188 ஆண்டுகள் வாழ்ந்த நட்சத்திர ஆமை!

By ஆதன்

ஆமைகள் நீண்டகாலம் வாழக்கூடியவை என்றாலும் அந்த ஆமைகளிலேயே நீண்ட காலம் வாழக்கூடியவை மடகாஸ்கர் நட்சத்திர ஆமைகள் (Radiated Tortoise) . ஒரு மடகாஸ்கர் நட்சத்திர ஆமை 188 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறது! ஆமைகளிலேயே மிக அழகானதாகக் கருதப்படுவதால், இந்த நட்சத்திர ஆமைகள் அதிக அளவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

சாதாரண ஆமைகளைப் போல உடல் அமைப்பைக் கொண்டிருந்தாலும் மடகாஸ்கர் நட்சத்திர ஆமைகளின் ஓடு வித்தியாசமானவை. ஓட்டில் கூம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. அந்தக் கூம்புக்குள் கறுப்பும் மஞ்சளும் கலந்த கோடுகளே ‘நட்சத்திரம்’ போன்ற தோற்றத்தைத் தருவதால், ‘நட்சத்திர ஆமைகள்’ என்கிற பெயரைப் பெற்றுள்ளன. தலையும் கால்களும் மஞ்சளாக இருக்கின்றன. இந்திய நட்சத்திர ஆமைகளுக்கும் மடகாஸ்கர் நட்சத்திர ஆமைகளுக்கும் ஓட்டின் கூம்பு அமைப்பிலும் நிறத்திலும் அளவிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

188 ஆண்டுகள் வாழ்ந்த மடகாஸ்கர் நட்சத்திர ஆமையின் பதப்படுத்தப்பட்ட உடல்
நட்சத்திர ஆமையின் ஓடு
இந்திய நட்சத்திர ஆமை

முதிர்ந்த மடகாஸ்கர் நட்சத்திர ஆமை 41 செ.மீ. நீளமும் வரை 16 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்திய பிறகு, பெண் நட்சத்திர ஆமை குழியைத் தோண்டி, 3 முதல் 12 முட்டைகள் வரை இடும். பிறகு மண்ணால் மூடிவிடும். 5 முதல் 8 மாதங்களுக்குள் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். சின்னஞ்சிறு குஞ்சுகளின் ஓட்டில்கூட நட்சத்திர அடையாளம் இருக்கும்.

இலைகள், புற்கள், பூக்கள், பழங்கள், கள்ளிகள் போன்றவற்றை உணவாக்கிக்கொள்கின்றன. காய்ந்த இலைகளையும் சில நேரம் சாப்பிடுவது உண்டு.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பூங்காவில் பிக்கிள் என்கிற 90 வயது நட்சத்திர ஆமை தற்போது மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறது. 36 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூங்காவுக்கு வந்த பிறகு, முதல் முறையாக தந்தையாகியிருக்கிறது பிக்கிள். அந்தப் பூங்காவிலேயே மிக வயதான விலங்கு இந்த நட்சத்திர ஆமைதான்.

நட்சத்திர ஆமைகள் மருத்துவத்துக்காகவும் உணவுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. அதனால் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE