பலூனில் பறக்கலாம்!

By திலகா

விமானத்துக்கு முன்பு வானில் மனிதர்களைப் பறக்க வைத்தவை வெப்பக் காற்று பலூன்கள்தாம்.

ஆள் இல்லாத வெப்பக் காற்று பலூன்கள் பல ஆண்டுகள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன. 1782ஆம் ஆண்டுதான் முதன் முதலில் மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறந்தது வெப்பக் காற்று பலூன்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறந்த முதல் பலூன்

பலூனின் மேற்பகுதியில் வெப்பக் காற்று நிறைந்திருக்கும். இதை ‘என்வலப்’ என்று அழைப்பார்கள். கீழ்ப்பகுதியில் இருக்கும் பர்னர் மூலம் திரவ புரொபேன் எரிந்து வெப்பத்தை வழங்குகிறது.

பலூனுக்குள் இருக்கும் வெப்பக் காற்று, வெளியில் இருக்கும் குளிர்ந்த காற்றைவிட லேசானது. அதனால்தான் வானில் பறக்கிறது.

பயணிகள் பலூனுக்குக் கீழே இருக்கும் கூடை போன்ற பகுதியில் நின்றுகொள்ள வேண்டும்.

பெரும்பாலான வெப்பக் காற்று பலூன்கள் பலூன் வடிவிலேயே உருவாக்கப்படுகின்றன. வெகுசில வெப்பக் காற்று பலூன்கள் விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்று உருவாக்கப்படுகின்றன.

வெப்பக்காற்று பலூன்கள் அதிக உயரத்தில் பறக்கக்கூடியவை. ஒரு வெப்பக் காற்று பலூன் 21 ஆயிரம் மீட்டர் (68,900 அடிகள்) உயரம் வரை பறந்து, சாதனை படைத்துள்ளது.

5 ஆயிரம் மீட்டர்களுக்கு மேல் சென்றால் சுவாசிக்க சிரமமாக இருக்கும். ஆக்சிஜன் தேவைப்படும்.

வெப்பக் காற்று பலூனுக்குள் 120 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவே வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.

பலூன் பகுதி நைலானால் தயாரிக்கப்படுகிறது. 230 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்தான் இது உருகும்.

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வெப்பக் காற்று பலூன்களின் தேவை இல்லை. என்றாலும் உலகம் முழுவதும் விளையாட்டுகள், திருவிழாக்கள் போன்றவற்றில் வெப்பக் காற்று பலூன்கள் இப்போதும் பறந்துகொண்டுதான் இருக்கின்றன. துருக்கி, அமெரிக்கா, எகிப்து, தான்சானியா போன்ற நாடுகளில் வெப்பக் காற்று பலூன்கள் பிரபலமாக இருக்கின்றன. இந்தியாவில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெப்பக் காற்று பலூன்களில் பறக்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE