ஜப்பானில் சிரிப்பதற்குப் பயிற்சி!

By திலகா

கோவிட் பிரச்சினை வந்ததிலிருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பானியர்கள் முகக் கவசத்தை அணிந்து பொது இடங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். தற்போது பிரச்சினை வெகுவாகக் குறைந்துவிட்டதால், முகக் கவசம் இன்றி வெளியிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேறு ஒரு பிரச்சினை வந்துவிட்டது. அதாவது, இயற்கையாகச் சிரிப்பது எப்படி என்பதை ஜப்பானியர்கள் மறந்துவிட்டனர். அதனால் சிரிப்புப் பயிற்சி வகுப்புகளுக்குப் பலரும் ஆர்வமாகச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!

புன்னகை என்பது இயல்பாக மனிதர்களுக்கு வரவேண்டியது. வெளியிடங்களில் புன்னகையை நளினமாக ஜப்பானியர்கள் வெளிப்படுத்துவார்கள். ஆனால், முகக் கவசம் அணிந்த பிறகு, நளினமாகச் சிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படிச் சிரிப்பை வெளிப்படுத்தினாலும் யாருக்கும் தெரியப் போவதில்லை. இப்படியே மக்கள் பழகிவிட்டதால், இப்போது முகக் கவசம் இன்றி, வெளியில் செல்லும்போது நளினமான புன்னகையை எப்படி வெளிப்படுத்துவது என்பது பலருக்கும் மறந்துவிட்டது. அதனால் இதற்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்குச் சென்று, பணம் செலுத்தி, புன்னகைக்கும் பயிற்சியை எடுத்து வருகிறார்கள்.

வானொலி பிரபலமாக இருந்து, இன்று புன்னகை பயிற்சி மையத்தை நடத்தி, தொழில்முனைவோராக மாறியிருக்கும் கெய்கோ கவானோ, “நான் இதுவரை 4 ஆயிரம் பேருக்குப் புன்னகைப்பது எப்படி என்கிற பயிற்சியை வழங்கியிருக்கிறேன். இதுவரை 700 பேரை, புன்னகை பயிற்றுநராக மாற்றி, சான்றிதழ்களையும் வழங்கியிருக்கிறேன்” என்கிறார்.

"தங்கள் முகக் கவசங்களை அகற்றினாலும், வாயைக் காட்ட பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. பலர் தங்களுக்குச் சிரிக்கத் தெரியாது என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இனி சிரிக்கப் போவதில்லை என்றும் சிலர் சொன்னார்கள். அவர்களிம் பேசி, கண்ணாடிகளைக் கொடுத்து சிரிக்கச் சொல்லி, எப்படிச் சிரிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறேன். கோவிட் தொற்றுக்கு முன்பே இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் சில இருந்தன. அவை பொது இடங்களில் நம்மை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று பயிற்சியளித்தன. தற்போது அவை எல்லாம் புன்னகை பயிற்சி மையங்களாக மாறிவிட்டன” என்கிறார் பயிற்றுநர் கிடானோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE