ராஜஸ்தானின் ஒரே கோடை வாசஸ்தலமாக மவுண்ட் அபு விளங்குகிறது. ஆரவல்லி மலைத் தொடரின் மலைப் பாதையில் உள்ள இந்நகரம் குறித்து ஸ்கந்த புராணம், மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்புடா என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில் அர்புதான்யா காடு இருந்தது. ராமபிரான் இவ்விடத்தில் படிப்பு மற்றும் பயிற்சியை பெற்றார் என்று உள்ளுர் வரலாறு தெரிவிக்கிறது.
நக்கி ஏரிக்கரையில் ரகுநாத் கோயில் உள்ளது. இக்கோயில் அறிஞர் ஸ்ரீரமானந்தரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 5-ம் நூற்றாண்டிலிருந்தே ரகுநாதர் என அழைக்கப்படும் ராமபிரானின் சிலை சம்பா குகையில் இருந்ததாகவும், ஸ்ரீரமானந்தர் அதனை நக்கி ஏரிக்கரையில் இருந்த கோயிலில் கொண்டு வந்து 1468-ல் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
70 ஆண்டுகளுக்கு முன் மேவார் கட்டிட கலை பாணியில் புதிய பளிங்கு கட்டிடம் கட்டி தற்போது மறு பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயில் வாயில் எளிமையாக உள்ளது. நுழைவு வாசல் அருகே இருபுறமும் சுவர்கள் உள்ளன. 12 படிகள் ஏறி உயர்த்தப்பட்ட மேடையின் மீது அமைந்துள்ள கோயிலுக்குள் நுழைந்தால் இரு புற சுவர்களிலும் மேவார் பாரம்பரியத்தை காட்டும் வண்ண ஓவியங்களைக் காணலாம்.
சிறிய குவிமாடம், பெரிய குவிமாடம், சுவர்கள், தூண்கள் அனைத்திலும் அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. கருவறையில் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கருப்புக் கல்லால் ஆன ராமபிரான் அருள்பாலிக்கிறார். சிரசில் கிரீடம், நெற்றியில் வைணவ திருமண், ராஜ அலங்காரம் என்று ஓர் அரசரைப் போல் ராமபிரான் கம்பீரத் தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார்.
இப்பகுதியில் குல தெய்வமாக போற்றப்படும் ராமபிரானை தரிசித்தால், உடல் வலி, தீர்க்க முடியாத பிரச்சினைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து ராமபிரானை தரிசிக்கின்றனர். மக்களின் காவலர் என்று அழைக்கப்படும் ராமபிரான் கோயில் கொண்ட தலம், மவுண்ட் அபுவில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. இத்தலத்தில் ஸ்ரீராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தில்வாரா ஜெயின் கோயில்: துவாரகா செல்லும் வழியில் கிருஷ்ணர் இங்கு தங்கி சென்றதாக அறியப்படுகிறது. இங்கு பிரம்ம குமாரிகளின் ஆசிரமம் உள்ளது. ஜைனர்களின் 24-வது தீர்த் தங்கரர் நிர்வாண தீட்சை பெற்ற இடம். ஜெயினர்களின் கட்டிட கலைக்கு உதாரணமாக இங்கு தில்வாரா ஜெயின் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ராஜபுத்ர மன்னர்கள் கோடை காலத்தில் இங்கு வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.