துடியான தெய்வம் துள்ளலான இசை!

By வா.ரவிக்குமார்

அகண்ட பாரதத்தில் பன்னெடுங்காலமாகவே பெருந்தெய்வ வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் அதற்குரிய சிறப்புகளுடன் நடக்கின்றன. இந்த வகையில், இந்தியா முழுவதுமாகவே சப்த கன்னியரை மக்கள் வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன. சப்த கன்னியரை துதித்து வழிபடும் துள்ளலான பாடலை யான் அறக்கட்டளை தயாரித்து, அதன் யான் தமிழ் யூடியூப் வலைதளத்தில் அண்மையில் பதிவேற்றியிருக்கின்றனர்.

`கன்னிமாரு சாமி தொண, ஏழு கன்னிமாரு தொண, வேம்பிருக்கும் எடத்தில் வந்தா, நோம்பிருக்க அருளு தந்தா' என்னும் பாமர வார்த்தைகளில் பாடலைத் தொடங்கி, `ஏழாங்கல்லேறி உருவமா இருக்குமே, தாழ்வாகப் போகாமே அருவமாகி தடுக்குமே, வேனலும் ஏழுபேரு அருளுல குளிருமே' என கவித்துவமான சிந்தனையோடு கன்னியர் குறித்த சித்திரத்தை நம் மனத்தில் ஆழமாகப் பதிக்க வைத்திருக்கிறார் ரமேஷ் வைத்யா.

பொதுவாக, பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என்றே சப்த கன்னியரின் பெயர்கள் அழைக்கப்படுகின்றன. ஈரோடு பெருந்தலையூர் கன்னியர் பட்டாரிகா கன்யா, தேவ கன்யா, பத்ம கன்யா, சிந்து கன்யா, அகஜா கன்யா, வன கன்யா, சுமதி கன்யா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யாவருமே சப்த கன்னியர் என்பதை சப்த கன்னியர் தியான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாவேத் ரியாஸ்.

"வழக்கம்போல் இல்லாமல், புதுமையான அனுபவத்தைத் தரும் இசையே கன்னிமாரு சாமி தொண பாடலுக்கு வேண்டும்" என்று என்னிடம் யான் அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டனர். மலயமாருதம் என்னும் அருமையான ராகத்தில் இந்தப் பாடலுக்கான மெட்டை அமைத்தேன். இது இறை உணர்வில் பாடலைக் கேட்பவர்களை உருக்கும் ராகம்.

`வேண்டுதல் போல இல்லாமல், எனக்கு இவையெல்லாம் வேண்டும்' என்று இறைவனிடம் உரிமையோடு கேட்கும் தொனியில் பாடலை அமைத்தேன். கர்னாடக இசைக் கலைஞர் கடலூர் ஜெய்கணேஷின் குரல் இந்தத் தொனியை அப்படியே பிசகாமல் எதிரொலித்தது" என்றார், துடியான தெய்வத்தைப் பாட துள்ளலான இசையை வழங்கியிருக்கும் ஜாவேத் ரியாஸ்.

பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=f9BJlwPhZC0

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE