உலகின் சுத்தமான தேன்!

By திலகா

சிலி நாட்டின் தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்திருக்கிறது ஈஸ்டர் தீவு. இந்தத் தீவில் உள்ள ‘மோவாய்’ சிலைகள் உலகப் புகழ்பெற்றவை. தற்போது இந்தத் தீவுக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்திருக்கிறது. அது, உலகிலேயே சுத்தமான தேன் இங்குதான் கிடைக்கிறது!

உலகின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயத்துக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தேனீக்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. சில இடங்களில் தேனீக்கள் அழிந்து போகும் நிலைக்குச் சென்றுவிட்டன.

ஈஸ்டர் தீவில் உள்ள மக்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதாலும் தனித் தீவாக இருப்பதாலும் அங்குள்ள உயிரினங்கள் இயற்கையான சூழலில் வாழ்கின்றன. அதனால் தாவரங்கள் அதிக அளவில் பூந்தேனை உற்பத்தி செய்கின்றன. அவற்றை நாடிவரும் பூச்சிகளால் மிகச் சிறப்பாக மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.. இதனால் ஈஸ்டர் தீவில் தேனீ வளப்பவர்களுக்கு அதிக அளவில் தேன் கிடைக்கிறது. அந்தத் தேன் உலகின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் தேனைவிடச் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கிறது.

"இங்கு விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை, நாங்கள் பழங்காலச் சாகுபடி நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். நீர் முற்றிலும் மழையிலிருந்து சேகரிக்கப்படுகிறது. தீவு முழுவதும் சுத்தமான நீர் ஆதாரங்கள் உள்ளன. உலகின் மற்ற பகுதி தேனீக்களைப் போல் அல்லாமல், அவை எந்த விதத்திலும் நோயின் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. எனவே தேன் கூட்டிலோ அல்லது தேனீக்களிலோ ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஈஸ்டர் தீவின் தேனீக்கள் உலகில் உள்ள மற்ற தேனீக்களுடன் உறவைக் கொண்டிருக்கவில்லை என்று பரிசோதனைகள் காட்டுகின்றன. பூச்சிக்கொல்லிகளால் தேனீக்கள் அழியும் நிலைக்குச் செல்லும்போது, ஈஸ்டர் தீவு தேனீக்கள்தாம் கைகொடுக்கும்” என்கிறார் தேனீ வளர்ப்பாளர் ரோட்ரிகோ லாப்ராஸ்.

ஈஸ்டர் தீவின் தேனீக்கள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. தீவின் இனிமையான காலநிலை காரணமாக, தேனீக்கள் ஆண்டு முழுவதும் பூக்களை நாடிச் சென்றுகொண்டிருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் தேனீ வளர்ப்பாளர்கள் ஒரு காலனியிலிருந்து ஆண்டுக்கு 20 கிலோ தேனை எடுக்கிறார்கள் என்றால், ஈஸ்டர் தீவில் ஆண்டுக்கு 90 முதல் 120 கிலோ தேன் வரை எடுக்கிறார்கள்!

ஈஸ்டர் தீவு தேனீக்களை நோய்கள் தாக்குவதில்லை என்பதால், தேனீ வளர்ப்பவர்களுக்கு எந்த வகையான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அதனால்தான் ஈஸ்டர் தீவு தேனை ‘அமிர்தம்’ என்று அழைக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE