கட்டுமான நிறுவனத்தின் விதிமீறலை எதிர்த்துப் போராடி வென்ற முதியவர்

By முகமது ஹுசைன்

கட்டுமான உலகில் ஜெயின் ஹவுசிங் நிறுவனம் குறித்துத் தனியே ஓர் அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் அதுவும் ஒன்று. இந்த நிறுவனம் 2009 இல், 'ஜெயின்ஸ் பெப்பிள் புரூக்' எனும் அடுக்குமாடிக் குடியிருப்பை சென்னை துரைப்பாக்கத்தில் கட்டியது. சகல வசதிகளையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்தக் குடியிருப்பு அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தக் குடியிருப்பு திட்டத்தை விரிவுபடுத்தும்போது, ஜெயின் ஹவுசிங் சுற்றுச்சூழல் சட்ட விதிமீறலில் ஈடுபட்டது என அதில் வசிக்கும் முத்துகிருஷ்ணன் எனும் முதியவர் வழக்குத் தொடர்ந்தார். அதன் நீட்சியாக, தற்போது ஜெயின் ஹவுசிங் நிறுவனம் 2.19 கோடி ரூபாய் அபராதத்தைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறல்

2009இல் ஜெயின் ஹவுசிங் நிறுவனம் 'ஜெயின்ஸ் பெப்பிள் புரூக்' அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் கட்டத்தில் (first phase) 412 வீடுகளையும், இரண்டாவது கட்டத்தில் 396 வீடுகளையும் கட்டுவதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது. ஆனால், அந்த நிறுவனம் முதல் கட்டத்தில் மட்டும் 620 வீடுகளைக் கட்டியது. இதன் காரணமாக, அந்தக் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் வெளியேற்றமும் திடக்கழிவு உற்பத்தியும் அதிகரித்தன.

இந்த விதிமீறலைச் சுட்டிக்காட்டி, அந்தக் குடியிருப்பில் வீடு வாங்கியிருந்த முத்துகிருஷ்ணன் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தை அணுகினார். தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது. 2018இல் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அந்தக் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்தனர். ஜெயின் ஹவுசிங் நிறுவனம் முழுத் திட்டத்திற்கும் வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை அல்லது திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இழப்பீடு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஜெயின் ஹவுசிங் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியது. ஆனால், தாங்கள் சுற்றுச்சூழல் சட்டங்களை எவ்விதத்திலும் மீறவில்லை என்று அந்த நிறுவனம் பதிலளித்தது. இது தொடர்பான தனது அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், 2019இல் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்பித்தது.

அதன் படி, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, சுற்றுச்சூழல் இழப்பீடாக 2.19 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குச் செலுத்தும்படி, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த அபாரத்தை எதிர்த்து ஜெயின் ஹவுசிங் மேல்முறையீடு செய்தது. திட்டத்தின் முதல் கட்டத்தில், அனுமதிக்கப்பட்ட கட்டுமான பகுதிக்குள் மட்டுமே கூடுதலாக 208 வீடுகளைக் கட்டியதாக அது வாதிட்டது. ஆனால், தீர்ப்பாயக் குழு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

நம்பிக்கை விதை

ஒரு முதியவர், தனது 72 வயதில், உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு விசாரணைக்கும் நீதிமன்றத்திற்குச் சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் வெற்றி இது. 208 வீடுகளின் விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது, 2.19 கோடி ரூபாய் அபராதம் என்பது மிகச் சிறிய தொகையே. இருப்பினும், தனி ஒரு மனிதர் தொடர்ந்து போராடினால், எந்த ஒரு பெரும் நிறுவனத்தையும் சட்டத்தின் முன் மண்டியிடச் செய்ய முடியும் எனும் நம்பிக்கையை இன்றைய தலைமுறையினரிடம் முத்துகிருஷ்ணன் விதைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்