இந்திய கிரிக்கெட்டில் இன்று (27-02-2011): உலகக் கோப்பையில் இந்தியாவின் ஒரே ‘டை’ போட்டி!

By மிது கார்த்தி

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 40 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி ‘டை’யில் முடிந்திருக்கின்றன. இதில் இந்திய அணி 9 போட்டிகளில் ‘டை’யைச் சந்தித்திருக்கிறது. இந்த 9 போட்டிகளில் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் உண்டு. 2011 உலகக் கோப்பையில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்தித்த அந்தப் போட்டிதான் அது. ‘டை’யில் முடிந்த அந்தப் போட்டி 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (27-02-2011) நடைபெற்றது.

உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘டை’ அரிதாகவே பதிவாகியிருக்கிறது. இதுவரை நடைபெற்றுள்ள 12 உலகக் கோப்பைத் தொடர்களில் 4 போட்டிகள் மட்டுமே ‘டை’யில் முடிந்திருக்கின்றன. 2011 உலகக் கோப்பையில் ஒரே ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது. அந்தப் போட்டி பெங்களூருவில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது.

2011 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சச்சின் டெண்டுல்கரின் சத உதவியோடு 338 ரன்களைக் குவித்தது. பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, சீராக ரன்களைச் சேர்த்து வந்தது. குறிப்பாகத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ், நேர்த்தியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள என்று இருந்தபோது, 158 ரன்களை விளாசியிருந்த ஆண்ட்ரு ஸ்ட்ராஸ், ஜாகீர் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இந்த அவுட்தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு 325 ரன்களை எட்டுவதற்குள் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் கிரீம் ஸ்வானும் அஜ்மல் ஷெசாட்டும் இணைந்து வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து அணியைக் கொண்டு வந்து நிறுத்தினர். ஆனால். அந்த அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்களையே எடுக்க முடிந்தது. இதன்மூலம் அந்தப் போட்டி ‘டை’யில் முடிந்தது. இந்த ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறை வைக்காமல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘த்ரிலிங்’ விருந்தை அளித்தது. 1999இல் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான அரையிறுதிப் போட்டி ‘டை’ ஆனதை இது நினைவுபடுத்தியது.

இந்தப் போட்டி ‘டை’ ஆகியிருந்தாலும் 2011 உலகக் கோப்பையை எம்.எஸ், தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது நினைவுக் கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE