சித்த மருத்துவத்தில் ஆட்டிசம்

By செய்திப்பிரிவு

ஆண்டுதோறும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மட்டும் பத்து லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். இது பெரும்பாலும் பெண் குழந்தையை விட நான்கு மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது.

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல. இது மூளையின் ஆரம்பக்கால வளர்ச்சியின்போது ஏற்படும் பிரச்சனையுடன் தொடர்புடையது. பொதுவாக, ஆட்டிசம் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, சமூக தொடர்புகளிலும் சிரமத்தை உண்டாக்கும்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நன்றாகப் பேசும் திறன் இருக்காது; சில குழந்தைகள் ஓரளவு பேசினாலும் தெளிவாக இருக்காது, மற்றவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது. ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

எப்போது கண்டுபிடிக்க முடியும்?

ஆட்டிசமானது கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை இருக்கும் போதே ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் காரணமாக உருவாகிவிடும். ஆனாலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் நிலை இயல்பான குழந்தையின் தோற்றத்தை போலவே இருக்கும்.

குழந்தை வளரும்போது, பெரும்பாலும் ஒன்றரை வயது முதல் இரண்டு வயதிற்குள் ஆட்டிசத்தின் பாதிப்பைக் கணித்து விடலாம். ஒரு குழந்தையின் ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் மூளை வளர்ச்சி முழுமை பெறும். அதனால்தான் இப்பிரச்சனை உள்ள குழந்தைக்கு இந்தக் காலக்கட்டத்தில்தான் ஆட்டிசத்தைக் கணிக்க முடிகிறது.

ஒரு சில குழந்தைகளுக்கு, ஆரம்பக் கால அறிகுறியை வைத்து ஆறு மாத வளர்ச்சிக்குப் பிறகும் கணிக்க முடியும்.

க.தர்ஷினிபிரியா

ஆட்டிசம் பிரச்சனைக்குக் காரணம் என்ன?

நவீன மருத்துவத்தில் ஆட்டிசம் பிரச்சனைக்கு உறுதியான காரணம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படவில்லை. நவீன ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது மரபு வழியாகவும், மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளாலும் இது நிகழலாம்.

கருவுற்றிருந்த தாயின் வயது, கர்ப்பக்காலத்தில் தாயின் உணவு, கர்ப்பிணியின் உடல் எடை, கர்ப்பிணியின் உடல் மன ஆரோக்கியமின்மை, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல், மனவேதனையுடன் இருத்தல் ஆகியவை ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள். முக்கியமாக, சித்த மருத்துவத்தில் அடிப்படையாகக் கருதப்படும் வளி, அழல், ஐயம் என்ற மூன்றும் பாதிக்கப்பட்டு, சமநிலை கேடு அடைவதால், குழந்தைகளின் உடலிலும் மனத்திலும் ஏற்படும் பிரச்சனை ஆட்டிசத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

நடைமுறைகளில் உள்ள சிகிச்சை

ஆட்டிசம் பிரச்சனை கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான சவால்களைச் சந்திக்கிறது. இதன் காரணமாக, ஆட்டிசம் நிபுணர்கள் சேர்ந்து அந்தக் குழந்தைக்குச் சிறந்த பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானித்து அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவார்கள்.

செயல் சார்ந்த சிகிச்சை, புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை, பேச்சு சிகிச்சை, இசைச் சிகிச்சை, படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சிகிச்சை, ஆரம்பத் தலையீட்டுச் சிகிச்சை, பெற்றோருக்கான பயிற்சி போன்று பல்துறை வல்லுநர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை தற்போது நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.

சித்த மருத்துவச் சிகிச்சை

சித்த மருத்துவத்தின் படி, ஆட்டிசம் பிரச்சனை தாய் கருவுற்றிருக்கும் போதே வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தொடங்குகிறது.

சித்த மருத்துவத்தில் சித்தர்கள் தாயின் கருவில் சிசு உருவான முதல் குழந்தை பிறந்து முதுமையாகி இயற்கை மரணம் வரையில் நோயின்றி வாழப் பல வழிமுறைகளைக் கூறியுள்ளனர். சித்த மருத்துவத்தின் படி, ஆட்டிசத்துக்கு சமநிலையற்ற வளி, அழல், ஐயம் போன்றவற்றைச் சமன்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.

கழிச்சலுண்டாக்கியாகவும், மலமிளக்கியாகவும் பயன்படும் மாந்த எண்ணெய் போன்றவற்றை வளிக்குற்றத்தைச் சமன்படுத்தப் பயன்படுத்தலாம்

சீரகத் தண்ணீர் அருந்துதல், எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல் போன்றவற்றை அழல் குற்றத்தைச் சமன்படுத்தப் பயன்படுத்தலாம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆடாதோடை, தூதுவளை, கடுக்காய் போன்ற குடிநீர் வகைகளையும், மனச்சாந்தி அடைய மனமூட்டக்கூடிய புகை, வேது, பொட்டணம், தொக்கணம் போன்றவற்றையும் ஐயக்குற்றத்தைச் சமன்படுத்தப் பயன்படுத்தலாம்

அமுக்கரா சூரணம், கஸ்தூரி மாத்திரை, கோரோசனை மாத்திரை, பிரமி நெய், வல்லாரை நெய் போன்றவற்றை மூளை நரம்பை மேம்படுத்த பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிறு சம்பந்தமான பிரச்சனைக்குக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் ஆகியவற்றால் ஆன சூரணம், மாந்த எண்ணெய், சீரகக் குடிநீர், சோம்பு குடிநீர், ஓமக்குடி நீர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் குறிகுணங்களுக்கேற்ப சித்த மருத்துவமுறையிலான சிகிச்சையை மேற்கொண்டால் அந்தக் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முற்றிலும் குணப்படுத்த இயலாது; இருப்பினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குறிகுணங்களின் தீவரத்தைக் குறைத்து இயல்பான வாழ்க்கையை வாழச் சித்த மருத்துவம் பெரிதும் உதவும்.

- டாக்டர் க.தர்ஷினிபிரியா

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE