உலக ‘வாய்’ சுகாதார நாள் - மார்ச் 20

By திலகா

மனிதர்களுக்கு ‘வாய்’ ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய், பற்களில் பிரச்சினை என்றால், அது வேறு நோய்களையும் உருவாக்கக் கூடும். எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வேர்ல்ட் டென்டல் ஃபெடரேஷனும் உலக சுகாதார நிறுவனமும் ‘மார்ச் 20 - உலக வாய் சுகாதார நாள்’ என அறிவித்துள்ளன. இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20 அன்று வாய் சுகாதார விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக மக்கள் தொகையில் 75% பேர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 51.4 கோடி குழந்தைகள் பால் பற்களிலேயே பல் சொத்தையுடன் இருக்கிறார்கள்.

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் எதையும் சாப்பிடக் கூடாது. ஒரு பிரஷ் முழுவதும் பற்பசையை வைத்து, பல் துலக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிதளவு பற்பசையைப் பயன்படுத்தினாலே போதுமானது.

பற்களின் மேற்பகுதி, உள்பகுதி, நாக்கு என நிதானமாகப் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களின் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றுவது மிக முக்கியம். தண்ணீரை அடிக்கடி பருகினால், பற்களில் தங்கியிருக்கும் உணவுத்துகள்கள் சுத்தமாகிவிடும்.

காலையில் ஒரு முறை, இரவு ஒரு முறை என ஒரு நாளைக்கு இரு வேளை பற்களைச் சுத்தம் செய்வது அவசியம்.

அதிக சூடான பொருளையோ அதிக குளிர்ச்சியான பொருளையோ சாப்பிடக் கூடாது.

பழச்சாறு பருகுவதைவிட, பழங்களை கடித்துச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து மிக்கப் பச்சைக் காய்களையும் சாப்பிடலாம்.

சாக்லெட் போன்ற இனிப்புப் பொருள்களை அதிகம் சாப்பிட்டால் பற்களுக்கும் உடல் நலத்துக்கும் கேடு என்பதால், அவற்றைக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.

குளிர்பானங்களை அதிகம் குடிக்க வேண்டாம்.

ஆண்டுக்கு இரண்டு அல்லது ஒரு முறையாவது பல் மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

பற்களையும் வாயையும் பாதுகாப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE