1990-களின் மத்தியப் பகுதி. உலகில் இணையம் காலூன்றத் தொடங்கிய காலகட்டம். இணையப் பக்கங்கள் பெருகிக்கொண்டிருந்தன. தகவல்கள் குவிந்துகொண்டிருந்தன. ஆனால், மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இணையத்தில் தேடிப் பெறுவது கடினமாக இருந்தது.
ஏனென்றால், இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் சிதறிக்கிடந்தன. ஒவ்வொரு தளமும் ஒன்றோடொன்று தொடர்பற்று இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாகூ, அல்டாவிஸ்டா (AltaVista) தேடுதளங்கள் அறிமுகமாகின. இவை, இணையத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை தேடுவதை சற்று எளிமைப்படுத்தின. எனினும், இணையத்தைக் கையாளுவதற்கு இந்தத் தளங்கள் போதுமானதாக இல்லை.
இந்தச் சூழலில்தான் கூகுள் அறிமுகமானது. ஒரு தகவல் தொடர்புடைய வெவ்வேறு இணையப் பக்கங்களை கூகுள்அல்காரிதம் ஒருங்கிணைத்தது. அதாவது, ஒரு குறிச்சொல்லை உள்ளிட்டால், அந்தக் குறிச்சொல் தொடர்பாக இணையத்தில் பதியப்பட்டிருக்கும் தளங்களை கூகுள் வரிசைப்படுத்தியது. ஒரே தேடலில் தகவல்களை விரல் நுனிக்கு கூகுள் கொண்டுவந்தது. இணைய செயல்பாட்டில் இதுமிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
1998-ல் கூகுள் அறிமுகமானபோது அதன் செயல்பாடுகளை எப்படி உலகம் வியந்து பார்த்ததோ, அதைவிடவும் வியப்புக்குரிய ஒரு புதிய தருணத்தை உலகம் இப்போது எதிர்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓப்பன் ஏஐ ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அறிமுகப்படுத்தப்பட்டு 3 மாதங்களுக்குள்ளாகவே 10 கோடிக்கு மேற்பட்டோர் சாட்ஜிபிடியில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இணைய உலகில் பெரும் சாம்ராஜ்யமாக இருந்துவந்த கூகுளுக்கு சாட்ஜிபிடி சவாலாக உருவெடுத்துள்ளது.
அப்படி என்ன செய்கிறது சாட்ஜிபிடி? -
கூகுள் என்ன செய்யும்? கூகுளில் நாம் ஒரு குறிச்சொல்லை உள்ளிட்டால் அது தொடர்பான தளங்களை நமக்குவரிசைப்படுத்தித் தரும். உதராணத்துக்கு, கிங்பிஷர் விஜய்மல்லையா என்று உள்ளிட்டால், அவரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய இணையப் பக்கங்களை கூகுள் வரிசைப்படுத்தும்.
அதுவே சாட்ஜிபிடியில் உள்ளீடு செய்தால் விஜய் மல்லையா யார், அவர் எங்கு பிறந்தார், ஏன் அவரை இந்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது என அவரைப் பற்றி அனைத்துத் தகவலையும் தொகுத்து நமக்கு வழங்கிவிடுகிறது. சாட்ஜிபிடியின் தனித்துவம் என்னவென்றால், அது மனிதர்கள் போல் உரையாடல் மொழியைக் கையாளுகிறது.
நமக்குத் தேவையான விவரங்களை குறிச்சொல்லாக இல்லாமல், கேள்வியாகவே நாம் சாட்ஜிபிடியில் உள்ளீடு செய்துகொள்ளலாம். ஏன் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார் என்று உள்ளிட்டால், அவர் தப்பிச் சென்றதற்கான காரணங்களை அடுக்குகிறது. இப்படியாக பல்வேறு துறைகளைப் பற்றி உடனுக்குடன் சாட்ஜிபிடி பதில் வழங்குகிறது. விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை.
ஒரு தலைப்பைக் கொடுத்து அதில் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டால், கொடுத்துவிடுகிறது. ஒரு கட்டுரையைக் கொடுத்து அதில் எழுதப்பட்டிருப்பதை சுருக்கமாகத் தருமாறு உள்ளீடு செய்தால், உடனடியாக செய்து தந்து விடுகிறது. நிரல் (coding) எழுதச் சொன்னால், எழுதுகிறது. நாம் எழுதிய நிரலை உள்ளீடு செய்து அதில் எங்கு பிரச்சினை இருக்கிறது என்று கேட்டால், பிழையான இடத்தைச் சுட்டிக்காட்டி அதைத் திருத்தவும் செய்கிறது. கவிதையும் எழுதுகிறது.
இதுமட்டுமல்ல, ஒரு பத்தியை உள்ளீடு செய்து, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் போல், இந்தப் பத்தியை மாற்ற வேண்டும் என்று கூறினால், உடனடியாக அந்தப் பத்தியை ஹெமிங்வேயின் நடையில் மாற்றித் தருகிறது. அதே பத்தியை ஒரான் பாமுக் எழுதினால் எப்படி இருக்கும் என்று கேட்டால், ஓரான் பாமுக்கின் எழுத்து நடையில் அந்தப் பத்தியை மாற்றிக் காட்டுகிறது. அந்த அளவுக்கு நுண்ணியதாக சாட்ஜிபிடி இயங்குகிறது.
சாட்ஜிபிடி எப்படி செயல்படுகிறது? - ஜிபிடி என்றால் ஜெனரேடிவ் பிரீ-டிரெயின்ட் டிரான்ஸ்ஃபாமர் (Generative Pre-Trained Transfomer) என்று அர்த்தம். அதாவது, ஜெனரேடிவ் என்பது, மனித உரையாடலைப் போல பதிலை உருவாகக்கூடிய ஆற்றலையும், பிரீ-டிரெயின்ட் என்பது இணையத்தில் உள்ள தரவுகளை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பது முன்பே பயிற்றுவிக்கப்பட்டதையும், டிரான்ஸ்ஃபாமர் என்பது அலசிய தரவுகளை பதிலாகஅளிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் குறிப்பது ஆகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் சாட்ஜிபிடிக்கு அடிப்படை. செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு முந்தைய மென்பொருளின் செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். செயற்கை நுண்ணறிவை விளக்க வழக்கமாகச் சொல்லப்படும் உதாரணம் இது.
ஸ்டாக்ஃபிஷ் வழமையான செயல்திறன்கொண்ட மென்பொருள். ஸ்டாக்ஃபிஷ்ஷில் உலக அளவில் உள்ள முன்னணி செஸ் வீரர்களின் நகர்வுகள் உள்ளீடு செய்யப்பட்டன. அந்த நகர்வுகளைக் கற்றுக்கொள்ள கணிசமான காலத்தை ஸ்டாக்ஃபிஷ் எடுத்துக்கொண்டது.
இதன் பிறகு, ஸ்டாக்ஃபிஷ்ஷுக்கும் உலக செஸ் சாம்பியன்களுக்கும் இடையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த உலகச் சாம்பியன்களை ஸ்டாக்பிஃஷ் எளிமையாக தோற்கடித்தது.
ஸ்டாக்ஃபிஷ்ஷுடன் போட்டியிட ஆல்ஃபாஜீரோ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கப்பட்டது. ஸ்டாக்ஃபிஷ் போல் அல்லாமல் ஆல்ஃபாஜீரோவுக்கு செஸ் விளையாட்டின் விதிகள் மட்டும் உள்ளீடு செய்யப்பட்டன. அந்த விதிகளை நான்கே மணி நேரத்தில் அது சோதித்து அறிந்தது.
அவ்வளவுதான். ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டது. 2017-ம்ஆண்டு. ஸ்டாக்ஃபிஷ்ஷுக்கும் ஆல்ஃபாஜீரோவுக்கும் இடையே 100 போட்டிகள் நடத்தப்பட்டன. உலகின் முன்னணி வீரர்களின் நகர்வுகள் உள்ளீடு செய்யப்பட்டிருந்த ஸ்டாக்ஃபிஷ்ஷை, வெறும் செஸ் விதிகளை மட்டுமே உள்ளீடு செய்யப்பட்டிருந்த ஆல்ஃபாஜீரோ, 28 போட்டிகளில் வென்றது. 72 போட்டிகள் டிராவில் முடிந்தன.
ஆனால், ஒரு போட்டியில்கூட ஆல்ஃபாஜீரோ தோற்கவில்லை. ஸ்டாக்ஃபிஷின் நகர்வு எல்லைக்கு உட்பட்டது. அதற்கு உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே தன் நகர்வுகளை மேற்கொள்ளும்.
ஆனால், ஆல்ஃபாஜீரோ அவ்வாறானது அல்ல. வெறும் விளையாட்டு விதிகளை உள்ளீடு செய்ததும் அது அனைத்து சாத்தியங்களையும் கண நேரத்தில் அலசி முடிவெடுக்கும் திறன் பெற்றது. இதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
சாட்ஜிபிடியும் ஒருவகையில் ஆல்ஃபாஜீரோபோலத்தான். சாட்ஜிபிடி மொழி சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் அனைத்தும் சாட்ஜிபிடிக்கு ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டுவிட்டன. இனி புதிதாக பதிவிடப்படும் தகவல்களையும் அது உள்ளீடாகப் பெற்றுக்கொள்ளும்.
நாம் கேட்கும் கேள்விகளின் வாக்கிய அமைப்பை அலசி, அதற்கு தொடர்புடைய தகவல்களை இணையத்தில் உள்ள பாடப்புத்தகங்கள், கட்டுரைகள், இணையதளக் குறிப்புகள் என பலவற்றிலிருந்து திரட்டி, கண நேரத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தி, முழுமையான பதிலாக சாட்ஜிபிடி நமக்கு தருகிறது.
ஒரு பதிலை எப்படி வரிசைப்படுத்த வேண்டும்; பதிலின் முதல் வாக்கியம் எப்படி இருக்க வேண்டும்; எத்தனை வார்த்தைகளில் பத்தி அமைக்க வேண்டும் என்பவை உட்பட அனைத்தும் சாட்ஜிபிடிக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், நாம் செய்யும் உள்ளீடுகளிலிருந்து சாட்ஜிபிடி கற்றுக்கொள்ளும்.
கூகுள், பிளிப்கார்ட் என நாம் பயன்படுத்தும் பல செயலிகளும் அலெக்ஸா போன்ற சாதனங்களும் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனினும், செயற்கை நுண்ணறிவின் சாத்தியத்தை பொதுவெளிக்கு வெளிச்சம்போட்டுக் காட்டி இருப்பது சாட்ஜிபிடிதான்.
என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்? - நாம் சிந்திக்கும் முறை, வேலை செய்யும் முறை, செயல்படும் முறை என அனைத்திலும் சாட்ஜிபிடி பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும். தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை, சுற்றுலா, பொழுதுபோக்கு, விளம்பரம், நுகர்வோர் சேவை உள்ளிட்டவை சாட்ஜிபிடியால் புதிய பரிணாமம் எடுக்க உள்ளது.
தற்போது பலர் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு சாட்ஜிபிடியைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். யாருடைய துணையும் இல்லாமல், மாணவர்கள் சாட்ஜிபிடி மூலம் தங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆசிரியர்களும் சாட்ஜிபிடி மூலம் தங்கள் பாடத்திட்டங்களை செறிவூட்ட முடியும்.
