ஆனந்த ஜோதி

மன அமைதி அருளும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள்

கே.சுந்தரராமன்

700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீராமர் அமர்ந்த நிலையில் உள்ளார். இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீராமரிடம் வில், அம்பு இருக்காது. அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது சிறப்பு.

இலங்கையில் ராவணனோடு யுத்தம் முடிந்த பின்பு சீதாப்பிராட்டி மற்றும் லட்சுமணரோடு அயோத்தி கிளம்புகிறார் ராமபிரான். அப்படி செல்லும் வழியில் நெடுங்குன்றம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் சுகப்பிரம்ம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். ராமபிரானைக் கண்ட முனிவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது அரிய சாஸ்திரங்களைக் கொண்ட ஓலைச்சுவடியை அவரிடம் கொடுத்துள்ளார்.

ஒரு நாள் தங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் முனிவர்.முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ராமபிரானும் அவரது ஆசிரமத்தில் தங்கி அந்த ஓலைச்சுவடிகளை படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பணிவுடன் அந்த ஓலைச்சுவடிகளை முனிவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ராமபிரான், அவற்றை ஆஞ்சநேயரிடம் கொடுத்து அதைப் படிக்குமாறு பணித்துள்ளார்.

தான் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இடப்புறத்தில் சீதையையும், வலப்புறத்தில் லட்சுமணரையும் நிற்கச் செய்து, ஆஞ்சநேயர் படிப்பதை ராமபிரான் கேட்டார். ஆஞ்சநேயரும் பத்மாசனத்தில் அமர்ந்து ஓலைச்சுவடியைப் படித்தார். வேதத்தின் உட்கருத்தைக் கேட்டுக் கொண்டு, முக்திகோபநிஷத் என்ற உபநிஷத்தை ஆஞ்சநேயருக்கு விளக்கினார் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

இவ்வாறு ஆஞ்சநேயர் ஓலைச்சுவடியை படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ராமபிரானுக்கு, அயோத்திக்கு செல்ல வேண்டிய 14 ஆண்டுகள் முடியப்போகும் நேரம் நினைவுக்கு வருகிறது. குறித்த நேரத்தில் அயோத்தி செல்லவில்லை என்றால் பரதன் அக்னி வளர்த்து யாக குண்டத்தில் விழ வேண்டியசூழல் இருப்பதையும் உணர்ந்த ராமபிரான், ஆஞ்சநேயரை அழைத்து தனது கணையாழியை கொடுத்து, பரதனிடம் கொடுக்குமாறு பணிக்கிறார்.

ஆஞ்சநேயரும் கணையாழியை பரதனிடம் கொடுத்து, ராமபிரான் விரைவில் வருவார் என்ற தகவலைக் கூறிவிட்டு வருகிறார். பின்னர் ராமபிரானும் ஆஞ்சநேயரும் ஒரே இலையில் உணவு அருந்துகின்றனர். அப்போது உணவு அருந்த வசதியாக ராமபிரான் இலையின் மையத்தில் கோடு கிழித்தார் என்று கூறப்படுகிறது. மேலும் உணவு பறிமாறும்போது நுனி இலையில் ராமபிரான் உண்ணும் அன்னத்தை இந்தப் பக்கமும், ஆஞ்சநேயருக்குப் பிடித்த காய்கறிகளை எதிர்ப்பக்கமும் வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.

இத்தலத்தில் ராமர் யோக நிலையில் அமர்ந்து இருக்கிறார். அவருடைய கரம் மார்புக்கு அருகே வைக்கப்பட்டு இருப்பது ஞான முத்திரை என்று கூறப்படுகிறது. சம்புவராய மன்னர்களின் சிற்பக் கலைத்திறனுக்கு உதாரணமாக இத்தலம் உள்ளது. சுக முனிவருக்கு யோகத்தின் சிறப்பை விளக்கி அருளியதாகக் கூறப்படுகிறது.

8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் என்று கூறப்படுகிறது. கருவறையை சுற்றி வருவதற்கு குகை போன்ற உட்பிரகாரம் அமைந்துஉள்ளது.

சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும் இடக்கையில் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமும் காட்டி அருள்பாலிக்கிறார். லட்சுமணர் கைகூப்பிய வண்ணம் சரணாகதி தத்துவத்தை உணர்த்துகிறார். செங்கமலவல்லி தாயார் சந்நிதி எதிரில் அமைந்துள்ள முக மண்டபத்தில் ராமாயண, தசாவதார சிற்பங்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ண தேவராயர் சிற்பம் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஸ்ரீராம நவமியை ஒட்டி பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் இந்திர விமானத் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் யோக நிலையில் சாந்தரூபியாக உள்ள ராமபிரானை வழிபட்டால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கைகிடைக்கும். சுதர்சன ஆழ்வாரை வழிபட்டால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிட்டும். வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப நன்மை, செல்வச் செழிப்புக்காக பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

அமைவிடம்: சேத்துப்பட்டு – வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டில் இருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT