தென் திருவாரூர் என்று போற்றப்படும் இடைகால் தியாகராஜர் கோயில்

By வெ.கணேசன்

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் தியாகராஜர் கோயில் தென் திருவாரூர் தலம் என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் ஈசனின் மணக்கோலத்தை இன்முகத்துடன் நந்திதேவர் கண்டுகளிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. ஒரு சமயம் கைலாய மலையில் பரம்​பொருளான பரமேஸ்​வரனுக்​கும் உமா மகேஸ்​வரிக்​கும் முப்​பத்து முக்​கோடி தேவர்கள் புடை சூழ திருமண வைபவம் நடைபெற இருந்​தது.

அது சமயம் பூமி​யின் வடபகுதி தாழ்ந்து தென்​பகுதி உயர்ந்​ததைக் கண்டு அனைவரும் மனம் பதைத்​தனர். அந்த வேளை​யில் இந்த இடரை சரிசெய்​ய​வும், தென்​பகுதி பூமியை மீண்​டும் சமநிலைக்கு கொண்டு வரவும் அகத்திய முனிவரை உடனடியாக தென்​பகுதி சென்று சேர ஈசன் கட்டளை​யிட்​டார். இதனால் மனம் வருந்திய அகத்திய முனிவர், தான் தென்​பகுதி சென்​றாலும், ஈசனின் மணக்​கோலக் காட்​சியை அவ்விடத்​தில் தரிசிக்​கும் பேற்றை அருள வேண்​டும் என்று அவரிடம் விண்​ணப்பம் வைத்​தார். ஈசனும் அவ்வாறே வரமளித்​தார்.

அதன்படி தென் பொதிகை மலைக்கு வந்து தங்கி​யிருந்த வேளை​யில் அகத்​தி​யருக்கு, மகேஸ்​வரன் தனது திரு​மணக் கோலத்​தைக் காட்​டியருளினார். இந்த தரிசனம், அகத்திய முனிவருக்கு மட்டுமல்​லாமல், மேற்​குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருக்​கும் தென் திரு​வாரூர் என்று அழைக்​கப்​படும் இடைகால் திருத்​தலத்​தில் அருள்​பாலிக்​கும் நந்திதேவருக்​கும் கிடைத்​தது.

இடைகால் திருத்​தலத்​தின் வெளிச்​சுற்றில் பிரம்​மாண்​டமாக அமைந்​துள்ள நந்தி மண்டபத்​தில் உள்ள நந்திதேவர் தனது இடத்​தில் இருந்​தபடி தலையை மேற்​குப் பக்க​மாகத் திருப்பி இத்திரு​மணக் கோலத்தை இன்முகத்​துடன் கண்டு தரிசிக்​கும் காட்​சியை இத்தலத்​துக்கு வரும் பக்தர்​களால் காணமுடிகிறது.

கிபி 16-ம் நூற்​றாண்​டில் விஜயநகர சாம்​ராஜ்ய ஆட்சி​யாளர்​களால் இடைகாலில் கற்றளியாக சிவன்​கோ​யில் எழுப்​பப்​பட்​டது. அவ்வேளை​யில் சுவாமி​யின் பெயர் திரு​வாம்​பிகை ஈஸ்வர​முடை​யார் என கல்வெட்டு​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி, அம்பாள் திரு​வீதி எழுந்​தருள வெளிச்​சுற்றில் கொடிமரம் நிறுவி, தேர் ஒன்றை​யும் உருவாக்​கித் தந்தான் பெரு​மானாயன் காளிங்கன் என்பவன். மேலும் கிருஷ்ணப்ப நாயக்​கர், அச்சுததேவ​ராயர், சதாசிவ​தேவ​ராயர், கண்டியத் தேவன், இராம​ராஜ​விட்டல ஈஸ்வர மகாராஜா, சின்ன பசவப்ப நாயக்​கர், அஞ்செழுத்து உடையார் என பல மன்னர்கள் இக்கோ​யில் திருப்​பணி, நித்ய பூஜை மற்றும் விழா செலவினங்​களுக்கு ஏராளமான தானங்களை செய்​துள்ளனர்.

பிற்​காலப் பாண்​டியர் ஆட்சி​யில் முள்​ளி​நாடு என்ற உள்நாட்டுப் பிரி​வில் இவ்வூர் அடங்கி​யிருந்​தது. இப்பகு​தி​யில் இடைகால், தென்திருப்பு​வனம், அத்தாள நல்லூர், அரிகேசவநல்​லூர், திருப்பு​டைமருதூர், என்ற பஞ்சபூதத் தலங்கள் அமைந்​துள்ளன. இவற்றில் இடைகால், நிலத்​தைக் குறிக்​கும் தலமாகும்.

பிரதான வாசலில் 3 நிலை கோபுரம் உள்ளது. இதையடுத்து பிரம்​மாண்ட சிற்​பங்கள் உள்ள 16 தூண்கள் தாங்கி நிற்​கும் வசந்த மண்டபம் உள்ளது. கோபுரஉள்பக்க விதானத்​தில் நாயக்கர் கால மூலிகை வண்ண ஓவியங்கள் அமைந்​துள்ளன. வசந்த மண்டபம், முகமண்​டபம், மகாமண்​டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்​பில் கற்றளி கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்பாள் சிவகாமி உடனுறை தியாக​ராஜப் பெரு​மான் கருவறை மூலவராக எழுந்​தருளி​யுள்​ளார். திரு​வாரூருக்கு நிகரான தலமாக கருதப்​பட்டு வணங்​கிய​தால் தென் திரு​வாரூர் என பக்தர்​களால் அழைக்​கப்​பட்​டது. கோஷ்டத்​தில் அருள்​பாலிக்​கும் குருபகவான் இத்தலத்​தில் வித்​தி​யாசமாக இடது காலை மடக்கி​யும், வலது காலை தொங்​க​விட்​டபடி​யும் காட்சி அருள்​கிறார். காலடி​யில் சர்ப்பம் உள்ளது.

இத்தலத்​தில் நவகிரக சந்நிதி இல்லை. நாகர் சந்நி​தி​யில் ஆயில்ய நட்சத்​திரக்​காரர்​களுக்கான பரிகார பூஜை நடத்​தப்​படு​கிறது. ஆவணி மாதம் அனுஷம் நட்சத்​திரத்​தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. மாதாந்திர பௌர்ணமி நாளில் திரு​வாதவூரார் அருளிச் செய்த திரு​வாசக முற்​றோதல் நடைபெறும்.

சித்ரா பௌர்​ணமி, ஐப்பசி பௌர்​ணமி, மாசி மகம் ஆகிய 3 நாட்​களில் அன்னாபிஷேக விழா கொண்​டாடப்​படு​கிறது. தேய்​பிறை பஞ்சமி​யில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தேய்​பிறை அஷ்டமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கந்தசஷ்டி, ஆடிப்​பூரத்​தையொட்டி அம்பாளுக்கு வளைகாப்பு, மார்கழி 30 நாட்கள் திருப்​பள்​ளியெழுச்சி, நவராத்​திரிகொலு உற்சவம், தில்​லைக் கூத்​தருக்கு ஆண்டுக்கு ஆறு கால பூஜைகள் மற்றும் தினமும் இருவேளை நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. உள்சுற்று முழு​வதும் திரு​மாளிகை அமைப்​பில் மண்டப கட்டு​மானமாக அமைந்​துள்ளது.

உள்சுற்றில் சப்தகன்னி​மார், சுரதேவர், கன்னி மூலை கணபதி, கரிய​மாணிக்கப் பெரு​மாள், வள்ளி தெய்​வானை சமேத சுப்​பிரமணி​யர், சனீஸ்​வரர், சூரியன், சந்திரன் சந்நி​திகள், கனகசபை, அதிகாரநந்தி ஆகியவை உள்ளன. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலமான கிபி 16-ம் நூற்​றாண்​டில் இவ்வூரில் ஏராளமான படைவீரர்கள் தங்கி​யிருந்​தனர்.

அவர்கள் போர் பயிற்சி செய்த கருவி​கள், தடயங்கள் போன்ற​வற்றை பல நூற்​றாண்​டுகள் கடந்​தும் இன்றைக்​கும் நம்மால் காண முடிகிறது. பிரதான வாசலான கிழக்​குப்​பக்க நுழைவாயி​லில் பிரம்​மாண்​டமான கட்டமைப்​பில் ராஜகோபுரம் ஒன்றின் கட்டுமான திருப்பணி நாயக்கர் ஆட்சிக் காலத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

பின்னர் ஏதோ அறிய முடியாத காரணங்​களால் அக்கோபுரத் திருப்பணி அரைகுறையாக நின்​று​போய் விட்​டது. தற்போது அடியார் பெரு​மக்​களின் தீவிர முயற்​சி​யால் மகா கும்​பாபிஷேக திருப்பணி தொடர்பான விஷயங்கள் தொடங்​கப்​பட்டு உள்ளன. ஆண்டு​தோறும் புரட்​டாசி 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காலை சூரிய உதயக் கதிர்கள் மூலவர் ​தி​யாக​ராஜப் பெரு​மான் மீது தங்​கமயமாக படர்வது சிறப்பு அம்​சமாக கருதப்​படு​கிறது.

அமைவிடம்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் - கடையம் செல்லும் நெடுஞ்சாலையில் 30 கிமீ தூரத்தில் இடைகால் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கோயில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்