துருவக்கரடியின் தோல் என்ன நிறம்? - ஸ்நேகா

By செய்திப்பிரிவு

துருவக் கரடிகள் பெரும்பான்மையான நேரத்தை ஆர்க்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறைகளிலேயே கழிக்கின்றன. ஏனென்றால் இவை உணவுக்குக் கடலில் வாழும் விலங்குகளையே நம்பியிருக்கின்றன.

குளிரைத் தாங்கும் விதத்தில் துருவக்கரடிகளுக்குத் தடிமனான ரோமங்கள் உடல் முழுவதும் இருக்கின்றன. இவை பார்க்கும்போது வெள்ளையாகத் தெரிந்தாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. ஒளி ஊடுருவக்கூடிய நிறமற்ற ரோமங்களாக உள்ளன. ஒளி ரோமங்களில் பிரதிபலிப்பதால் வெள்ளையாகக் காட்சியளிக்கின்றன. துருவக்கரடிகளின் தோல் கறுப்பாக இருக்கும்.

ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தை நீந்துவதிலேயே செலவிடுகின்றன இந்தத் துருவக் கரடிகள். ஒரு பனிப்பாறையிலிருந்து இன்னொரு பனிப்பாறைக்குச் செல்வதற்கு மணிக்கணக்கில் நீந்துகின்றன. நீந்துவதற்கு ஏற்ற வகையில் அகலமான பாதங்கள் அமைந்திருக்கின்றன.

ஒரு துருவக்கரடி தன் வாழ்க்கையில் பாதி நேரத்தை உணவுக்கான வேட்டைகளில் செலவிடுகிறது. அப்படிச் செலவிட்டாலும் வேட்டை அரிதாகவே வெற்றி பெறுகிறது. இவற்றின் முக்கியமான உணவு சீல்கள். அவற்றை வேட்டையாடுவதற்காகப் பனியில் இருக்கும் துளைகளுக்கு அருகே துருவக்கரடிகள் காத்திருக்கின்றன. கடலுக்குள் இருக்கும் சீல்கள் சுவாசிப்பதற்காக மேற்புறத்துக்கு வரும்போது, சட்டென்று அவற்றை வேட்டையாடிவிடுகின்றன. சில நேரம் சீல்களைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் உண்டு. சீல்களைத் தவிர, சிறிய பாலூட்டிகள், பறவைகள், முட்டைகள் போன்றவற்றையும் துருவக்கரடிகள் உணவாக்கிக்கொள்கின்றன.

ஆண் துருவக்கரடி சுமார் 10 மனிதர்களின் எடைக்கு இணையாக இருக்கும். அதாவது 800 கிலோ எடையுடன் இருக்கும். பெண் துருவக்கரடிகள் ஆணைவிடச் சிறியவை. கரடி இனங்களிலேயே துருவக்கரடிகள்தாம் மிகப் பெரியவை.

வாசனை அறியும் திறன் துருவக்கரடிகளுக்கு நன்றாக இருக்கும். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இரையையும் கண்டுபிடித்துவிடும். ஒரு மீட்டர் தடிமனான பனிப்பாறைக்கு அடியில் இருக்கும் சீலையும் கண்டுபிடித்துவிடும் ஆற்றல் உண்டு.

காலநிலை மாற்றம் துருவக்கரடிகள் உயிர்வாழ்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எண்ணெய், எரிவாயுத் தொழிற்சாலைகள் ஆர்க்டிக் பகுதியில் அமைக்கப்பட்டால், எண்ணெய்யும் கழிவுகளும் கடல் பகுதியில் சேரும். துருவக்கரடிகளைப் பாதிக்கும். பருவநிலை மாற்றத்தால் கடல் பனி உருகுவதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, துருவக்கரடிகள் மனிதர்களைத் தாக்கக்கூடும். அதனால் துருவக்கரடிகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE