ஆனந்த ஜோதி

பாரம்பரியம் காக்கும் ராதா கல்யாணம்

முனைவர் இரா.இராஜேஸ்வரன்

பாரத தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பக்தி இயக்க காலம் தொடங்கி இன்றைய நாகரிக காலம் வரை நம்முடைய இந்து சமயத்தில் பல்வேறு மாற்றங்களைக் காண முடிகிறது. இதற்கு அன்றைய காலகட்ட ஆட்சியாளர்களின் சூழ்நிலை, மனிதனின் எண்ணங்கள், கால சூழ்நிலை காரணங்களாக அமைந்தன.

சமயத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து பக்திநெறியை வளர்ப்பதற்குத்தான் நடைபெற்றன. அந்த வகையில் ‘ஸ்ரீ ராதா கல்யாணம்’ என்ற வைபவம் தொன்று தொட்டு நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்ச்சி. ராதா கல்யாணம் என்பது இறைவனின் திருமண சடங்கு போன்று இல்லாமல், ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்தும் வண்ணம் உள்ளது. தென்னிந்திய பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி நாமசங்கீர்த்தனத்துடன் பழமை மாறாமல் வைதீக முறைப்படி இன்று வரை தமிழகத்தின் பல கிராமங்களில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவம் பல வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு சுவாமிகள் மடத்திலும், திருவிசநல்லூர் (திருவிசலூர்) ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் மடத்திலும், கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திராள் மடத்திலும் ராதா கல்யாண மஹோற்சவம் சில நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தை ஒட்டி நாமசங்கீர்த்தனம், அஷ்டபதி, உஞ்சவிருத்தி, முத்துக்குத்தல், டோலோத்ஸவம், தோடய மங்களம், கர்னாடக இசைக் கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவது வழக்கம்.

யுகங்களில் முதலாவது யுகமான திருத யுகத்தில் தியானம், தவம் முதலியவற்றால் முக்தியைப் பெறலாம். இரண்டாவது யுகமான த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதால் முக்தியைப் பெறலாம். மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் அர்ச்சனை, பூஜை போன்ற வழிபாட்டால் முக்தியைப் பெறலாம். தற்போதைய கலியுகத்தில் இறைவனின் நாமத்தைச் சொல்லும் நாமசங்கீர்த்தனம் மூலமாக முக்தியை அடையலாம். இதையேதான் ஸ்ரீமத் பாகவதமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் நமக்கு வலியுறுத்துகின்றன.

‘யந்நாம கீர்த்தநம் பக்த்யா விலாபநமலுத்தமம் மைத்ரேயா பேருஷமாமாநாம் தாதூநாமிவ பாவககாந்தி கலௌ ஹ்லகௌகஸ்ய நாமஸங்கீர்த்தநம் ஹரே’ கலியுகத்துக்கு நாமசங்கீர்த்தனமே வழி என விஷ்ணு புராணம் நமக்கு உபதேசிக்கிறது. இதே கருத்தை ஒட்டி முதலாழ்வார்கள் பாடிய இரண்டாம் திருவந்தாதி அமைந்துள்ளது.

‘ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்சொல்லுவதே ஓத்தின் சுருக்கு’ (2219) ஹரிநாமாவை சொல்வதன் அவசியத்தை இந்த பாசுரம் உணர்த்துகிறது. நாமசங்கீர்த்தனம் வரிசையில் பஜனை என்பது இறைநாமாவை பக்தியுடன் இசைக் கருவிகளை இசைத்து ராகத்துடன் ஒன்று சேர்த்து பாடும் வழிபாடு ஆகும். ராதா கல்யாணத்தைப் பொறுத்தவரை பாரம்பரியமான முறையில்தான் இன்றளவும் பல இடங்களில் நடைபெறுகிறது.

இதற்கான சம்பிரதாயத்தை வழிகாட்டியவர் வெங்கடரமண தீட்சிதர் என்கிற மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு சுவாமிகள் (1777-1817) ஆவார். இந்த பாகவத சம்பிரதாயங்களை நாடெங்கும் பரப்பிய பிதாமகர் இவரே. ஸ்ரீ சத்குரு சுவாமிகளின் மடம், கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் அமைந்துள்ளது.

ஸ்ரீ ராதா கல்யாணத்தில் மற்றொரு முக்கிய அம்சம் அஷ்டபதி பாடல்களைப் பாடுவது. எட்டு அடிகளைக் கொண்ட கீர்த்தனைக்கு அஷ்டபதி என்று பெயர். மொத்தம் 24 பாடல்கள் ஒடிஷாவில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவரால் பாடப்பட்டது. இதற்கு ‘கீத கோவிந்தம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்து கீத கோவிந்தத்தின் ஒரு சரணத்தை எழுதிக் கொடுத்தார் என்ற தனிச்சிறப்பு இதற்கு உண்டு. மற்ற சம்பிரதாய நிகழ்ச்சியுடன் அஷ்டபதிகளை பாகவதர் குழுவினர் தவறாமல் பாடுவர். மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே இறைவனை உணர்ந்து, அவரது திருவடியைப் பற்றுவது (அடைதல்) தான். அந்த உயரிய எண்ணத்தை நமக்கு திரும்பத் திரும்ப உணர்த்துவதுதான் ராதா கல்யாண உற்சவம். ஜீவாத்மா (ராதை), பரமாத்மாவை (ஸ்ரீகிருஷ்ணர்) தூய பக்தியால் சென்று அடைதல்தான் ஸ்ரீ ராதா கல்யாணத்தின் அடிப்படைத் தத்துவம்.

பிப்ரவரி மாதத்தில் தொன்றுதொட்டு ராதா கல்யாண வைபவம் நடக்கும் இடங்களில் சில முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றாக ஆலங்குடி (குருஸ்தலம்) விளங்குகிறது. இங்கு 78-ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் பிப்ரவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1948-ம் ஆண்டு முதல் ஆலங்குடியைச் சேர்ந்த கோபாலய்யர், துரைசாமி அய்யர் குடும்பத்தினர் நடத்தி வந்தனர். தற்சமயம் ஆலங்குடி நாமசங்கீர்த்தன டிரஸ்ட் என்கிற அமைப்பால் நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பின் சார்பில், 1945 முதல் ஏகாதசிதோறும் பஜனை நிகழ்ச்சி நடத்தி வருவதைப் பற்றியும், தற்சமயம் பஜனை சம்பிரதாயத்தை ஊக்குவித்து பரப்பும் நோக்கத்திலும், ‘ஆலங்குடி பஜனை’ எனும் பெயரில் தற்போது நூல் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் இருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் டிவி அல்லது கைபேசியில் பஜனை நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கலாம்.

இதற்கு அடுத்து மயிலாடுதுறையில் 70-ம் ஆண்டு ராதா கல்யாண உற்சவம் பிப்ரவரி 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் என்கிற அமைப்பின் மூலம் தொடர்ந்து ராதா கல்யாண மஹோற்சவம் நடைபெற்று வருகிறது. ராமலிங்க அக்ரஹாரத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பக்தியுடன் இந்த கல்யாண உற்சவத்தையும், அதைத் தொடர்ந்து பெரிய அளவில் அன்னதானத்தையும் (கல்யாண சாப்பாடு) செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் இந்த வைபவத்தில் பங்கு கொண்டனர் என்று தெரிய வருகிறது. சத்குரு தியாகராஜ சுவாமிகள், ‘நீ நாமரூப முலகு நித்ய ஜய மங்களம்’ எனப் பாடிய வண்ணம் நாமும் இறைநாமாவை பக்தியுடன் பாடி அனைத்து வளங்களையும் பெறுவோம் என்று ஸ்ரீராதா கல்யாணம் இனிதே நிறைவுபெறும்.

SCROLL FOR NEXT