ஆய்வுப் பணிகளுக்கு சாட்ஜிபிடி பேருதவியாக இருக்கும். மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், மக்கள் தங்கள் நோய்கள் குறித்தும், அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சாட்ஜிபிடி மூலம் அறிந்துகொள்ள முடியும்.
மருத்துவ பரிசோதனை முடிவுகளை அலசி, மருத்துவருக்கு ஆலோசனை சொல்லும். விரைவிலேயே மனநல ஆலோசக சேவையில் சாட்ஜிபிடி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறுகின்றனர். நீதித் துறையில் சாட்ஜிடிபி பயன்பாட்டுக்கு வந்தால், நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவிலேயே தீர்ப்பு வழங்க முடியும் என்று கூறுகின்றனர்.
சமீபத்தில் கொலம்பியாவில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் தொழில் திட்டங்களை சாட்ஜிபிடியில் உள்ளிட்டு, ஆலோசனை பெற முடியும். நிரல் எழுதும் வேலையை இனி சாட்ஜிபிடியே கவனித்துக் கொள்ளும் என்கின்றனர்.
சவால்கள்: தற்போதைய நிலையில் சாட்ஜிபிடியில் சில குறைபாடுகள் உள்ளன. சாட்ஜிபிடி வழங்கும் எல்லா பதில்களும் சரியானவை என்று சொல்லிவிட முடியாது. தவறான தகவல்களையும் அது வழங்குகிறது. அடுத்தாக நம்பகத்தன்மை. இணையத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலேயே சாட்ஜிபிடி நமக்கு பதில் வழங்குகிறது.
இணையத்தில் இருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. அதேபோல், 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலானதகவல்கள் மட்டுமே சாட்ஜிபிடிக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அதன் பிறகான நிகழ்வுகள் குறித்து பதில்கள் வழங்குவதில் அது திணறுகிறது. இந்தக் குறைகளை களையும் முயற்சியில் ஓப்பன் ஏஐ இறங்கியுள்ளது.
இவை தொழில்நுட்பரீதியான சவால்கள். சமூகரீதியாகவும் பல சவால்கள் உள்ளன. சாட்ஜிபிடியினால், பல்வேறு துறைகளில் வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் சாட்ஜிபிடி உதவியுடன் கட்டுரைகளை எழுதினால், அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடங்கியது புதிய ஆட்டம்: கூகுளுக்கு இது சவாலான காலகட்டம். கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தின் முகமாக இருந்துவந்த கூகுளின் இடத்தைக் கைப்பற்றத் தொடங்கி இருக்கிறது சாட்ஜிபிடி. தன்னை பலப்படுத்திக்கொள்ள சாட்ஜிபிடி போன்று ‘பார்டு’ (Bard) என்ற மென்பொருளை கூகுள் உருவாக்கிவருகிறது.
இன்னொருபுறம், சாட்ஜிபிடியின் வருகையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கூகுளின் இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் மைக்ரோசாஃப்ட் இறங்கியுள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் மைக்ரோசாஃப்ட் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் 11 பில்லியன் டாலர் முதலீடு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் தனது பிங் (Bing) தேடுபொறியில் சாட்ஜிபிடி வசதியை இணைத்துள்ளது.
இவைதவிர, பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சாட்ஜிபிடி போன்ற மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஒட்டுமொத்தத்தில், நம்முடைய இணையப் பயன்பாடு அடுத்தக் கட்டத்துக்கு நகர இருக்கிறது.
இறுதியாக… மேரி ஷெல்லியின், ‘பிராங்கென்ஸ்டைன்’ நாவலில், வெவ்வேறு மனிதர்களின் பாகங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மனிதன், எப்படி இறுதியில் தன்னைப் படைத்த மனிதனுக்கு எதிராக திரும்பினானோ, அதுபோலவே சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் சிந்தனைத் திறனை, படைப்புத் திறனை அழிக்கக்கூடும் என்ற கூற்று எளிதில் மறுக்க முடியாததாக உள்ளது.
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago