ஓடிடி திரை அலசல்: தி மெனு - ஓர் ஆடம்பர விருந்தும் விபரீத அனுபவமும் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!

By முகமது ஹுசைன்

பணம் படைத்த சிலரின் ஆடம்பர மோகத்தினால், படைப்பின் உவகையை இழக்கும் ஓர் உன்னத சமையல் கலைஞரின் ருத்ரதாண்டவமே ’தி மெனு'. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கும் இந்தத் திரைப்படம், ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்களின் அர்த்தமற்ற பகட்டு வாழ்க்கையைப் பகடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. முக்கியமாக, அந்தப் பகடியின் வழியே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு பின்னுள்ள நுண்ணிய அரசியலையும் மிக அழுத்தமாக இது பதிவு செய்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி ஒரு உணவகத்துக்குள் மட்டுமே நிகழ்கிறது. இருப்பினும், அது தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வோ சலிப்போ இன்றி விறுவிறுப்புடன் செல்கிறது. ரெய்ஸ், வில் டிரேஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருக்கும் திரைக்கதையின் நேர்த்தியால் சாத்தியப்பட்டு இருக்கும் அம்சம் இது.

உணவு அனுபவம்

டைலர், மார்கோட் எனும் இளம் ஜோடி விரைவில் வரவிருக்கும் ஒரு தனியார் கப்பலுக்குக் காத்திருப்பதாக இந்தத் திரைப்படம் தொடங்குகிறது. அவர்கள் ஓர் அசாதாரண உணவு அனுபவத்துக்காகத் தொலைதூர தீவில் இருக்கும் ஆடம்பர உணவகத்துக்குச் செல்ல இருக்கிறார்கள். அங்கே ஓர் இரவு உணவுக்கான கட்டணம் 1,250 அமெரிக்க டாலர்கள்; அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலே. இந்தத் தொகையை முதன்முதலில் கேட்டவுடன் மார்கோட் அதிர்ந்துபோகிறார்; ஓர் இரவில் அவ்வளவு ரூபாய்க்கு அப்படி என்ன சாப்பிட முடியும் என்று டைலரிடம் இயல்பாகக் கேட்கிறார். இந்த மதிப்பு உணவுக்கானது அல்ல; அங்கே கிடைக்கப்போகும் அனுபவத்துக்கானது என்று டைலர் கூறுகிறார். உணவுக்குச் சுவைதானே முக்கியம்; அதில் அனுபவத்துக்கு என்ன அவசியம் என்பது போல் மார்கோட் பார்க்கிறார்.

மூடப்படும் கதவு

சற்று நேரத்தில் அந்த உணவகத்துக்குச் செல்லவிருக்கும் மற்ற விருந்தினர்கள் வந்து சேர்கிறார்கள். கப்பல் வந்ததும் அனைவரும் உற்சாகத்துடன் ஏறுகிறார்கள். பயணம் தொடங்கியதும் அவர்களுக்கு வரவேற்பு உணவு அளிக்கப்படுகிறது; மிகச் சாதாரண உணவு அவர்களுக்கு ஆடம்பரமாக அளிக்கப்படுகிறது. அந்த உணவை மார்கோட் தவிர அனைவரும் சிலாகித்துச் சாப்பிடுகின்றனர்.

ஆள் ஆரவாரமற்ற அந்தத் தீவில் ஸ்லோவிக்கின் வீடும் உணவகமும் மட்டுமே இருக்கின்றன. விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பின்போது, டைலருடன் வரவிருந்த மற்றொரு பெண்ணுக்கு மாற்றாகவே டைலர் தன்னை அழைத்து வந்திருக்கிறார் என்பதை மார்கோட் தெரிந்துகொள்கிறார். டைலர் அதற்கு மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அந்தக் கணத்தின் மகிழ்ச்சியில் மார்கோட் மூழ்கித் திளைக்கிறார்.

அந்த உணவகத்துக்குள் நுழைந்தவுடன் அதன் கதவு மூடப்படுகிறது. அந்த உணவகத்தில் கிடைக்கப்போகும் அனுபவம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர். ஆனால், அது விரும்பத் தகாத ஒன்றாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது; நமக்கும்தான்.

நேர்த்தியான தொழிற்சாலை

உணவகத்தின் சமையலறை ஒரு நேர்த்தியான தொழிற்சாலையைப் போல் இயங்குகிறது. சமையல் பணியாளர்கள் ரோபோட்டுகளைப் போல் துல்லியமாகப் பணியாற்றுகிறார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அந்த மொத்த உணவகமும் ராணுவ கட்டுபாடுட்டில் இயங்கும் ஓர் அமைப்பைப் போல் செயல்படுகிறது. அந்த அமைப்பின் தலைவராக ஜூலியன் ஸ்லோவிக் இருக்கிறார். ஜூலியன் அளிக்கும் உத்தரவுகளை அங்குள்ள பணியாளர்கள் கேள்வி எதுவுமின்றி நிறைவேற்றுகிறார்கள். அவருக்காக உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஜூலியனின் பகடி

விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு முன்னர், ஒவ்வொரு முறையும் அந்த உணவு குறித்து ஜூலியன் சிற்றுரை வழங்குகிறார். இங்கே உங்களுக்கு அளிக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கானது அல்ல; அதற்கும் மேலானது; மேம்பட்ட அனுபவத்துக்கானது. எனவே, இந்த உணவை நீங்கள் சாப்பிடாதீர்கள்; ரசித்து, அனுபவியுங்கள் என்பதே அவர் ஆற்றும் முதல் உரை. அந்த உரை வெளிபார்வைக்கு அறிவுபூர்வமாக இருக்கிறது. இருப்பினும், அந்த உரையின் மூலம் ஜூலியன் விருந்தினர்களைப் பகடிக்கு உள்ளாக்குகிறார் என்பதே உண்மை. இந்த உண்மையை விருந்தினர்கள் உணர மறுக்கிறார்கள்; அல்லது ஏற்றுக்கொள்ளும் அறிவை அவர்களுடைய ஆடம்பரபோதை தடுக்கிறது. மார்கோட் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

ரொட்டியின் வரலாற்றை விவரிக்கும் ஜூலியன், "ரொட்டி மிகப் பழமையான உணவு; முக்கியமாக, அது சாதாரண மக்களின் அன்றாட உணவு; நீங்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்த மனிதர்கள் என்பதால், நான் உங்களுக்கு ரொட்டி வழங்கப் போவதில்லை" என்று கூறி, வெறும் தொடு உணவு வகைகளை (Side dish) மட்டும் விருந்தினர்களுக்கு அளிக்கிறார். விருந்தினர்கள் வியப்பில் மூழ்குகிறார்கள்; டைலர் ஒரு படி மேலே சென்று ஆனந்தக் கண்ணீரை வடித்த படி, தொடு உணவுகளை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார். மார்கோட் மட்டுமே அந்த அபத்தத்தை ஓர் அவமானமாகக் கருதுகிறார்.

ஆபத்தை உணரும் தருணம்

மதுபோதையில் தன்னுடைய தாயைக் கடுமையாகத் தாக்கிய தந்தையைப் பற்றி உணர்ச்சி மேலிட ஜூலியன் கூறுகிறார். தந்தையின் தொடையில் கத்தியால் குத்தி தாயைக் காப்பாற்றியது பற்றி ஜூலியன் விவரிக்கும்போது விருந்தினர்கள் சற்று அதிர்ந்துபோகிறார்கள். சிறிதுநேர மௌனத்துக்குப் பின்னர், அப்போது எனக்குப் பக்குவமும் அனுபவமும் இல்லை; இருந்திருந்தால், தொடைக்குப் பதிலாக அவருடைய கழுத்தில் குத்தியிருப்பேன் என்று இறுக்கத்துடன் ஜூலியன் கூறுகிறார். எத்தகைய ஆபத்தில் இருக்கிறோம் என்பது விருந்தினர்கள் உணரத்தொடங்கும் தருணம் அது.

அங்கே வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவரும் ஜூலியன் ஸ்லோவிக்கால் மிகுந்த பரிசீலனைக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் உணவின் சுவையைவிட, யாருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவ அனுபவமே முக்கியம். ஜூலியனின் தந்தைக்கு இருந்தது மதுபோதை என்றால், இவர்களுக்கு இருப்பது ஆடம்பர போதை. அந்தப் போதையில் இவர்கள் அனைவரும் தனித்துவம், தனித்துவம் எனும் தேடலின் பெயரில் ஜூலியனின் சமையல் திறனின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள்; சமையலின் மீதான ஜூலியனின் ஆர்வத்தைச் சிதைத்துக்கொண்டு இருப்பவர்கள்.

விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான உணவை அளிக்க வேண்டும், எந்த மாதிரியான அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதை ஜூலியன் ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தார். இந்தத் திட்டமிடலுக்கு, எதிர்பாராமல் வந்திருந்த மார்கோட்டின் இருப்பு இடையூறாக இருந்தது. முக்கியமாக, அவர் ஒரு சாதாரண பெண்மணியாக இருந்தார். அவரிடம் புகழ்போதையோ, ஆடம்பரமோகமோ பகட்டுமயக்கமோ இருக்கவில்லை. அதாவது, ஜூலியனின் பகடியைப் புரிந்துகொள்ளும் சாதாரண மனநிலையில் மார்கோட் இருந்தார்.

வாழ்வதற்கு எது தேவை?

இறுதியில், எது சாதாரண மனநிலை என்று கருதப்படுகிறதோ, அதுவே மார்கோட்டைக் காப்பாற்றுகிறது; எது மேன்மையான மனநிலை என்று கருதப்பட்டதோ, அதுவே விருந்தினர்களைக் காப்பாற்றத் தவறுகிறது. தாமே சிறந்தவர் என்று கருதுபவர்களுக்கு அவர்களை விடச் சிறந்தவர் என்று யார் இருக்க முடியும்? தன்னுடைய சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு, சிறப்புமிக்க அவர்களையே உணவாகச் சமைக்கிறார்; தான் உறுதியளித்தபடி எவருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அவர்களுக்கு ஜுலியன் வழங்குகிறார். எப்போதும் ஒரு சமையலை நெருப்பே முழுமையாக்கும் என்று சொல்லும் ஜூலியன், அந்த நெருப்பில் அவர்களுடன் சேர்ந்து தானும் உணவாகத் தொடங்குகிறார். நெருப்பில் வெடித்துச் சிதறும் உணவகத்தைக் கடலில் தத்தளித்து நிற்கும் கப்பலிருந்து மார்கோட் பார்க்கிறார். கையிலிருக்கும் ரொட்டியைச் சாப்பிடும் அவர் அதன் சுவையில் தன்னை இழக்கிறார் என்பதுடன் படம் முடிகிறது.

எல்லா வகையிலும், எல்லா சூழலிலும் உயர்ந்தவர் என்று எவரும் இருக்க முடியாது என்பதே நமது வாழ்க்கையின் யதார்த்தம். இருப்பினும், பணமும் அதிகாரமும் நிரம்பப்பெற்ற சிலருக்கு இந்த எளிய உண்மை புரிவதில்லை. பகட்டு மனோபாவத்தின் உச்சத்தில் மிதக்கும் இவர்கள் இறுதியில், இல்லாத ஒன்றை இருப்பதாக நிலைநிறுத்தும் முயற்சியில் தங்களையே தொலைக்கிறார்கள். இயக்குநர் மார்க் மைலோட் இதையே இந்தத் திரைப்படத்தில் நமக்கு நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்