கோலிவுட் ஜங்ஷன்: கிராமத்து ஆர்யா!

By செய்திப்பிரிவு

‘கொம்பன்’, ‘கொடி வீரன்’, ‘விருமன்’ என கிராமிய வாழ்வில் உறவு சார்ந்த சிக்கல்களைக் கதைக் களமாக்கி வெற்றிப் படங்களைத் தந்து வருபவர் எம்.முத்தையா. அவரது இயக்கத்தில் ஆர்யா நடித்து முடித்துள்ள படம், ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஜீ ஸ்டுடியோஸ் - டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

ஆர்யா முதல் முறையாகக் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக வரும் இப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வரும் ஜூன் 2ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு கிராம் தங்கம்! - ஏற்கும் கதாபாத்திரம் எதுவானாலும் அதுவாகவே உணர வைத்துவிடுபவர் சார்லி. அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றும் படம் ‘எறும்பு’. 2018இல் வெளியான ‘போதை’ என்கிற படத்தை இயக்கியிருந்த சுரேஷ், தயாரித்து இயக்கியிருக்கும் இரண்டாவது படம். சார்லியுடன் எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், சிறார் நடிகர்களான சக்தி ரித்விக், மோனிகா ஆகிய நால்வரும் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படம் குறித்துப் பேசிய இயக்குநர், “தங்கம் என்பது ஏழைகளின் கைக்கு எட்டாத உலோகம். கரும்பு அறுவடை செய்யும் கூலித் தொழிலாளியாக இருக்கும் ஒரு ஏழைப் பெற்றோரின் 8 வயது மகனும் 10 வயது மகளும் வீட்டில் இருந்த ஒரு கிராம் தங்க மோதிரத்தைத் தொலைத்துவிடுகிறார்கள்.

அதனால் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் பிரளயம்தான் கதை. பெரியவர்கள் முக்கியமாகப் பார்க்க வேண்டிய ஒரு தரமான குழந்தைகள் படமாக இதை எடுத்திருக்கிறோம். ஒரு முயலும் நடித்திருக்கிறது” என்றார்.

இது தெலுங்கின் ‘குஷி’ - விஜய் - ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000இல் வெளியான ‘குஷி’, 2கே கிட்ஸின் காதல் கிளாசிக் படமாகிவிட்டது. அதே தலைப்பில் தற்போது தெலுங்கில் தயாராகி வரும் படத்தில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் காதலர்களாக இருந்து எதிரும் புதிருமாக மாறும் கதையில் நடித்திருக்கிறார்கள்.

மணி ரத்னத்தின் ரசிகர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் சிவா நிர்வாணா, ‘மணி ஸ்டை’லிலேயே படத்தை இயக்கியிருக்கிறாராம். இதைத் தமிழிலும் வெளியிடவிருக்கிறார்கள். தமிழ் மொழி மாற்றுப் பதிப்புக்காக ஹேஷாமின் இசையில் பாடல்களை எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. அவற்றில் ‘என் ரோஜா நீயா..’ என்கிற முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. அதை விஜய் தேவரகொண்டா - சமந்தா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE