போட்டித் தேர்வு எழுதுவது என்று முடிவெடுத்துள்ள ஒரு மாணவர் தனது தயாரிப்பை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கட்டம். எல்லாப் பயணங்களும் நமது முதல் காலடியிலிருந்துதான் தொடங்குகின்றன. போட்டித்தேர்வுக்கான தயாரிப்பும் அப்படியே. இளங்கலை, முதுகலையில் என்ன முதன்மைப் பாடத்தைப் படித்திருக்கிறோமோ அந்தப் பாடத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவது சுலபமானது.
முதலாவது பாடம்
பொதுவாகத் தேர்வாணையங்கள் நடத்தும் பட்டப்படிப்பு கல்வித் தரத்திலான தேர்வுகளின் பாடத்திட்டம் என்பது வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல், திறன் அறிதல், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த ஏழெட்டுப் பாடங்களில் ஏதோ ஒன்றிலிருந்துதான் மாணவர்கள் படிக்கத் தொடங்க வேண்டும். அந்த முதலாவது பாடம் எது?
எல்லாப் பாடங்களையும் ஒருசேரப் படிக்கலாம் என்றும் திட்டமிடலாம். ஆனால், எல்லாப் பாடங்களையும் படித்துப் புரிந்துகொண்டு அனைத்திலுமே போதுமான மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம் என்று திட்டமிடுவது எப்போதும் பலனளிப்பதில்லை. வரலாறு படித்த ஒரு மாணவர் வரலாறுக்கும் அறிவியலுக்கும் ஒரே மாதிரி நேரம் ஒதுக்கிப் படிக்க நினைக்கலாம். ஆனால், சரித்திரப் பாடத்தில் அவரால் எளிமையாகப் பெற்றுவிடக்கூடிய மதிப்பெண்களை அறிவியலில் அவர் சிரமப்பட்டுத்தான் பெற வேண்டியிருக்கும்.
அறிவியலில் பட்டம் பெற்ற ஒரு மாணவர் வரலாறு படிப்பதும் அப்படித்தான். விரிவான பின்புலங்களை அறிந்துகொள்ளாமல் ஆண்டுகளை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாகவே இருக்கும். முக்கிய வரலாற்றுச் சம்பவங்களைக் காலவரிசைப்படுத்தும் வகையிலான கேள்விகளும் தற்போது தேர்வில் கேட்கப்படுகின்றன. எனவே, வரலாற்று நிகழ்வுகளும் அவை நடந்த ஆண்டுகளும்கூட முக்கியமானவை.
ஒரு மாணவர் போட்டிக்காக ஏழெட்டுப் பாடங்களைப் படித்தாக வேண்டும் என்ற நிலையில் முதலில் தனக்கு நன்கு தெரிந்த பாடத்திலிருந்து தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவதுதான் சிறந்தது. பொருளாதாரம், வணிகவியல் படித்த மாணவர்கள் முதலில் பொருளாதாரப் பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கலாம். அதைப் போல சட்டம், அரசியல் படித்த மாணவர்கள் அரசியலமைப்பிலிருந்து தங்களது தயாரிப்பைத் தொடங்கலாம்.
பொறியியல் துறை படித்த மாணவர்கள் கணக்கு, திறனறிதல் பாடங்களில் இயல்பாகவே வாகை சூடிவிடுகிறார்கள். எனவே, ஒவ்வொரு மாணவரும் தனக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்த ஒரு பாடத்தை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வதால் குறைந்தபட்ச மதிப்பெண்களை உறுதிப்படுத்திக்கொள்கிறார். அதற்குப் பிறகு அவர் படிக்கும் மற்ற பாடங்கள், அவருக்குக் கிடைக்கும் மதிப்பெண்களை அதிகரிக்கச்செய்கின்றன.
பின்தங்கினாலும் வெற்றி பெறலாம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் விருப்பப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவந்தது. அப்போது தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதற்கேற்ப தங்களது கல்லூரிப் படிப்புகளையும் பாடங்களையும் தேர்ந்தெடுத்தார்கள். தற்போது யூ.பி.எஸ்.சி.யில் விருப்பப் பாடங்கள் இல்லை.
ஆனாலும், கல்லூரியில் படித்த ஒரு படிப்பு, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களை அரணாக நின்று காக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முக்கியப் பதவிகளுக்கான தேர்வுகள் பட்டப்படிப்பு தரம் என்ற நிலைகளில் மட்டுமே நடத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சில பதவிகளுக்கான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலையும் இருக்கிறது.
எனவே, பொதுப்போட்டியில் பின்தங்கிய ஒரு மாணவர் தனிப்பாடத்தில் நடக்கும் போட்டியில் எளிதாக வெற்றிபெற முடியும். உதாரணத்துக்கு, பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர் குடிமைப்பணி தேர்வு எழுதலாம். அவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தால் ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியப் பொருளாதாரத் துறைப் பணிகளுக்கான தேர்வுகளையும் எழுதலாம்.
விரைவும் தெளிவும்
சமீபத்தில் அறிமுகமான ஒரு புதிய பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்ன செய்வது? அவர்கள் தங்களது பாடத்திட்டத்தோடு தொடர்புடைய ஒரு மூல பாடத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாம். மொழிப் பாடங்களைப் படிக்கும் மாணவர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போது, இந்த வழிமுறை அவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறையில் ஒரு அபாயமும் இருக்கிறது. நாம் ஏற்கெனவே படித்த பாடத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்துக்கொண்டிருப்போம். புதிய பாடங்களைப் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் ஏற்படாது. இந்த மனநிலைக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது. முன்னுரிமை கொடுக்கும் பாடங்களை எவ்வளவு விரைவாகவும் விரிவாகவும் தெளிவாகவும் படித்து முடிக்கிறோமோ அப்போதுதான் பயணத்தின் முதலடியை சரியாக எடுத்துவைப்போம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago