ஆனந்த ஜோதி

102 ஆண்டுகளாக கொண்டாடப்படும் கல்பாத்தி தியாகராஜ ஆராதனை

கே.சுந்தரராமன்

ஸ்ரீராம பாகவதரால் ஜனவரி 1924-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்பாத்தி தியாகராஜ ஆராதனை இன்றும் அவரது பேரன் உள்ளிட்ட உறவினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பழைய கல்பாத்தி சாலை ஸ்ரீராம பாகவதர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலக்காடு ராம பாகவதர் 1888-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஷோரனூருக்கு அருகில் உள்ள முண்டாய கிராமத்தில் ஸ்ரீகஸ்தூரி ரங்க ஐயர் – அலமேலு மங்கை தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயது முதலே பாரத புழா நதிக்கரையில் அமர்ந்து தன்னுடைய மூத்த சகோதரர் வெங்கடகிருஷ்ண பாகவதருடன் சேர்ந்து இசை கற்கத் தொடங்கினார். கதகளி பதங்கள் மட்டுமின்றி பாரம்பரிய கர்னாடக இசையின் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். வடக்கஞ்சேரி ராம பாகவதர் , சகோதரர் சுப்பராம பாகவதர், தொண்டிகுளம் அனந்தராம பாகவதர், மகா வைத்தியநாத பாகவதர், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்று, இசை வல்லுநராகத் திகழ்ந்தார்.

1924-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் நடைபெறும் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவுக்கு சென்று அங்கு அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக கனராக பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை (நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ) தனது இசை நண்பர்கள் சுப்பைய்யர், சேஷன் பாகவதர், விச்சப்பா உள்ளிட்ட இசை கலைஞர்களுடன் பாடுவது ராம பாகவதரின் வழக்கமாக இருந்து வந்தது.

ஒருசமயம் தியாகராஜ ஆராதனைக்கு இசைக் கலைஞர்களுடன் ராம பாகவதர் கிளம்பும்போது, திருச்சிக்கு செல்லும் இணைப்பு ரயிலை தவறவிட்டதால் திருவையாறு ஆராதனையில் பங்கேற்க இயலவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு தனக்குள் விவாதித்து,
ஸ்ரீ ராம பாகவதர் கல்பாத்தியில் உள்ள ஸ்ரீராஜாராம் சுவாமிகள் மடத்தில் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தார். ஸ்ரீராஜாராம் சுவாமிகள் தியாகராஜ சுவாமிகளின் நேரடி சீடர். இந்த மடத்தில் அனுமன் கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம தியான மடம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், திருவையாற்றில் நடைபெறும் ஆராதனை நேரத்தில் கல்பாத்தியிலும் தியாகராஜ ஆராதனை நடைபெறுகிறது. திருவையாற்றில் இந்த ஆண்டு ஜனவரி 18-ம் தேதி 178-வதுஆராதனை நடைபெறும் அதே சமயத்தில் கல்பாத்தியிலும் 102-ம் ஆண்டாக அன்று காலை 8 மணி அளவில் தியாகராஜ ஆராதனை விழா நடைபெற உள்ளது. உஞ்சவிருத்தி, நாம சங்கீர்த்தனம், கர்னாடக இசை நிகழ்ச்சிகள் (வாய்ப்பாடு, வாத்ய இசை) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராம பாகவதர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஹரி (ராம பாகவதரின் பேரன்), கல்பாத்தி தியாக பிரம்ம ஆராதனை குழுவினர் செய்துள்ளனர். ஆன்லைனில் நடத்தப்பட்ட இசைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு இந்த ஆராதனையில் பங்கேற்பதற்கு மேடை அமைத்து தரப்படுகிறது.
ஸ்ரீ ராம பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல் பிப்ரவரி 1-ம் தேதி கல்பாத்தி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9840773410 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT