சிறந்த 10 பெண்ணியப் படங்கள்

By ஆர்.சி.ஜெயந்தன்

பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாக (Female protagonist) முன்னிறுத்தும் ‘பெண் மையக் கதைக் கரு’க்களைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துள்ளன. ஆனால், அவற்றில் எத்தனை படங்கள் பெண்ணிய சினிமாக்களாக இருந்தன என்பது முக்கியமான கேள்வி. இதற்கு விடையாகும் பத்து படங்கள் எவையென அறிவோம்.

1. பணம் கிடைக்கிறதே எனக் குத்துச் சண்டைப் பயிற்சிக்கு வருகிறாள் ஒரு வறிய குடும்பத்தின் பெண். விளையாட்டுத் துறையில் மலிந்திருக்கும் அரசியலுக்கு எதிராகப் போராடுகிறார் அவளுடைய பயிற்சியாளர். தனது உழைப்பால் விளையும் வெற்றியின் வழியாக அந்த அரசியலை அவள் நாக் அவுட் செய்யும் படம் 2016இல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச் சுற்று’.

2. பெண் மீதான சராசரி மதிப்பீடுகளை அவளது உடல் சார்ந்தும், நடத்தை சார்ந்தும் முன் வைக்கும் சமூகத்துக்குத் தார்மிகக் கோபத்துடன் பாடம் கற்பிக்கும் ஒரு இளம் பெண்ணின் கதை. புறக்கணிப்பின் வலியையும் ஆயுளைக் காவு கேட்கும் நோயையும் ஏற்றுக்கொண்டு கடந்துபோகும் ஒரு வலிமையான பெண்ணை, மன்னிப்பின் ‘அருவி’(2017)யாக வழிந்தோடச் செய்தவர் அறிமுக இயக்குநர் அருண்பிரபு.

3. மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் சுயமாக முடிவெடுக்கும் மதிவதனி என்கிற மாவட்ட ஆட்சியரின் போராட்டமாக வெளிவந்தது ‘அறம்’ (2017). உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் கொடுக்கும் ஆண் மைய அழுத்தங்கள், முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு களமாடி வெல்லும் ஆளுமையாக மதிவதனியைப் படைத்தவர் கோபி நயினார்.

4. சமையலறை, கணவர், அவருடைய குடும்பத்தார், குழந்தைகள் என்கிற வழக்கமான ஆடுகளத்துக்குள் அல்லாடும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண் விஜி. கணவனின் விலகலற்ற அன்பைப் பற்றிக்கொண்டு, தன்னிடமிருக்கும் தனித்திறன் வழியே ஒரு வெற்றிகரமான வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயரம் தொடுகிறார். ‘காற்றின் மொழி’ 2019இல் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்தது.

5. ஆண்களுக்கான விளையாட்டாகப் பார்க்கப்பட்ட கிரிக்கெட்டில் புயல்போல் சுழற் பந்து வீசி, தேசிய வீராங்கனையாகும் கனவை வரித்துக்கொள்கிறார் கிராமத்துப் பெண் ஐஸ்வர்யா. ஊர் வாய்க்குப் பயந்து பெற்ற தாயே தடுக்க, தந்தையின் வழி பெற்ற தன் கனவை, அவர் தரும் அளவற்ற ஆதரவின் துணைகொண்டு வென்றெடுப்பதுதான் ‘கனா’. அருண்ராஜா காமராஜின் எழுத்து, இயக்கத்தில் 2018இல் வெளியானது.

6. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான பிரச்சினைகளில் இயற்கை உபாதை குறித்துப் பேசிய முதல் தமிழ் படம் ‘மிக மிக அவசரம்’ (2019). பிரபலம் ஒருவருக்கான பாதுகாப்புப் பணியில் சாலையில் நிறுத்தி வைக்கப்படும் மகளிர் காவலர் சாமந்தி, சிறுநீர் கழிக்கப் போக்கிடமோ, அவகாசமோ இல்லாமல் கால் கடுக்க நின்றபடி எதிர்கொள்ளும் அவஸ்தையைப் பார்வையாளர்களுக்குக் கடத்திய படம். எழுத்து, இயக்கம் சுரேஷ் காமாட்சி.

7. வெளிநாட்டில் வேலைக்குப் போய் இறந்துபோகிறார் கணவர். அவரது சடலத்தை மீட்டுத் தாயகம் கொண்டு வர அரசு இயந்திரத்தின் அத்தனை முகாம்களுக்கும் ஓய்வின்றி ஓடுகிறாள் அரியநாச்சி. ஒரு சாமானிய, வறண்ட கிராமத்தின் பெண் தானே என அலட்சியப்படுத்துபவர்களைக் கடந்து சென்று, நாட்டின் தலைநகர் வரைபோய் போராடி வெல்கிறாள் பெ.விருமாண்டி படைத்த இந்த அரியநாச்சியை ‘க/பெ. ரணசிங்கம்’ (2020) படத்தில் காணலாம்.

8. எண்பதுகளின் சரஸ்வதி, தொண்ணூறுகளின் தேவகி, புத்தாயிரத்தின் சிவரஞ்சனி ஆகிய மூவரும் மூன்று கால கட்டங்களைச் சேர்ந்த பெண்கள். அவர்கள் தற்சார்பின் வழியாக ஒடுக்குதலிருந்து விடுதலைபெற்று சுவாசிக்கும் கதையே ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. வாழ்க்கை முறை மாறினாலும் காலம்தோறும் பெண்களுக்கான வெளி ஆண்களின் உலகில் சிதறுண்டு கிடப்பதை தயங்காமல் சொன்ன ஆந்தாலஜி திரைப்படம். இயக்கம் வசந்த் சாய்.

9. காதலனின் சாதி ஆணவத்தால் காதலில் முறிவைச் சந்திக்கிறாள் ரெனே. அரசியல், சமூகத் தெளிவுகளோடு, தான் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்திலுமிருந்து ஒரு சுயாதீனப் பெண்ணாகத் தன்னைத்தானே மீட்டெடுத்துச் செதுக்கிக் கொண்டே தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறாள். அவளது இடை நில்லா கலைப் பயணமே ‘நட்சத்திரம் நகர்கிறது’ (2022) படம். பா.இரஞ்சித் இயக்கம்.

10. சமைத்தல், துவைத்தல், பாத்திரம் துலக்குதல், கணவனின் பாலியல் உணர்வுக்கு வடிகாலாக இருத்தல் என்கிற இந்தியக் குடும்ப அமைப்பின் ‘லூப்’ தருணங்களில் தொடர்ந்து உழலும் ஒரு நடுத்தர வர்க்கப் புதுமணப் பெண்ணின் கட்டுடைப்பே ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’. தனக்குரிய அத்தனை அபிலாஷைகளும் பெண்ணுக்கும் உரியவை என்பதை உணராத கணவனையும் அவனது பெற்றோரையும் விட்டு விடுதலையாகும் பெண்மையின் சுயம். மலையாளத்திலிருந்து தமிழில் மறுஆக்கம் செய்தவர் ஆர்.கண்ணன்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்