இந்திய கிரிக்கெட்டில் இன்று (24.02.2010): ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்

By செய்திப்பிரிவு

இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் 200 ரன்களைக் கடப்பது என்பது பாராட்டுக்குரியதுதான் என்றாலும் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம் அல்ல. இதுவரை பத்து பேர் 50 ஓவர் போட்டிகளில் 20 ரன்களைக் கடந்துள்ளனர். அதில் பாகிஸ்தானின் ஃபாஹர் ஸமான், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகிய இருவரைத் தவிர மீதி அனைவரும் இந்தியர்கள். தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இது இந்தியர்களுக்கு பெருமைக்குரிய விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை.


மறுபுறம் இரட்டை சதங்களை அடித்தவர்களில் இந்தியர்களே மிக அதிகம் என்பதும் அவர்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஆடுகளங்களில் மட்டுமே அடித்திருக்கிறார்கள் என்பதும் கிரிக்கெட் போட்டிகளும் இந்திய ஆடுகளங்களும் இந்திய மட்டையாளர்கள் அதிக ரன் குவிப்புக்கும் சாதகமாக மாற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. 2008இல் தொடங்கப்பட்ட ஐபில் உள்ளிட்ட லீக் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு முன்னெப்போதையும்விட பல மடங்கு அதிமாக வணிகமயபடுத்தியிருப்பதாகவும் அதன் தாக்கம் சர்வதேச கிரிக்கெட்டிலும் எதிரொலிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் உணரத் தொடங்கிவிட்டனர்.

முதல் இரட்டை சதம்

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை அடித்தவரும் ஒரு இந்தியர்தான் என்பது இந்தியர்களுக்கு மிகப் பெரிய பெருமிதத்தைத் தேடிக்கொடுத்த விஷயம். கிரிக்கெட் உலகையே வியக்க வைத்த அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் சாதனைகளுக்குப் புதியவர் அல்ல. கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகளில் விளையாடியவர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை அவர் அதற்கு முன்பே படைத்துவிட்டிருந்தார். ஆனாலும் ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித்தது அவருடைய சாதனைகளில் முத்தாய்ப்பானதாக அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பலர் 300களையும் 200களையும் அடித்துள்ளனர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே வீரர் 200 ரன்கள் அடிப்பது என்பது அதுவரை சாத்தியமற்றதாகவே கருதப்பட்டுவந்தது. 1997இல் சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்திருந்ததே நீண்டாகலத்துக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. சச்சினின் அதிகபட்ச ஸ்கோர் 1999இல் ராஜ்கோட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் அடித்த 186 ஆக இருந்தது. 2009ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சார்லஸ் கோவெண்ட்ரி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 194 ரன்களை அடித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை என்பதால் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த பெருமை அவரைச் சென்றடைந்தது. அடுத்த ஆண்டில் சச்சின், கோவெண்ட்ரியின் சாதனையை முறியடித்ததோடு ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் என்னும் சாதனையையும் நிகழ்த்திக் காண்பித்தார். அப்போது சச்சினின் வயது 36 என்பது இந்தச் சாதனையைப் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியது.

அசாதாரண சாதனை

இத்தனைக்கும் சச்சின் இந்தச் சாதனையை மிகச் சாதாரணமான போட்டியிலோ வலுவற்ற அணிக்கு எதிராகவோ நிகழ்த்திவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு தென் ஆப்ரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தது. முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்கிற கணக்கில் டிராவில் முடிந்திருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்தது.

குவாலியரில் நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்றிருந்த இந்திய அணி மட்டைவீச்சைத் தேர்ந்தெடுத்தது. டெய்ல் ஸ்டெய்ன், பார்னெல் உள்ளிட்ட திறமைமிக்க வேகப்பந்துவீச்சாளர்களையும் ஜாக்கஸ் காலிஸ் போன்ற வலுவான ஆல்ரவுண்டர்களையும் ஏ.பி.டிவிலியர்ஸ் போன்ற உலகத் தரமான மட்டையாளர்களையும் உள்ளடக்கிய அணியாக தென் ஆப்ரிக்க களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக விரேந்தர் சேவாக்குடன் களமிறங்கினார் சச்சின். சேவாக் 9 ரன்களில் அவுட்டாகிவிட சச்சினும் தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். 79 ரன்கள் அடித்திருந்த நிலையில் கார்த்திக் அவுட்டாகிட அடுத்துவந்த யூசுப் பதான் தன் பங்குக்கு 36 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார். அடுத்ததாகக் களமிறங்கிய கேப்டன் எம்.எஸ்.தோனி அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். மறுபுறம் சச்சின் ஃபோர்கள், சிக்ஸர்கள், டபுள்கள், சிங்கில்கள் என அனைத்து திசைகளையும் நோக்கிப் பந்துகளை அனுப்பிக் கொண்டிருந்தார். 150 ரன்களைக் கடந்த பிறகு மட்டுமே சற்றுத் தடுமாறினார். கால் நரம்புகளில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனாலும் பை-ரன்னர் வைத்துக்கொள்ள மறுத்தார். தொடக்க ஓவர்களில் ஓடிய அதே வேகத்தில் 150 ரன்களைக் கடந்த பிறகும் ஓடினார். 46ஆவது ஓவரில் காலக்ளை நோக்கி வீசப்பட்ட பந்தை ஃப்ளிக் செய்து அது ஷார்ட் ஃபைன் லெக்கைத் தாண்டிச் செல்ல, 194 ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தபோது சச்சின் அதைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. விக்கெட் கீப்பர் மார்க் பெளச்சர் கைகுலுக்கி வாழ்த்தியபோது புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் அதைவிட பெரிய சாதனை நிகழ்த்தப் போகிறோம் என்று அவருடைய மனதுக்குத் தெரிந்திருந்தது.

கடைசி ஓவரில் நனவான கனவு

கடைசி ஓவரில் ஒட்டுமொத்த இந்தியாவும் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தது. சச்சின் 200அடித்துவிட வேண்டும் என்று அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். அனைத்து மதங்களைச் சேர்ந்த இறை நம்பிக்கையாளர்களும் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்தியர்களின் கனவு நனவானது. சச்சின் 200 ரன்கள் என்னும் மந்திர எண்ணைக் கடந்தார். அதற்குள் 25 ஃபோர்களையும் மூன்று சிக்ஸர்களையும அடித்திருந்தார். அதன் மூலம் ஒரு ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச பவுண்டரிகள் என்னும் சாதனையையும் படைத்தார். ஹெல்மெட்டைக் கழட்டி ரசிகர்களை நோக்கி மட்டையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்து இறைவனுக்கு நன்றி தெரிவித்து தன் வழக்கமான கொண்டாட்டச் செயல்களை 200 அடித்த பிறகே நிகழ்த்தினார் சச்சின். மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆரவாரத்தில் மூழ்கியது. களத்தில் அவருடன் இருக்கும் பெருமையைப் பெற்ற தோனி மட்டுமல்லாமல் தென் ஆப்ரிக்க வீரர்களும் சச்சினுக்குக் கைகொடுத்து பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். நெகிச்சியில் ஆழ்ந்தனர்.

இந்திய அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் 401 . மிகக் கடினமான இலக்குடன் மட்டைவீச்சுக்குக் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிவிலியர்ஸ் சதம் (114) அடித்தார். இந்தப் போட்டியோடு அந்த ஒருநாள் தொடரையும் இந்தியா வென்றது.

இந்தப் போட்டியில் சச்சின் நிகழ்த்திய சாதனைகள் பிற்காலத்தில் இந்திய வீரர்களாலேயே முறியடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் அப்போது சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயத்தை சச்சின் சாதித்துக் காண்பித்ததும் சச்சின் இந்தச் சாதனையை நிகழ்த்திய காலகட்டமும் அப்போது அவருடைய வயதும் சச்சின் அடித்த 200ஐ என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கிவிட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE