எப்போதும் அனைத்திலும் வெற்றி காணும் மன்னர் கிருஷ்ண தேவராயா வெங்கடேஸ்வர பெருமாள் மீதான தனது பக்தியையும், கவிதை இயக்கியத்தின் மீதான விருப்பத்தையும் இணைத்து ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலை இயற்றியுள்ளார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வாழ்க்கையை விளக்கும் காவியமாகவும் இந்நூல் விளங்குகிறது. திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் மீது தீவிர பக்தி கொண்ட மன்னர் கிருஷ்ண தேவராயா, ஏழுமலையானுக்காக பல கிராமங்கள், வைர நகைகள், தங்க ஆபரணங்கள் வழங்கியுள்ளார். அவரது அரசவையில் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்துவந்தார்.
ராயாவின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களால் ஈர்க்கப்பட்ட ராயா, தினமும் ஆழ்வார் பாசுர வரிகளைப் படித்து அதன் நுணுக்கம் மற்றும் சாராம்சத்தில் ஒன்றிப் போனார். ஏகாதசி விரதம் மேற்கொண்ட ராயாவுக்கு விஜயவாடா அருகே ஸ்ரீகாகுளம் கிராமத்தில் ஆந்திர விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கிறது. அவரது கட்டளைப்படி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் – கோதா தேவியின் திருமணத்தை மையமாக வைத்து தெலுங்கு மொழியில் பாடல்கள் புனையத் தொடங்கினார் ராயா.
அவரது படைப்பை வெங்கடேஸ்வர ருக்கு சமர்ப்பிக்கும்படி ஆந்திர விஷ்ணு கூற, அதை அப்படியே ராயா செயல்படுத்தினார். கலிங்கப் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பிய ராயா, ‘ஆமுக்த மால்யதா’ (சூடிக் கொடுத்தவள்) என்ற படைப்பை எழுதத் தொடங்கினார். காவியத்தின் தொடக்கம் வெங்கடேஸ்வரரையும் மகாலட்சுமியையும் அறிமுகப்படுத்துகிறது.
மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள திவ்ய பிரபந்த ஸ்லோகங்கள் குறித்தும், ஆழ்வார்கள் குறித்தும், ஆந்திர விஷ்ணுவின் தரிசனம் குறித்தும் பின்னர் விளக்குகிறார். முதல் இரண்டு அத்தியாயங்க ளில் வெங்கடேஸ்வரரை வணங்கிய ராயா, அடுத்து வரும் பாடல்கள் மூலம் நம்மை மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். மதுரை மன்னரின் அரசவையில், ‘எந்தக் கடவுளால் மோட்சம் அளிக்க முடியும்?’ என்பது குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக அனைத்து பகுதியில் இருந்தும் அறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர். யார் சரியாக விடையளிக்கிறார்களோ அவர்களுக்கு நிறைய பொன்னும் பொருளும் அளிக்கப்படும் என்று மன்னர் உறுதி அளித்தார். அறிஞர்களின் வாதங்கள் எதுவும் மன்னருக்கு திருப்தி அளிக்கவில்லை.
விஷ்ணுவே உயர்ந்த கடவுள் என்பதை உணர்த்துவதற்காக விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி தோன்றி, அவரை மதுரைக்கு வரவழைத்தார். சீடர்களுடன் பெரியாழ்வார் மதுரைக்கு பயணித்து, அரண்மனையை வந்தடைகிறார். பெரியாழ்வாரின் வருகையை அறிந்ததும் சபையில் உள்ளவர்கள், அவை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
சபையின் அனுமதி பெற்று பெரியாழ்வார் பேசத் தொடங்கினார். முன்னர் பேசியவர்களின் கருத்துகளை எடுத்துரைத்து, அவற்றில் உள்ள குறை நிறைகளை பட்டியலிட்டார். பண்டைய நூல்கள், வேதங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டியபோது, அனைவரும் பெரியாழ்வாரின் கருத்துகளை ஆமோதித்தனர். சத், சித், ஆனந்தத்தின் வடிவமாக விஷ்ணுவே உள்ளார் என்பதை பெரியாழ்வார் நிரூபித்தார்.
பெரியாழ்வாரின் வெற்றியை அறிவிக்கும் விதமாக அவர் அரச யானையின் மீது ஏற்றப் பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வானத்தில் இருந்து பேரொளியுடன் பெருமாள் இறங்கியதைக் கண்டதும் பெரியாழ்வார் வியப்படைகிறார்.
இறைவனுக்கு வாழ்த்து வழங்குவதுபோல ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாடல் ஒலித்தது. இந்த ஸ்லோகமே தமிழ் வேதமாகக் கருதப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு தொடக்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வடபத்ர சாயிக்கு தான் வழக்கமாக செய்யும் புஷ்ப கைங்கர்யத்தை தொடர்கிறார் பெரியாழ்வார். ஒருநாள் துளசி புதர் அருகே ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்த பெரியாழ்வார், அக்குழந்தையை, வடபத்ரசாயி பெருமாள் அளித்த பரிசாக பாவித்து, கோதை என்று பெயர் சூட்டி, கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். திரும்பிப் பார்ப்பதற்குள் காலம் உருண்டோடி, அழகிய தேவதை போல் வளர்ந்தார் கோதை.
கோதா தேவியும் அவரது தோழியும் கோயிலுக்குச் சென்று மார்கழி மாத நோன்பை நோற்க உள்ளனர். இறைவனையே மனதில் இருத்தி, எந்நேரமும் அவரது சிந்தனையில் இருந்தார் கோதை. இறைவன் மீதான கோதையின் அன்பை உணர்ந்த பெரியாழ்வார், கோயிலுக்குச் சென்று வடபத்ரசாயி பெருமாளிடம் இதுகுறித்து தெரிவிக்கிறார். கோதா தேவியை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு பெருமாள் பெரியாழ்வாரிடம் கூறுகிறார். பூதேவியின் அம்சமான கோதா தேவி, பெருமாளைப் போற்றி நிறைய பாடல்கள் பாடியுள்ளார். ஸ்ரீரங்கத்துக்குச் சென்ற பின்னர், கோதா தேவி தனது தந்தை பெரியாழ்வாருடன் ஸ்ரீரங்கநாதர் கோயில் கருவறைக்குச் செல்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தான் வந்து, கோதா தேவியை திருமணம் செய்துகொள்வதாக பெரியாழ்வாரிடம் பெருமாள் உறுதியளிக்கிறார். கோதா தேவியின் திருமணம் இனிதே நடைபெறுகிறது. ஸ்ரீரங்கநாதரும் கோதா தேவியும் தம்பதியாக திருமணத்தின்போது செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை செய்கின்றனர்.
வழக்கமான திருமண கோலத்துடன் காவியத்தை நிறைவு செய்கிறார் கிருஷ்ண தேவராயா. இறைவனுடனான தனது திருமணம் குறித்து நாச்சியார் திருமொழியில் கோதா தேவி கண்ட கனவு தற்போது நிறைவேறியது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முதலிலும் நிறைவிலும், திருமலை வெங்கடேஸ்வரரை வணங்குவது, கிருஷ்ண தேவராயாவின் வழக்கம். இந்தக் காவியத்தைப் படிப்பவர்கள் மனநிறைவு பெறுவர் என்பது திண்ணம்.