வியாழனுக்கு 92 நிலவுகள்!

By திலகா

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோள் வியாழன். இது சுழலும் மேகங்களால் மூடப்பட்டிருக்கிறது. வியாழன் கோளில் பல நூற்றாண்டுகளாகப் புயல்கள் மையம் கொண்டுள்ளன. அதனால்தான் வியாழன் கோள் மீது சிவப்பு வண்ணங்கள் தெரிகின்றன.

வியாழன் மிகப் பெரிய கோளாக இருந்தாலும் திடமான மேற்பரப்பைக் கொண்டிருக்கவில்லை. வியாழனின் மேற்பரப்பு வாயுக்களால் ஆனது. ஆனால், வியாழனின் உள்பகுதி பூமி அளவுக்குத் திடமான பகுதியைக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சனிக்கு மட்டுமின்றி வியாழன் கோளுக்கும் வளையங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நன்றாகப் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளன.

வியாழன் மிகவும் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியத்தால் ஆனது.
வியாழனில் ஒரு நாள் என்பது புவியின் 10 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. வியாழனில் ஒரு வருடம் என்பது 11.8 புவி ஆண்டுகள்.

கோள்களிலேயே சனிக்குதான் 83 நிலவுகள் இருந்தன. 80 நிலவுகளுடன் வியாழன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது மேலும் 12 நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் வியாழன் 92 நிலவுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

வியாழன் சூரியனில் இருந்து ஐந்தாவது கோள். செவ்வாய், சனி ஆகியவை வியாழனின் பக்கத்து கோள்கள்.

பழங்காலத்திலிருந்தே வியாழன் கோளை மனிதர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் இல்லாமலேயே வியாழனைப் பார்க்க முடியும்.

வியாழனைச் சுற்றியும் வியாழனைக் கடந்தும் சில விண்கலங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. பயனியர் 10, 11, வாயேஜர் 1, 2, காசினி, நியூ ஹொரைசன்ஸ், ஜூனோ போன்ற விண்கலங்கள் மூலம் வியாழன் கோள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE