அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் முயற்சியில் உலக நாடுகள்: முடிவுக்கு வருகிறதா உலகமயம்?

By முகம்மது ரியாஸ்

உலகம் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக புதிய கட்டமைப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மிக சமீபத்திய அறிகுறி, டாலர்மயத்திலிருந்து விடுபட ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சி. தற்போது சர்வதேச அளவில் நிகழும் வர்த்தகத்தில் 80 சதவீதம் அமெரிக்க டாலரில் நிகழ்கிறது. உலக நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பாக டாலரே முதன்மை பங்கு வகிக்கிறது.

விளைவாக, உலக நாடுகள் அமெரிக்க டாலரை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. தற்போது இந்த டாலர் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதாவது டாலருக்கு மாற்றான பரிவர்த்தனை முறையை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன.

சென்ற ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷ்யாவுடன் ஏனைய நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்வது சிக்கலுக்கு உள்ளானது. இந்தச் சூழல், அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டிய தேவையை உலக நாடுகள் மத்தியில் தீவிரமாக்கியுள்ளது.

டாலருக்கு மாற்றான செலாவணியை உருவாக்குவது தொடர்பாக பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சென்ற ஆண்டு ரஷ்யா அறிவித்திருந்தது. இந்தச்சூழலில், சில வாரங்களுக்கு முன்பு சீனா மற்றும் பிரேசில் தங்களுக்கிடையிலான வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக தத்தம் கரன்சியிலேயே மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டன.

சவுதி அரேபியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், ரஷ்யா உட்பட சில வெளிநாடுகளுடன்ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை ரிசர்வ் வங்கி சென்ற ஆண்டே தொடங்கியது.

டாலர் கட்டமைப்பு உலகில் நரம்புபோல் படர்ந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட்டு மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எனினும், டாலர்மயத்திலிருந்து விடுபடும் தற்போதைய போக்கை சாத்தியம், சாத்திய மின்மை என்ற கோணத்தில் மட்டும் அணுகிவிட முடியாது.

உலகின் அரசியல், பொருளாதார கட்டமைப்பில் நிகழும் முக்கியமான மாற்றத்தின் வெளிப்பாடாக இந்த முயற்சியைப் பார்க்க வேண்டியதாக உள்ளது. டாலர் எப்படி உலகின் முதன்மை அந்நிய செலாவணியாக மாறியது என்பதையும் அதன் வழியே அமெரிக்கா எப்படி உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டது என்பதையும் தெரிந்துகொள்வதன் வழியே உலகின் கட்டமைப்பில் நிகழ ஆரம்பித்திருக்கும் மாற்றத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

2-ம் உலகப் போர் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு: இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை ஐரோப்பிய நாடுகள் உலகின் ஆதிக்க சக்திகளாக இருந்தன. அந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா முக்கிய நாடாக இருந்த போதிலும், அதன் சர்வதேச முக்கியத்துவம் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே சர்வதேச அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா உருப்பெற்றது. தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவம் என பல தளங்களில் சர்வதேச அளவில் முதன்மை நாடாக அமெரிக்கா மாறத் தொடங்கியது.

அமெரிக்காவின் இந்த வளர்ச்சிக்கு டாலர் பொதுப் பரிவர்த்தனை நாணயமாக மாறியது ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
இரண்டாம் உலகம் போர் முடிவுக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து இருந்தது. பணவீக்கம் உச்சத்தில் இருந்ததால் உலக நாடுகளின் நாணய மதிப்பு பெரும் சரிவில் இருந்தது. அதுவரையில் தங்கத்தின் அடிப்படையில்தான் நாடுகளின் நாணய மதிப்பு கணக்கிடப்பட்டு வந்தது. போர் காரணமாக பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்த நிலையில் புதிய பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் உலக அளவிலான தங்கத்தின் இருப்பில் நான்கில் மூன்று பங்கு அமெரிக்காவிடம் இருந்தது. மேலும் ஏனைய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிட அமெரிக்க டாலர் வலுவான நாணயமாக இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் பொது பரிவர்த்தனை நாணயமாக முன்வைக்கப்பட்டு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு நிகரான அமெரிக்க டாலர்மதிப்பு 35 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்னவென்றால், ஒரு நாடு தனக்குத் தேவையான தங்கத்தை இனி டாலர் அடிப்படையில்தான் வாங்க வேண்டும். ஒரு கட்டத்தில் டாலரின் புழக்கத்துக்கு ஏற்ற அளவில் அமெரிக்காவில் தங்க இருப்பு இல்லாமல் போனது. தவிர, வியட்நாம் மீதான போரினால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் சரிவுக்கு உள்ளாகி இருந்தது.

இந்தச்சூழலில் 1971-ல் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன், தங்கத்துக்கும் டாலருக்கும் இடையிலான பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்துசெய்தார். அதாவது, இனி டாலரின் மதிப்பு தனித்தது, அதை தங்கத்துடன் ஒப்பிடக் கூடாது என்றார். இந்த அறிவிப்புக்குப் பிறகு உலக நாடுகள் தங்கத்தை இருப்பாக வைத்துக்கொள்வதை விடவும் அமெரிக்க டாலரை இருப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கின.

இப்படி உலக அளவில் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி இருப்பாக ஆனது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனும் அமெரிக்காவுக்கு நிகரான வலுவான நாடாக உருப்பெற்றபோதிலும், டாலர் பொதுப் பரிவர்த்தனை நாணயமாக மாறியதுஅமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

ஆசியாவின் வளர்ச்சியும் உலகமயமாக்கலும்: இந்தக் காலகட்டத்தில் உலக அரங்கில் வேறு சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. காலனியா திக்கத்திலிருந்த நாடுகள் சுதந்திரம் பெறத் தொடங்கின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், இந்தோனேசியா, வியட்நாம், துனிஷியா, மொராக்கோ, கானா, வங்கதேசம் உள்ளிட்டவை சுதந்திர நாடாக உருவாகின. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, சோவியத் யூனியன் தவிர்த்து உலக அரங்கில் ஆசியப் பிராந்தியம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறத் தொடங்கியது.

குறிப்பாக, 1980களுக்குப் பிறகு சீனா, தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகள் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றன. இந்தக் காலகட்டத்தில் தொழில் செயல்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்கான தேவை உலகஅளவில் உருவானது. பல்வேறு நாடுகளில் தொழில் துறையில் அரசு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்திவந்தன.

தொழில் செயல்பாடுகளைப் பெருக்க வேண்டுமென்றால், தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாராளமயக் கொள்கைகள் அறிமுகமாகத் தொடங்கின. நாடுகளிடையிலான வர்த்தக, தொழில் கொள்கையில் சீர்த்திருத்தங்கள் நிகழ்ந்தன. தனியார்மயமாக்கம், நாடுகளிடையே தடையற்ற வர்த்தகம், தொழில்சார் கட்டுப்பாடுகளில் தளர்வு என தாராளமய கொள்கைகள் முன்வைக்கப்படலாயின. இதன் தொடர்ச்சியாக 1990-களில் உலகமயமாக்கல் நிகழ்ந்தது. நாடுகள் சந்தைகளாக அணுகப்படலாயின.

வலுப்பெற்றது அமெரிக்காவின் ஆதிக்கம்: உலகமயமாக்கல் வழியாக ஆசியா பெரும் வளர்ச்சி நோக்கிப் பயணித்தபோதிலும், உலக மயமாக்கலின் மிகப் பெரிய பலனை அமெரிக்காவே அடைந்தது. சோவியத் யூனியனின் உடைவு அமெரிக்காவுக்கு பல சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது.

உலகமயமாக்கலால் சர்வதேச அளவில் தொழில்சார் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் உலகளாவிய அளவில் கிளைபரப்பத் தொடங்கின. தன்னுடைய தொழில் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு வழியாக அமெரிக்கா உலகச் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி பலமடங்கு உயர்ந்தது.

அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தன. இதனால், வேலைவாய்ப்பு அதிக அளவில் உருவானது. உலகமயமாக்கல் காரணமாக உலக நாடுகளிடையிலான வர்த்தகம் அதுவரையில் இல்லாத அளவில் உச்சம் தொட்டதால், டாலர் பயன்பாடு அதிகரித்தது. இதனால், அதன் மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது. விளைவாக, உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது.

டாலரை சர்வதேச அரசியலில் ஓர் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியது அமெரிக்கா. அரசியல், பொருளாதார தளத்தில் மட்டுமல்ல கலாச்சார தளத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது. ஆடை, உணவு என அமெரிக்காவின் வாழ்வியல் முறைகள் ஏனைய நாடுகளுக்கு பரவின. ஆனால், தற்போது அமெரிக்காவின் ஆதிக்கம் தளரத் தொடங்கி இருக்கிறது.

