வியூகம் 2: நாள் என்பது சில மணி நேரம் மட்டுமே!

By செல்வ புவியரசன்

ரசு உயர்பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் தவறாமல் சில செய்திகளைப் பார்க்க முடியும். பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே படித்த மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். சில நேரங்களில் தங்களது கல்வித் தகுதிக்குக் குறைவாகவும்கூட அவர்கள் சில வேலைகளைச் செய்திருப்பார்கள். பொருளாதாரச் சுமையைத் தவிர்க்கும் நோக்கத்தோடு பணிச்சுமையைத் தவிர்க்கும் நோக்கமும் அதில் அடங்கியிருக்கும். உயர்பதவிகளுக்கான போட்டியில் பின்தங்கி, அடுத்தடுத்த நிலைகளில் உள்ள தேர்வுகளில் வெற்றிபெற்று பணியாற்றிக்கொண்டே தொடர்ந்து முயன்று இலக்கை எட்டிவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

நேர மேலாண்மை

ஒரு போட்டித் தேர்வுக்கு முழு நேரத்தையும் ஒதுக்கி, பயிற்சி நிலையங்களின் துணையோடு படிக்கும் மாணவர்களால் அத்தேர்வில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது. ஆனால் வேலை பார்த்துக்கொண்டே படிக்கிற மாணவர்களால் எப்படி எளிதாக வெற்றிபெற முடிகிறது?

தேர்வுகளுக்கான திட்டமிடலில் நேர மேலாண்மைக்கு முக்கியமான இடம் உண்டு. நாள்தோறும் தவறாமல் நாம் பாடங்களைப் படித்துக்கொண்டிருப்பதாக நம்புவோம். அந்த எண்ணத்திலிருந்து அளவுக்கதிகமான தன்னம்பிக்கையும் பெறுவோம். ஆனால், அந்த நம்பிக்கையே பல நேரங்களில் நம் காலை வாரிவிடக்கூடும். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்களுக்கு ஒரு நாளில் எத்தனை மணி நேரம் படிப்பதற்கு வாய்ப்பிருக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கும். எனவே, வேலை நாட்களில் அதற்கான நேரத்தை ஒதுக்கி, படிக்க வேண்டிய பாடங்களைப் படித்துவிடுவார்கள். வார விடுமுறை நாட்களை முழுதாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், ஒரு நாள் என்பது சில மணி நேரம் மட்டுமே.

காத்திருக்க வேண்டும்

முழு நேரத்தையும் ஒதுக்கி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் நேர மேலாண்மையைப் பின்பற்றினால் அவர்கள் இன்னும் எளிதாக வெற்றிபெற முடியும். ஆனால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் படிப்பவர்கள் அடுத்த நாளில் 4 மணி நேரம் மட்டுமே படிப்பார்கள். வாரத்தில் சில நாட்கள் புத்தகத்தைத் தொடும் விருப்பமே இல்லாமலும் போகும். தொடர்ந்து நாள்தோறும் படித்துக்கொண்டிருப்பதால் சில நேரம் சலிப்புணர்வுக்கும் ஆட்படலாம். இதெல்லாம் தவறில்லை. இயல்பானதுதான். ஆனால், நேர மேலாண்மையில் இப்படிச் சறுக்கிவிழுவது வெற்றியைத் தாமதமாக்கும். உயர்பதவிகளுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனால், அடுத்த வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். எனவே, கிடைக்கிற நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி, தினந்தோறும் நாம் படிக்கும் நேரத்தைச் சரியாகத்தான் திட்டமிடுகிறோமா என்பதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? ஓர் எளிய சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். நாட்குறிப்பில் ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை, இரவு என்று அவ்வப்போது அதுவரை எவ்வளவு நேரத்தைப் படிப்பதற்காகச் செலவழித்திருக்கிறோம் என்று குறித்துவைத்துக்கொள்ளலாம்.

சில மணி நேரம் மட்டுமே!

படிக்கும் நேரம் என்றால் முழுமையாக அதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட நேரம் என்று அர்த்தம். தொலைபேசி அழைப்புகளால் படிப்பு தடைப்படலாம். இடையிடையே பிடித்த பாட்டுகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ பார்க்கத் தொடங்கி அதிலும் நேரம் செலவாகலாம். இப்படிச் செலவாகும் நேரங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு, ஒரு நாளில் படிப்பதில் மட்டுமே செலவிடும் நேரம் எவ்வளவு என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். படிப்பதற்கு ஏற்ற வேளை காலையா மாலையா அல்லது இரவா என்பதும் அப்போது தெளிவாகும். கடைசியில் நாள் முழுக்க நாம் புத்தகங்களோடு இருந்தாலும் முழுக்கவனத்தோடு படிப்பதற்கு ஒதுக்கும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அதற்கேற்ப ஒரு தேர்வுக்குக் கண்டிப்பாக படித்தாக வேண்டிய பாட நூல்கள், அதற்குத் தேவைப்படும் கால அளவு, தேர்வுக்கு இன்னும் மிச்சமிருக்கும் நாட்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாளில் படிப்பதற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தைப் பகுத்துக்கொள்ளலாம்.

ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஆனால், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவரைப் பொறுத்தவரை, ஒரு நாள் என்பது சில மணி நேரங்கள் மட்டும்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்