சிகண்டி: புரிதலுக்கான சங்கநாதம்!

By வா.ரவிக்குமார்

பாம்பு தன் சட்டையை உரித்துக் கொண்டு உயிர் வாழ்வதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் நாம், பொருந்தாத உடலை விட்டுத் தனக்கான உடலை மீட்டெடுக்கும் திருநர் சமூகத்தின் போராட்ட வாழ்க்கையை மட்டும் நகைப்புக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறோம். தனக்கான உடலை, உணர்வை மீட்டெடுப்பதற்கான போராட்டம் இன்றைக்கு நேற்றல்ல, புராண காலத்திலேயே நடந்திருக்கிறது என்பதற்கான சாட்சிதான் மகாபாரதப் போரின் திசையையே மாற்றும் சிகண்டி பாத்திரம்.

நேருக்கு நேர் நின்று போரிட்டு எவராலும் வெல்ல முடியாத மாவீரர் கங்கையின் மைந்தனான பீஷ்மர். குருட்சேத்திரப் போரில் அவரை எதிர்கொள்ள இயலாமல் அர்ச்சுனன் திணறுகிறான். பார்த்தனுக்குச் சாரதியான கிருஷ்ணன் அவனிடம் ஒரு யோசனையைச் சொல்கிறார்.

"ஒரு பெண்ணுக்கு அல்லது பெண் தன்மையோடு இருப்பவருக்கு எதிராக பீஷ்மர் போரிடமாட்டார். அதனால் பெண் தன்மையோடு இருக்கும் சிகண்டியை பீஷ்மருக்கு முன்பாக நிறுத்து. பீஷ்மர் அவருக்கு எதிராகப் போரிடமாட்டார். சிகண்டிக்குப் பின்னால் இருந்து நீ பீஷ்மரின் மீது அம்புமாரி பொழிந்து அவரை வீழ்த்து" என்கிறார்.

கிருஷ்ணனின் யோசனையை அப்படியே செய்தான் அர்ச்சுனன். தனக்கு எதிராக நிற்கும் சிகண்டி, முற்பிறவியில் அம்பா என்னும் பெண் (தான் மணந்துகொள்ள மறுத்ததால் மரணத்தைத் தழுவியள்) என்பதை ஞானதிருஷ்டியில் அறிந்து பாணங்களைக் கீழே போட்டார் பீஷ்மர். அந்த சமயத்துக்காகக் காத்திருந்த அர்ச்சுனன் பீஷ்மரின் மீது அம்புமாரி பொழிந்து அவரை அம்புப் படுக்கையில் கிடத்தினான்.

இந்தப் புராண சம்பவத்தை அண்மையில் சிகண்டி என்னும் தனிநபர் நாட்டிய நாடகமாக அலையன் ஃபிரான்செஸ் அரங்கத்தில் நிகழ்த்தினார் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் ஹிமான்சு வாஸ்தவா. அம்பாவாக தோன்றும் போது அவரின் நாட்டியத்தில் வெளிப்பட்ட லாஸ்ய முத்திரைகளும் சிகண்டியாகத் தோன்றும்போது அவரின் நாட்டியத்தில் வெளிப்பட்ட தாண்டவ அபிநயங்களும் பரதநாட்டியத்தில் அவருக்கிருக்கும் ஆழ்ந்த அனுபவத்துக்குச் சான்றாக அமைந்தன.

அம்பா மற்றும் சிகண்டி என இரண்டு பேரின் மனநிலையை நாட்டியத்தில் வெளிப்படுத்தும் போது, மேடையின் பின்னணியில் முறையே `இளஞ் சிவப்பு' மற்றும் நீலத் திரைச் சீலைகளை இடம்பெறச் செய்தது, காட்சியோடு ரசிகர்களை ஒன்றவைத்தது.

ஒரு கண்ணாடியின் முன் நேற்றைய அம்பாவை இன்றைய சிகண்டி தரிசித்து, நாளை தன்னைப் போன்றவர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை மொழியை நடனத்தின் வழியாக அற்புதமாகக் கடத்தினார் ஹிமான்சு. நாட்டிய நாடகத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஹிமான்சு சங்கை ஊதியது, பாரதப் போர் முடிந்துவிட்டது, இனம், பாலின பேதம், நிறம் ஆகிவற்றைக் கடந்து நேசிக்க மனிதர்களிடையே புரிதலை ஏற்படுத்துவதற்கான போர் இன்னமும் முடியவில்லை என்பதைச் சொல்லாமல் சொன்னது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE