தொடங்கினார். ஜஃபார் வாயடைத்துப் போனார். பின்பு சற்று நிதானித்து, பிஸ்தாமியை நோக்கி “பயணங்கள் இனி உனக்குத் தேவையில்லை. உனது சொந்த ஊருக்குச் சென்று, அங்குள்ள மக்களின் மனத்தினுள் ஞான 
ஒளியை ஏற்றுவாயாக” என்று ஜஃபார் ஸாதிக் கூறினார்.

அதன்பின் சொந்தவூரான பிஸ்தாமுக்குத் திரும்பிய பிஸ்தாமி, தனது இறுதிவரை அங்கேயே தங்கி, ஞானத்தை மக்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவர் வீட்டின் முன், அறிவுரை வேண்டி எப்போதும் பெருங்கூட்டம் கூடியிருக்கும். அவர் செல்லும் இடமெல்லாம் பெருங்கூட்டம் திரண்டு அவர் பின் செல்லும். ஆனால் அவரோ, புகழை வெறுத்தார். பரிசை வெறுத்தார். அங்கீகாரத்தை வெறுத்தார். ஞானத்தை அளிப்பது மட்டும் தனது வாழ்வின் கடமையென்று ஆக்கிக்கொண்டார். அவர் உலகைவிட்டுச் சென்று பல நூற்றாண்டுகள் ஆன பின்னும், தான் கண்டெடுத்த ஞானத்தை, தன்னுடைய சீடர்களின் மூலமாக இவ்வுலகுக்கு அளித்துக்கொண்டே உள்ளார். ஆம். ஞானத்துக்கு ஏது அழிவு? மறைவு? ஓய்வு?

கட்டுரையாளர் தொடர்புக்கு: 
mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்