எதிர் உலகமயமாக்கல்: 2008-ல் லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானதையடுத்து அமெரிக்கா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. உலகமயமாக்கலால் உலக நாடுகளின் சந்தை ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகெங்கிலும் பரவியது. இந்த நிகழ்வால், அமெரிக்கமயத்திலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் தீவிரமாக உணர்ந்தன. இந்தக் காலகட்டத்தில் சீனா தன்னை அமெரிக்காவுக்கு மாற்றான சக்தியாக தீவிரமாக முன்னிறுத்தத் தொடங்கியது.

2012-ல் ஜி ஜின்பிங் சீன அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சீனா உலகஅரங்கில் மிகப் பெரும் அரசியல் சக்தியாகவும் பொருளாதார சக்தியாகவும் உருவெடுத்துள்ளது. உலகின் கட்டமைப்பை மறுவரையறை செய்வதை தன் இலக்காக சீனா கொண்டுள்ளது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது உலகின் அரசியல் போக்கில் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். 2008 பொருளாதார நெருக்கடி, சீன – அமெரிக்க மோதல் காரணமாக உலகின் அரசியல், பொருளாதார போக்கு மாறி வந்த நிலையில் கரோனா அந்த மாற்றத்தை இன்னும் தீவிரப்படுத்தியது.

2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்கின் போது நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. உலகம் அதுவரை சந்தித்திராத தருணமாக அது இருந்தது. சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மக்களின் இடம்பெயர்வு நின்றுபோனது. உலகின் பொருளாதாரக்கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான தருணமாக அது அமைந்தது. கரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் சுயசார்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. சமீப காலமாக நாடுகளிடையிலான வர்த்தக உறவில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, கருத்தியல் ரீதியாகவும் நாடுகளின் எல்லைகள் தடிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த பத்தாண்டுகளாக உலகின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எதிர் உலகமயமாக்கல் (Deglobalisation) என்கிறார்கள். அதாவது உலகமயம் செயலிழந்து வருவதாகவும் உலகம் புதிய கட்டமைப்புக்கு மாறிவருவதாகவும் கூறுகின்றனர்.

மல்டிபோலார் கட்டமைப்பு: இந்த மாற்றத்தை ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரைத் தொடர்ந்து சர்வதேச உறவில் மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவை எடுத்துக்கொள்வோம். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.

ஏனைய நாடுகளும் இந்த முடிவைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கு கட்டுப்படவில்லை. அமெரிக்காவின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்காவுடன் நல்ல உறவில் இருந்து வந்த போதிலும், சமீப ஆண்டுகளாக உலக அரங்கில் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தீவிர தேசியவாதத்தை நோக்கி நகர்ந்துள்ள இந்தியா, தற்போது சுயசார்பை இலக்காகக் கொண்டு பயணப்பட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, சர்வதேச உறவில் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

இன்னொருபுறம், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி முதல் இடம் பிடித்திருக்கும் சீனா, இந்த வர்த்தக வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னுடைய நாணயமான யுவானை டாலருக்கு மாற்றான அந்நிய செலாவணியாக நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது, உலக நாடுகள் உலகமயத்திலிருந்து விடுபட்டு மல்டிபோலார் கட்டமைப்பை (Multipolar World) நோக்கி நகர்ந்து வருவதாக வரையறுக்கிறார்கள். அதாவது, அமெரிக்காவை மையப்படுத்தியதாக இல்லாமல், உலக நாடுகள் அரசியல், பொருளாதாரம் பலம் கொண்ட தனித்தனி மண்டலங்களாக பிரிந்து செயல்படுவதற்கான கட்டமைப்பு உருவாகி வருவதாகக் கூறுகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவற்றை மையப்படுத்தி உலக நாடுகள் தனித்தனி மண்டலங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாலர்மயத்திலிருந்து விடுபடுவதற்கான முயற்சியை உலகமயத்திலிருந்து விலகும் பயணத்தின் ஓர் அங்கமாக பார்க்க முடியும். அந்தவகையில் தற்போது டாலர்மயத்திலிருந்து விடுபடுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைத் தாண்டி, அதை நோக்கிய முயற்சியே சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.

- riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE