திரை பாடம்: நிழலில் இருந்து நட்சத்திரத்துக்குச் சென்றவன்!

By ந.வினோத் குமார்

‘நா

ம் நட்சத்திரத் துகள்களால் உருவாக்கப்பட்டவர்கள்!’ என்று பிரபல அறிவியலாளர் கார்ல் சாகனின் வரி ஒன்று உண்டு.

தன்னை முன்மாதிரியாகக் கொண்ட ரோஹித் வெமூலா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இப்படியிருக்கும் என்று, கார்ல் சாகன் நினைத்திருக்க மாட்டார்: ‘நிழலில் இருந்து நட்சத்திரத்துக்கு…’.

கார்ல் சாகனைப் போல அறிவியல் எழுத்தாளராக விரும்பியவர் வெமூலா. ஆனால், அவரது கனவுகள், சாதியத் தீயால் சாம்பலாக்கப்பட்டுவிட்டன. சாதியை ‘தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை’ என்று அழைத்தவர், கல்வி நிலையங்களில் நடைபெறும் சாதியத் தாக்குதல்களுக்குச் சாட்சியாய் நிற்கிறார்!

நிறுத்தப்பட்ட நிதியுதவி

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ரோஹித் வெமூலா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவந்தார். பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியாக ஒவ்வொரு மாதமும் வழங்கும் ரூ.25 ஆயிரத்தைப் பெற்று, தனது படிப்பை மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும், இதர அடிப்படைத் தேவைகளுக்காகவும் ‘அம்பேத்கர் மாணவர் சங்கம்’ மூலம் குரல் கொடுத்துவந்தார். மேலும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட யாகூப் மேமனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, டெல்லி பல்கலைக்கழகத்தில் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தைத் திரையிட்டதற்கு எதிராக இந்துத்துவ வாதிகளின் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் வெமூலா, போராட்டம் நடத்தினார். இதனால் அவர் பெற்று வந்த நிதியுதவி, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், பல்கலைக்கழகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால், நண்பர்களிடமிருந்து கடன் பெற்று தனது படிப்பைத் தொடர்ந்துவந்த வெமூலா, அவரது நண்பர்கள் சிலருடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து வெமூலாவும், அவருடைய நண்பர்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினர். இந்நிலையில், 2016 ஜனவரி 17-ம் தேதி விடுதி அறை ஒன்றில் வெமூலா தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

தடைசெய்யப்பட்ட படம்

அவரது இறப்புக்குப் பின் நடந்த சம்பவங்களை, பி.என்.ராமச்சந்திரா எனும் ஆவணப்பட இயக்குநர் தன் கேமராவில் பதிவுசெய்தார். அந்தக் காட்சிகளைக் கொண்டு ‘தி அன்பேரபிள் பீயிங் ஆஃப் லைட்னெஸ்’ (‘The Unbearable Being of Lightness’) எனும் தலைப்பில் ஒரு ஆவணப்படமாகத் தயாரித்தார்.

வெமூலாவின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்பத்தைச் சந்தித்து, அவரின் வாழ்க்கையை ‘ரோஹித் வெமூலா – ஆன் அன்ஃபினிஷ்ட் போர்ட்ரைட்’ (‘Rohit Vemula- an unfinished portrait’) எனும் தலைப்பில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாக எழுதினார் பத்திரிகையாளர் சுதீப்தோ மொண்டால். அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளையும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெமூலாவின் அஞ்சலிக் கூட்டத்தில் ஃபைஸ் அகமது ஃபைஸ் எழுதிய ‘இன்திசாப்’ (‘Intisaab’) எனும் முற்றுப் பெறாத கவிதையை ‘ஹிராவால்’ எனும் கலைக்குழு பாடிய காட்சிகளையும் கொண்ட இந்தப் படம் சுமார் 45 நிமிடங்கள் ஓடக் கூடியது.

வெமூலாவின் தற்கொலைக் கடிதத்தை நடிகர் சவுமேஷ் பங்கேரா வாசிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தை, இந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தடை செய்யப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள நமக்குப் பெரிய அறிவு தேவையில்லை. அதனால் என்ன, இந்தப் படத்தை இணையத்தில் பதிவேற்றிவிட்டார் இயக்குநர் ராமச்சந்திரா.

நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் ‘தி அன்பியரபிள் லைட்னெஸ் ஆஃப் பீயிங்’ எனும் நாவல் ஒன்றின் தலைப்பைக் கொஞ்சம் மாற்றிப் போட்டால், இந்த ஆவணப்படத்தின் தலைப்பு கிடைக்கிறது. சாதிய, மத ஒடுக்குமுறை நிகழ்வுகள் அதிகஅளவில் நடைபெற்று வரும் இந்நாட்களில், மதவாத சக்திகளின் கோரதாண்டவத்தை இதுபோன்ற படைப்புகள் மூலம் நம் மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. மிலன் குந்தேராவே சொல்வது போல, ‘அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமே!’

படத்தைக் காண: https://vimeo.com/181043555

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்