இயக்குநரின் குரல்: இந்தப் பேய் உங்கள் சொந்தப் பேய்!

By Guest Author

‘சூப்பர் டூப்பர்’ என்கிற ஆக் ஷன் நகைச்சுவைப் படத்தைக் கொடுத்த அருண் கார்த்திக், ‘ரிப்பப்பரி’ என்கிற தனது இரண்டாவது படத்தை ‘ஹாரர் காமெடி’யாக இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

விட்டலாச்சாரியா காலம் தொட்டு எத்தனையோ விதமான பேய்க் கதைகளைப் பார்த்துவிட்டோம். ஆனால், ‘சாதிப் பெருமிதம் கொண்ட பேய்’ என்கிற கதைக் கருவுக்கு எங்கிருந்து தாக்கம் பெற்றீர்கள்?

சாதிய உணர்வைத் துறந்தவர்கள் அதிகரித்து வரும் காலம் இது. அவர்களைப் போன்றவர்கள், சாதியை ஒருச் சட்டைபோல் அணிந்துகொண்டு ஆணவத்துடன் திரிபவர்களைப் பார்த்து ‘அவன் ஒரு சாதி வெறி பிடித்த பேய்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த வார்த்தையிலிருந்து பெற்ற தாக்கம்தான்.

சாதிச் சண்டையில் செத்துப்போன ஒருவன், சாதி வெறி அடங்காமல் செய்யும் ரணகளத்தில் சிக்கும் மூன்று இளைஞர்களின் கதையாக விரித்துள்ளோம்.

அருண் கார்த்திக்

சுவாரஸ்யமான ஒருவரிக் கதையைக் கொண்ட பல படங்கள், பார்வையாளர்களைக் கவர்வதில் கோட்டை விட்டுவிடுகின்றன..

முழுவதும் கதைக் களத்தை நம்பிப் பயணிக்கும் படங்களில், திரைக்கதை வலிமையாக இருந்தால் மட்டும்தான் இரண்டரை மணி நேரம் படம் பார்க்க முடியும். உண்மையிலேயே ஒரு பேய்க்குச் சாதி வெறி பிடித்தால் என்னவாகும் என்று யோசித்தபோது, அதில் நகைச்சுவை, ஹாரர், ஆக்‌ஷன், காதல், க்ரைம், இசை என பல அம்சங்களை இணைக்க முடியும் என்று தோன்றியது.

அப்படித்தான் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் குதூகலமும் கலந்த உணர்வுடன் படம் பார்க்கும் திருப்பங்களை அமைத்துத் திரைக்கதை எழுதியிருக்கிறேன். கிராமப் பின்னணியில் யூடியூபில் சமையல் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களை அந்தப் பேய் எப்படி மோப்பம் பிடித்தது, எதற்காக மோப்பம் பிடித்தது என்பதிலிருந்தே படத்தின் சுவாரஸ்யம் தொடங்கிவிடும்.

ஒரு வீடு, அதற்குள் பேய், அங்கே போய் நான்கு பேர் மாட்டிக்கொள்கிறார்கள் என்கிற ‘டெம்பிளேட்’ இதில் கிடையாது. இதில் வரும் பேய் கேரக்டரைப் பார்த்தால், நமது சித்தப்பா, பெரியப்பா உணர்வு வரும். பேயைப் பார்த்து குடும்பமாகச் சிரித்துக்கொண்டே பயப்படலாம். விஷுவல் எஃபெக்ட்ஸ் தரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் நேரமெடுத்து உருவாக்கியிருக்கிறோம்.

இப்படத்தில் சாதி மீதான அணுகுமுறை எப்படி அமைந்துள்ளது?

ஏதாவதொரு தரப்பினரைச் சாடுவதுபோலவும் குறை சொல்வது போலவும்தான் இன்று சாதிப் படம் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் ‘எந்தத் தரப்பையும் புண்படுத்தக் கூடாது’ என்கிற மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தேன்.

ஏனென்றால் நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். இதில் சாதிய வன்மத்தைத்தான் சித்தரிக்க வேண்டுமே தவிர, அதை எந்தத் தரப்போடும் அடையாளப்படுத்துவது நம் வேலையல்ல. அது இந்தக் கதைக்கு அவசியமற்றது.

இந்தக் கதைக்குள் மகேந்திரனைப் பொருத்த வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

மகேந்திரன் வெளியாள் கிடையாது. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்து பார்த்து வருகிறோம். இவர் நம்ம பையனாச்சே…! என்று பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டுவிடும் துறுதுறுப்பான ஆள். எப்படிப்பட்டக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாக மாறிவிடுவார்.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதியின் சின்ன வயது கேரக்டருக்கு இவரை அழைத்து நடிக்க வைத்தார் லோகேஷ். இந்தப் படத்துக்கு மகேந்திரனின் ரகளையான நவரச நடிப்புத் தேவைப்பட்டது. அதனால்தான் அவரைத் தேர்வு செய்தேன். அவருடைய நண்பர்களாக அவருக்கு இணையான கதாபாத்திரங்களில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த நோபில் ஜேம்ஸ், சமுக வலைதளப் பிரபலமாக இருக்கும் மாரி ஆகிய இருவரும் வருகிறார்கள்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் காவ்யா அறிவுமணி. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் புகழ்பெற்றவர். மற்றொருவர் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் ஆரத்தி. எனது முதல் படத்தின் தொழில்நுட்பக் குழுவினரைப் பிரிய மனமில்லை. அவ்வளவு திறமையானவர்கள். நாங்கள் அனைவரும் இந்தப் படத்திலும் மீண்டும் இணைந்திருக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்